அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் ஆகியிருக்கிறது. இது அதிமுக கட்சிக்குள்ளும் தமிழ்நாடு அரசியலிலும் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் அளித்த பேட்டியின் சுருக்கம் இங்கே…
இந்த தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கட்சிக்குள்ளும் கட்சி நிர்வாகிகள் மட்டத்திலும் செல்வாக்கு இல்லாமல் இருந்தாலும் அவருக்கு தேவையானவை டில்லி மூலமாக நடந்துகொண்டே இருந்தது. இந்தமுறை அந்த எல்லா வழிகளையும் எடப்பாடி பழனிசாமி அடைக்கத் தொடங்கிவிட்டார். எனவே, தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான்.
எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி, ஓ. பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சி – உங்கள் பார்வையில் இவை இரண்டுக்குமான காரணங்கள் என்ன?
எடப்பாடி பழனிசாமியின் கவனம் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்குள் நிர்வாகிகளை வென்றெடுப்பதில் குவிந்திருந்தது. கட்சியில் முதன்மை பதவி ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்தாலும் ஆட்சியில் முதன்மை பதவி எடப்பாடி பழனிசாமியிடமே இருந்தது. எனவே, அதனை பயன்படுத்தி, நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இருக்கும்படி அவர் பார்த்துக்கொண்டார். இதனால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டியிலும் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் போட்டியிலும் அவர் வெற்றிபெற்றார்.
அதேநேரம், ஓ. பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வென்றெடுப்பது தொடர்பாக எதுவுமே செய்யவில்லை. முழுக்க முழுக்க பாஜகவுடன் ‘அட்ஜெஸ்ட்’ செய்து போவதில், அதன்மூலமாக பலன்கள் பெறுவதில்தான் அவருடைய கவனங்கள் குவிக்கப்பட்டிருந்தது. ஆட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்ததால், நிர்வாகிகளின் தேவைகளை நிறைவேற்றும் அதிகாரம் ஓபிஎஸ்ஸுக்கு இல்லை என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்கு முன்பே, ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அடுத்த தலைமை யார் என்ற கேள்வி தொடங்கிய புள்ளியில் இருந்து ஒவ்வொரு கட்டத்திலும் ஓ. பன்னீர்செல்வம் செல்வாக்கு குறைந்தவராகவே இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அவருடைய தர்மயுத்தம் கூட கட்சிக்கு வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டுதான் நடந்தது.
ஓ. பன்னீர்செல்வம் அதிகமாக பாஜகவை சார்ந்திருந்ததும் அவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்திருக்குமா?
தேர்தல் கூட்டணிக்காக பாஜகவை சார்ந்திருப்பது வேறு, அதிமுக கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு பாஜகவை சார்ந்திருப்பது வேறு. இதில் இரண்டாம் நிலைக்கு கட்சியை கொண்டு செல்கிறார் என்பதுதான் அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் ஓ. பன்னீர்செல்வம் மேல் வருத்தப்படுவதற்கான காரணம். பொன்னையன் பேச்சும் எடப்பாடி பழனிசாமியின் கடைசி உறுதியான நிலையும் அதைத்தான் காட்டுகிறது.
இனி ஓ. பன்னீர்செல்வத்தின் நிலை என்னவாகும்?
அவருக்கு இன்னும் ஒரு நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. ஆனால், இதற்கான முயற்சியில் சுயமாக இறங்கும் நிலையில் ஓபிஎஸ் இல்லை; இது தொடர்பாக பாஜக என்ன செய்யப்போகிறது என்று பார்க்கவேண்டும். மிக சமீபத்தில்தான் மகராஷ்டிராவில் கட்சி மற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று பார்த்து அதனடிப்படையில் சிவசேனா கட்சி சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. அதே அனுகுமுறையை அதிமுக விவகாரத்திலும் எடுத்தார்கள் என்றால் அதன் முடிவும் இயல்பாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகத்தான் இருக்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதிமுக சிக்கல் இதனுடன் முடியுமா அல்லது ஓ.பன்னீர்செல்வம் இதை வளர்த்தெடுப்பாரா?
ஓ. பன்னீர்செல்வம் இத்துடன் விட்டுவிட்டார் என்றால் அவரும் உறுதியாக வேறு வேலைகளை செய்யலாம். அவருடைய பாதையை தீர்மானிக்கலாம். சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து ஒரு கட்சியை உருவாக்கி அல்லது தினகரனின் ‘அமமுக’ கட்சியை ஏற்றுக்கொண்டு செயல்படுவது ஒரு பாதை. ஆனால் அதற்கு, சூழல் தனக்கு எதிராக போய்விட்டது என்பதை முழுமையாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; பாஜகவும் கிட்டதட்ட தன்னை கைகழுவி இருக்கிறது என்ற உணர்வு அவருக்கு வரவேண்டும். அது அவ்வளவு விரைவில் நடக்குமா என்று தெரியவில்லை. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பவர்கள் இனிமேலும் அவரை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் எதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஏற்படுத்தாது என்றுதான் நினைக்கிறேன். திமுகதான் பிரதான பாத்திரம் வகிக்கும் வகையில் இன்றைய தமிழ்நாடு அரசியல் சூழல் இருக்கிறது. திமுக + அதன் கூட்டணி கட்சிகள் ஒருபுறம், அதிமுக + அதன் கூட்டணி கட்சிகள் இன்னொரு புறம் என்னும் நிலைதான் தொடர்ந்து நீடிக்கும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?
