No menu items!

அண்ணாமலைக்கு எதிராக கமல்ஹாசன் போட்டி – மிஸ் ரகசியா

அண்ணாமலைக்கு எதிராக கமல்ஹாசன் போட்டி – மிஸ் ரகசியா

ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பேசும் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“நாடாளுமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக தமிழகம் முழுக்க கமல் வலம்வருவார் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அதற்கான முன்னோட்டம்தான் இந்த சந்திப்பு.”

“கமல் காங்கிரஸ் கட்சியிடம் மட்டும்தானே நெருக்கம் காட்டுகிறார். திமுக அவரை ஏற்றுக்கொள்ளுமா?”

“நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டத்தைக் கூட்டக்கூடிய ஆற்றல் கமலுக்கு இருப்பதாக ஸ்டாலின் நம்புகிறார். கடந்த தேர்தலில் சில தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்ததை திமுக மறக்கவில்லை. முக்கியமாய் கோவை மண்டலத்தில். அதனால் மக்கள் நீதி மய்யத்துக்கு சீட் ஒதுக்க அவர் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக அறிவாலயத்தில் சொல்கிறார்கள்.”

“கோவையில் பாஜகவும் பலமாக இருக்கிறதே?”

”அதிமுகவுடன் சேர்ந்த நிற்பதால் அந்த பலம். அது மட்டுமில்லாமல் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மநீமவும் நிறைய வாக்குகளைப் பிரித்ததால் பாஜகவும் அதிமுகவும் எளிதாக வென்றன. இந்த முறை அப்படி நடந்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் கருதுகிறார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக திமுகவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அது உண்மையாக இருந்தால் அண்ணாமலைக்கு எதிராக கமலஹாசனை வேட்பாளராக நிறுத்த திமுக மேலிடம் யோசித்து வருகிறதாம்.”

“சட்டப் பேரவைத் தேர்தல்ல கமலஹாசனை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிச்ச வானதி சீனிவாசன் திமுகவுக்கு வர்ரதா செய்திகள் வருதே?”

“நானும் விசாரிச்சேன். அதில உண்மையில்ல. அவங்க டெல்லி செல்வாக்குல டாப்கியர்ல போய்க்கிட்டு இருக்காங்க. பாஜககாரங்களே கிளப்பிவிட்டதுனு கமலாலயத்திலேயே சொல்றாங்க”

“ஏன்னாம்?”

“அவங்க டெல்லில செல்வாக்கா இருக்கிறது பிடிக்கலையாம். இது மாதிரி ஏதாவது கிளப்பிவிட்டு குழப்பனும்னுதான்

“சரி, கமல் தேர்தலில் போட்டியிடுவாரா? நிறைய படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறாரே?”

“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் வலம் வரலாம் என்று கருதுகிறாராம் கமல். அண்ணாமலைக்குதான் சிக்கல். ஆனால் அண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அவரது இலக்கு தமிழ்நாடு தேர்தல்தான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்”

“ஏன் செண்ட்ரல் மினிஸ்டர் ஆகிற ஆசை இல்லையா?”

“அவர் அத்தனைக்கும் ஆசைப்பட்டுக்கிட்டுதான் இருக்கார். ஆனா கட்சிலதான் எதிர்ப்பு அதிகமாகிட்டே இருக்கு. அதை சமாளிக்கிறதுதான் இப்ப அவருக்கு முதல் வேலை”

“ராகுல் காந்தி – கமல் சந்திப்பின்போது இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்திருக்கிறது. சந்திப்பின் இறுதியில் புலி தண்ணீர் குடிப்பதைப் போன்ற ஒரு படத்தை கமல்ஹாசனுக்கு பரிசாக அளித்திருக்கிறார் ராகுல் காந்தி. அந்தப் படத்தை எடுத்தது பிரியங்கா காந்தியின் மகனாம்.”

