ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று 2 தங்கப்பதக்கங்களை வென்றது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டியின் இன்று காலையில் இந்திய ஆடவர் அணி 10 மீட்டர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றது. திவ்யானேஷ் சிங் பன்வார், ருத்ராக்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி 1893.7 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதுடன் இப்பிரிவில் அதிக புள்ளிகளைக் குவித்து புதிய உலக சாதனையையும் இந்திய ஆடவர் அணி கைப்பற்றியது. இந்த அணியில் ஒருவராக இருந்த ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இன்று இந்திய அணி கைப்பற்றிய 2-வது தங்கப் பதக்கம் மகளிர் கிரிக்கெட்டில் கிடைத்தது. இப்பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களைக் குவித்தது. இந்திய அணியில் 2-வது விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனாவும், ஜெமிமா ரோட்ரிக்ஸும் இணைந்து 73 ரன்களைக் குவித்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களையும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களையும் குவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணியால் 20 ஓவர்களில் 97 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இப்போட்டியில் இந்தியாவுக்காக டைட்டஸ் சாது 3 விக்கெட்களையும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்களையும் எடுத்தனர். 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் இந்திய அணி பெரும் முதலாவது தங்கப் பதக்கமாகும் இது.
2 வெண்கலங்கள்
25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் அணி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது
ஆடவர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது; 6:08.61 என்ற நேரதில் இலக்கை எட்டி இந்தியா வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.
டென்னிஸ்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ருதுஜா போஸ்லே, கஜகஸ்தான் வீராங்கனையை 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்
ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் – சாகேத் மைனேனி ஜோடி, இந்தோனேசியாவின் டேவிட் சுசாண்டோ – இக்னேஷியஸ் ஜோடியை 6-3,6-2 என்ற செட்கணக்கில் வென்றது.
ரோஹன் போபன்னா – யுகி பாம்ப்ரி ஜோடி, உஸ்பெஸ்கிஸ்தானின் செர்கே போமின் மற்றும் குமோயுன் சுல்தானோவ் ஜோடியிடம் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
கூடைப்பந்து
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், இந்தியா 20-16 என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவை வென்றது. இப்போட்டியில் இந்திய வீர்ரான சஹாஜி பிரதாப், 10 புள்ளிகளை அணிக்கு ஈட்டிக் கொடுத்தார். ஆண்கள் பிரிவில் வெற்றியை ருசித்த அதே நேரத்தில் பெண்களுக்கான பிரிவில் நடந்த போட்டியில் இந்தியாவை உஸ்பெகிஸ்தான் அணி வென்றது.