சென்னை தி. நகர் பாண்டிபஜாரில் நடைபெற்ற இந்திய பிரதமர் மோடி ரோடு ஷோவில் ‘’ஆப் கி பார்… சாக்கோ பார்…” என்று பாஜகவினர் முழக்கமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து பாஜகவினரை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். என்ன காரணம்?
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று முன் தினம் 7ஆவது முறையாக அவர் தமிழ்நாடு வந்தார்.
தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடு ஷோ நடைபெறும் இடத்தை வந்தடைந்தார். பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட்டார்.
அப்போது சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடியுடன் பிரசார வாகனத்தில் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால். கனகராஜ் ஆகிய பாஜக வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு கூடிய பா.ஜ.க தொண்டர்கள், “ஆப் கி பார்… சாக்கோ பார்…” என்று முழக்கமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“அப் கி பார்… சார் சௌ பார்” என்று முழக்கமிடும்படி அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. ‘அப் கி பார்…’ என்றால் ‘இந்த முறை’, ‘சார் சௌ பார்’ என்றால் ‘நானூறுக்கு மேல்’. ”இந்த முறை…”, “நானூறுக்கு மேல்” என்றுதான் அவர்கள் முழுக்கமிட்டிருக்க வேண்டும்.