ஈரோடு தேர்தல் பந்தயத்தில் திமுகதான் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடந்தால் வெற்றி எந்தப் பக்கம் என்பதில் இந்த தீர்ப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றுதான் நினைக்கிறேன்.
‘இன்னொரு கட்சியை வளர்க்கவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்’ என்று சமீபத்தில் திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களுடன் பேசும்போது எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதேநேரம் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்றும் கூறியிருந்தார். இந்த தீர்ப்புக்கு பிறகு பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறை மாறுமா? அதிமுக தனித்து இயங்க இந்த தீர்ப்பு வழிவகுக்குமா?
தனித்து இயங்கதான் அவர்கள் முயற்சி செய்வார்கள். அதனடிப்படையில்தான் அவர்கள் உறுதியாக சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். பாஜக கூட்டணி காரணமாக சிறுபான்மையினர் வாக்குகளை இழக்கிறோம் என்ற முடிவும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதேநேரம் வாக்குகளுக்காக கூட்டணி இல்லை என்பதுபோல் வெளியே காண்பித்துக்கொண்டு உள்ளே கூட்டணியில் இருந்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், புரிந்துகொள்வார்கள், நிராகரிப்பார்கள் என்பதால் அதுபோன்ற முயற்சிக்குள்ளும் அவர்கள் போகமாட்டார்கள். ஆனால், ஒன்றிய அரசில் பாஜக இருப்பது வரைக்கும் அவர்களுடன் கூட்டணியில் இருப்பதுதான் நன்மை தரும் என்ற நினைப்பில்தான் அதிமுக தலைவர்கள் இருப்பது போலுள்ளது. எனவே, கூட்டணியில்தான் இருப்பார்கள், அதனால் ஏற்படும் இழப்புகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அவர்களுக்கு வேறு வழியே இல்லை.
அதிமுக தொண்டர்களை பொறுத்தவரைக்கும் பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில், திமுக கூட்டணிக்கு வெளியே இப்போது பாஜக, பாமக, நாம் தமிழர் என சில கட்சிகள்தான் இருக்கின்றன. இதில் நாம் தமிழர் கட்சி, அதிமுகவுடனோ திமுகவுடனோ கூட்டணி இல்லை என்னும் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். பாமக கூட்டணிக்கு வெளியே சென்றுவிட்டது. எனவே, 3 சதவிகித வாக்குகளுடன் எஞ்சியிருக்கும் பெரிய கட்சி பாஜக மட்டும்தான். எனவே, 2004இல் வேறு கட்சிகளே இல்லாத நிலையில் ஜெயலலிதா எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டாரோ, அதுபோல் இப்போதும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவிர வேறு நிலை இல்லை என்பதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதேநேரம், பாஜக சொல்படிதான் அதிமுக தலைவர்கள் நடக்கிறார்கள் என்ற நிலை நீடித்தால் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பாஜக, அதிமுகவை அனுகுவதில் மாற்றம் ஏற்படுமா?
மாற்றம் இருக்கும். முன்பு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா மூவரையும் காட்டி, அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள், நீங்களும் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். இனி அதற்கு வாய்ப்பு இருக்காது. எனவே, எடப்பாடி பழனிசாமியை பாஜக இனி கன்னியமாக நடத்தும்.
திமுகவுக்கு எதிராக பலம்பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தீர்ப்பு உதவுமா?
திமுகவை உறுதியாக எதிர்த்து நிற்பவர்கள் நாங்கள்தான் என்று சொல்லவும், திமுக எதிர்ப்பு சக்திகளையும் வாக்குகளையும் அணி திரட்டவும் சாதகமான ஒரு வாய்ப்பை இந்த தீர்ப்பு அவருக்கு கொடுக்கும்.
இறுதியாக, தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் களம் குறித்த உங்கள் பார்வை?
கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கட்சிக்குள் உள்ள சிக்கல்கள்தான் தமிழ்நாட்டின் முக்கிய முரண்களாக அரசியல் களத்தில் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வந்தது. அதற்கு இந்த தீர்ப்பு முடிவு கட்டும். எடப்பாடி பழனிசாமிகூட, ‘ஊடகங்கள் எங்களால் பலன் பெற்றன; எங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தன. இனி தமிழ்நாட்டு மக்களுக்கு பலனளிக்கக்கூடிய, தேவையான விஷயங்களை பேசுங்கள். எங்களை விட்டுவிடுங்கள்’ என்று கூறியுள்ளார். அப்படி நடந்தால் தமிழ்நாடு அரசியல் களத்தில் பயனுள்ள உரையாடல்களுக்கு வாய்ப்பு உள்ளது.