இந்தியாவின் நம்பர் ஒன் பிரபலம் என்ற பெருமையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்திருக்கிறார் விராட் கோலி. விராட் கோலியின் சந்தை மதிப்பு 176 மில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. 2021ல் அவரது மதிப்பு 185 மில்லியன் டாலராக இருந்தது. ஒரு மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 8 கோடியே 22 லட்ச ரூபாய். 176 மில்லியன் டாலர் என்றால் சுமார் 1400 கோடி ரூபாய் வருகிறது. அம்மாடி! இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டிருப்பது க்ரோல் (Kroll). இந்த நிறுவனம் ஆண்டுதோறும் விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருவாயை வைத்து அவர்களுக்கு ரேட்டிங் வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில் க்ரோல் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில்தான் ரன்வீர் சிங்கிடம் கோலி தோற்றுப் போயிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை இழந்தது, பேட்டிங்கில் சறுக்கியது போன்ற பல காரணங்களால் அவரது பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டில் சரிந்ததே இதற்கு காரணம். கோலியின் இடத்தில் இப்போது இந்தியாவின் நம்பர் 1 பிரபலம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்.
க்ரோல் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி 2022-ல் ரன்வீர் சிங்கின் சந்தை மதிப்பு 181.7 மில்லியன் டாலர்கள். 2-வது இடத்தில் இருக்கும் விராட் கோலியின் சந்தை மதிப்பு 176.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கோலியைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் இருந்தே அவரது சந்தை மதிப்பு தொடர்ந்து இறங்கித்தான் வருகிறது. 2020-ல் 237 மில்லியன் டாலராக இருந்த அவரது சந்தை மதிப்பு 2021-ல் 185.7 மில்லியன் டாலராக இருந்தது. அது இப்போது மேலும் சரிந்து இப்போது 176.9 மில்லியன் டாலராக குறைந்திருக்கிறது.
இந்த பிரபலங்களின் பட்டியலில் கடந்த ஆண்டில் இருந்த அதே 3-வது இடத்தில் இந்த ஆண்டும் தொடர்கிறார் அக்ஷய் குமார். 2022-ம் ஆண்டில் அவரது சந்தை மதிப்பு 153.6 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இந்த பட்டியலில் ஆலியா பட் நான்காவது இடத்திலும், தீபிகா படுகோன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி சில ஆண்டுகள் ஆனாலும் தோனியின் மதிப்பு இன்னும் வெகுவாக குறையவில்லை. கடந்த ஆண்டில் 80 மில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்புடன் இந்த பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறார் தோனி.
இந்த பட்டியலில் உள்ள முதல் 25 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகையான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முதல் 25 பேரைக் கொண்ட பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
தோனி, விராட் கோலியைத் தவிர விளையாட்டுத் துறையைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து ஆகியோருக்கும் இந்த டாப் 25 பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய க்ரோல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவிரல் ஜெயின், “தென்னிந்திய படங்கள் கடந்த ஆண்டில் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளதாலும், ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விளம்பரதாரர்கள் மத்தியில் மவுசு கூடியதாலும் இந்த பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன” என்று சொல்லியிருக்கிறார்.