No menu items!

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா நம்பும் வீராங்கனைகள்

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா நம்பும் வீராங்கனைகள்

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தருவார்கள் என்று இந்தியா நம்பியிருக்கும் சில வீராங்கனைகளைப் பார்ப்போம்…

நிகாத் செரீன் (குத்துச்சண்டை):

இந்திய குத்துச்சண்டையில் இப்போது மேரி கோமின் காலம் முடிந்து நிகாத் செரீனின் காலம் நடக்கிறது. மேரி கோம் இதுவரை பங்கேற்று வந்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இப்போது நிகாத் செரீன் களம் இறங்குகிறார். இப்பிரிவில் நிகாத் செரீன் நிச்சயம் தங்கத்தை தட்டி வருவார் என்று நம்புகிறார்கள் இந்திய விளையாட்டு ரசிகர்கள். 27 வயதான நிகாத் செரீனுக்கு இதுதான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி. இப்படி அனுபவம் இல்லாத வீராங்கனையாக இருந்தாலும், காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் நிகாத் செரீன் தங்கம் வென்றவர் என்பதால் அவர் மீதான நம்பிக்கை அதிகமாக உள்ளது.

நிகாத் செரீனின் மிகப்பெரிய கனவு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதுதான். இந்த ஆசிய போட்டியில் தங்கம் வென்றால், ஒலிம்பிக்குக்கு தகுதிபெற முடியும் என்பதால் அதற்காக முழு மூச்சாக களம் இறங்குகிறார் செரீன். அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்.

மீராபாய் சானு (பளு தூக்கும் போட்டி)

ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, உலக சாம்பியன் பட்டம் என்று 49 கிலோ எடைப்பிரிவில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துள்ள மீராபாய் சானு, இப்போது ஆசிய போட்டியிலும் தன் சாதனை முத்திரையை குத்தும் முனைப்பில் இருக்கிறார்.

ஆனால் இந்த முறை வெற்றி அத்தனை சாதாரணமாக கிடைக்காது என்கிறார்கள் விளையாட்டு விமர்சகர்கள். இதே பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான ஹோ ஜிஹுயி (Hou Zhihui) மீராபாயுடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மோத தயாராக இருப்பதே இதற்கு காரணம். அவரது சவாலைக் கடந்து மீராபாய் தங்கத்தை அணிந்து வரவேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

மனு பாகர் (துப்பாக்கி சுடும் போட்டி)

மனு பாகருக்கு வயது 21-தான். ஆனால் இந்த வயதுக்குள் ஏகப்பட்ட பதக்கங்களை இந்தியாவுக்காக வாங்கிக் குவித்திருக்கிறார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் உலகக் கோப்பையை வென்றவர், காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பிலும் பட்டம் வென்றிருக்கிறார். அதே வேகத்தில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கத்தை குறிபார்த்துச் சுடுவார் என்கிறார்கள் விளையாட்டு விமர்சகர்கள். உலகக் கோப்பையையே வென்றவர் ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்ல மாட்டாரா என்ன..

ஜோதி சுரேகா வெனாம் (வில்வித்தை)

சமீபத்தில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை அடித்துத் தூக்கியிருக்கிறது இந்தியா. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதி சுரேகா வெனாம். காம்பவுண்ட் ஆர்ச்சரி பிரிவில் அசைக்க முடியாத வீராங்கனையாக இருக்கும் இவர், ஏற்கெனவே 2014 மற்றும் 2018-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இம்முறை தங்கத்தை குறிவைத்து வில்லேற்றி நிற்கிறார்.

ஒற்றையர் மற்றும் குழு போட்டிகளில் இவரிடம் இருந்து தங்கம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.வி.சிந்து (பாட்மிண்டன்)

ஒலிம்பிக் போட்டியிலேயே இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தவர் பி.வி.சிந்து. அதே வேகத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கிறார்கள் இந்திய ரசிகர்கள். ஆனால் இந்த ஆண்டில் அவருக்கு நேரம் சரியில்லை. பல தொடர்களில் முதல் சுற்றிலேயே தோற்றிருக்கிறார். அதனால் அவரை நம்பலாமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆனால் சாதாரண தொடர்களில் ஆடும்போது சொதப்பும் சிந்து, நாட்டுக்காக ஆடும்போதெல்லாம் எழுச்சியுடன் ஆடுவார். அந்த எழுச்சி அவருக்கு பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். அந்த நம்பிக்கையை சிந்து காப்பாரா என்று பார்ப்போம்.

இதைத்தவிர கிரிக்கெட்டிலும் இந்திய வீராங்கனைகளிடம் இருந்து தங்கத்தை எதிர்பார்க்கிறது இந்தியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...