“தாத்தா ராஜீவ் காந்தி சிறந்த போட்டோகிராபராச்சே.. அந்த வாசனை பேரனுக்கு இல்லாமல் போகுமா என்ன? டெல்லில வேற என்ன நியூஸ்?”

“தமிழக நிதி அமைச்சர் சென்ற வாரம் டெல்லிக்குச் சென்று விமான போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்தது, ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கனிமொழி கலந்து கொண்டது ஆகிய விஷயங்கள் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம். ‘அமைச்சர் டெல்லிக்கு வரும்போது எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாரா. என்னையும் தன்னுடன் அவர் ஏன் அழைத்துச் செல்லவில்லை. கனிமொழி தனியாக ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் கலந்துகொண்டது ஏன்? எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாரா? எல்லா திமுக எம்பிக்களும் சேர்ந்து கலந்துகொண்டால்தானே திமுகவின் செல்வாக்கு தெரியும். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா?’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாராம் டி.ஆர்.பாலு”

”அவர் என்ன பதில் சொன்னாராம்?”

“அதையெல்லாம் பெரிசு பண்ணாதிங்க. சாதரண விஷயம் இதெல்லாம்னு கடந்து போய்ட்டாராம்”

“உதயநிதியைப் பற்றி புதிதாக ஏதும் தகவல்கள் இருக்கிறதா?”

“பசுமைவழிச் சாலையில் அமைச்சர்கள் குடியிருப்பில் தானும் குடியேறுவது பற்றி யோசித்து வருகிறாராம் உதயநிதி ஸ்டாலின். அத்துடன் இளைஞர் அணியில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளரானது 45 வயதில்தான், முதல்வர் ஸ்டாலின் 60 வயதைக் கடந்த பிறகும் இளைஞரணி பொறுப்பில் இருந்தார் அதுபோல் இப்போதும் சிலருக்கு தளர்வு அளிக்கவேண்டும் என்று உதயநிதியிடம் கட்சியின் தலைவர்கள் சிலர் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இதை ஏற்க உதயநிதி ஸ்டாலின் மறுத்துவிட்டாராம். தற்சமயம் இந்த விஷயம் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. அவரோ, ‘இந்த அணிகளை கண்காணிப்பதற்குத்தான் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் போய்ச் சொல்லுங்கள்’ என்று நழுவி இருக்கிறார்.”

“பாமக பொதுக்குழு பற்றி ஏதும் செய்திகள் இருக்கிறதா?”

“நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை இந்த பொதுக்குழுவில் ராமதாசும், அன்புமணி ராமதாசும் மறைமுகமாக தொண்டர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘ காலையில் டாக்டர் அறிக்கை வெளியிட்டால் மாலையில் அதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். இப்போது அதிமுக நான்கைந்தாக உடைந்து விட்டது. சிலர் வாட்சை காட்டுகிறார்கள். இந்த விளம்பர அரசியல் எல்லாம் நமக்கு வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைத்தான் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கடைசியாக பேசிய ராமதாஸ் விடியலுக்காக காத்திருக்கிறோம் என்று முடித்துள்ளார். விடியல் என்பது திமுகவுக்கு சொந்தமான வார்த்தை. தலைவர்களின் இந்த பேச்சால் மாம்பழச் சின்னக்காரர்கள் தெளிவு பெற்றிருக்கிறார்கள்.”

“பாமகவின் இந்த நிலை குறித்து அதிமுகவின் கருத்து என்ன?”

“பாமகவே கூட்டணிக்கு வந்தாலும், அவர்கள் சகவாசம் வேண்டாம் என்ற முடிவை எடப்பாடியார் எடுத்திருக்கிறாராம். இதுபற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது பாமகவை பொறுத்தவரை டாக்டர் ராமதாஸுக்கு மட்டுமே மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அன்புமணிக்கு குறிப்பிடும்படியான செல்வாக்கு இல்லை அதனால் அவர்களால் எந்த லாபமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...