No menu items!

மொழிப்போர் தியாகிகள் தினம் – இந்தியை தடுத்து நிறுத்திய கதை!

மொழிப்போர் தியாகிகள் தினம் – இந்தியை தடுத்து நிறுத்திய கதை!

இன்று – ஜனவரி 25 – மொழிப் போர் தியாகிகள் தினம். மற்ற தினங்களைப் போல் இது எளிதாக கடந்து போக கூடிய தினமல்ல.

பிறந்த கொஞ்ச காலத்திலயே நாம கத்துக்கிற சில விஷயங்கள்ல ரொம்ப முக்கியமானது ஒண்ணு இருக்கு.

அது நம்ம தாய்மொழி.

அம்மா அப்பாகிட்டருந்து அந்த மொழியைக் கத்துக்கிறோம்.

தாய் மொழிலதான் நம்மளோட முதல் வார்த்தைகள் வருது.
அது மூலம்தான் சிந்திக்கிறோம். உறவுகளை புரிஞ்சிக்கிறோம். உலகத்தை தெரிஞ்சிக்கிறோம்.

காலப் போக்குல நாம வேற பல மொழிகளை கத்துக்கிட்டாலும்,
நம்ம வாழ்க்கைல தாய்மொழிக்கு எப்பவுமே தனியிடம்தான்.
முதலிடம்தான்.

அந்த தாய்மொழியின் முக்கியத்துவத்தை குறைக்கிற அல்லது தடுக்கிற முயற்சிகள் நடைபெறும் போதெல்லாம் மக்கள் கடுமையா எதிர்த்து இருக்காங்க. போராடியிருக்காங்க.

தாய் மொழி தமிழுக்காக நம்ம தமிழ்நாட்டில் தீவிரமான போராட்டங்கள் நடந்திருக்கு. அந்தப் போராட்டங்கள்ல பலர் இறந்திருக்காங்க.

தமிழ்நாட்டுல நடந்த பல அரசியல் சமூக மாற்றங்களுக்கு இந்த போராட்டங்கள்தான் அடித் தளமா இருந்துருக்கு.

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தமிழ் மொழியை தள்ளி வைத்து இந்தியை திணிக்க முயன்ற போது நடந்த போராட்டங்கள்.

எதையுமே மனசுக்குப் பிடிச்சு செய்யும் போது இனிக்கும்.

கட்டாயத்துனால செய்யும் போது கசக்கும்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுதான் அடிப்படையான விஷயம்.
இந்தியாவுல பல மொழிகள் இருக்கிறது. சுமார் 780 மொழிகள் இருக்கின்றது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.

2001 சென்சஸ்படி 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுற மொழி மட்டும் இந்தியாவுல 30 இருக்கு.

இது தவிர 122 மொழிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களால பேசப்படுது.

இதெல்லாம் தவிர சிறு சிறு குழுக்கள் பேசுற மொழிகள் நூத்துக் கணக்குல இருக்கு.

இத்தனை மொழிகள் பேசப்படுற இந்தியாவுல எதை ஆட்சி மொழியா வைக்கிறது?

இந்திய அரசமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்த மொழிகளில் எந்த மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?

இது எப்பவுமே ஒரு பிரச்சனைதான்.

வட இந்திய தலைவர்களுக்கு இந்தியா முழுவதுக்குமான ஒரே மொழியா இந்தியைக் கொண்டுவரணும்னு ஆசை.

சுதந்திரப் போராட்ட காலத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்தி மொழியை இந்தியாவோட பொது மொழியா ஆக்குறதுக்கான முயற்சிகள் நடந்துட்டுதான் இருந்தது. இந்தியாவுக்கான பொது மொழியா இந்தி வந்திருச்சினா ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களுக்கு வசதியா இருக்கும்னு காந்தி, நேரு போன்ற பல வட இந்திய தலைவர்கள் நினைச்சாங்க. இந்தியா முழுவதிலும் இருக்கிற மக்கள்கிட்ட தொடர்பு கொள்றதுக்கு எளிதா இருக்கும் என்பது அவர்கள் கணக்கு.

இந்தி மொழிக்கான பிரச்சாரத்துலயும் இறங்குனாங்க. ஆனால் அந்தப் பிரச்சாரங்களுக்கு தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை, அப்போதே.

1937ல பிரிட்டிஷ் ஆட்சியிருக்கும் போது இந்தியாவுல தேர்தல் நடந்தது. சென்னை மாகாணத்துல ராஜாஜி வெற்றி பெற்று ஜூலை மாசம் முதல்வர் ஆனார்.

முதல்வர் ஆவதற்கு முன்பே அவர் இந்திக்கு ஆதரவான நிலையிலதான் இருந்தார். முதல்வாரன பிறகும் இந்திக்கு ஆதரவாவே பேசி வந்தார்.

இதெல்லாம் தமிழ் ஆர்வலர்களுக்கு கோபத்தை கொடுத்துக்கிட்டே இருந்தது. தங்களோட எதிர்ப்பை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

1938ஆம் வருஷத்து நிதி நிலை அறிக்கைல சென்னை மாகாணத்துல இருக்கிற பள்ளிகள்ல இந்தி கட்டாயப் பாடமா இருக்கும்னு அறிவிச்சார் ராஜாஜி.

இந்த அறிவிப்புதான் தமிழ் நாட்டோட முதல் பெரிய இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்குறதுக்கு காரணமா இருந்தது.

இந்த அறிவிப்பை தமிழகத் தலைவர்கள் கடுமையா எதிர்த்தாங்க. 1938, ஜூன் மாசம் போராட்டங்களை தீவிரமா ஆரம்பிச்சாங்க.

தீவிரமா நடந்த இந்தப் போராட்டங்கள்ல பெரியார், அண்ணா உட்பட பல தலைவர்கள் கலந்துக்கிட்டாங்க. போராட்டங்கள் நடத்திய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டங்க.

தலைவர்களை கைது செஞ்சு சிறைல வச்சிட்டா போராட்டத்தோட தீவிரம் குறைஞ்சுரும்ன்னு அரசு நினைச்சது. ஆனா அப்படி நடக்கல. போராட்டங்கள் தீவிரமானது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.

சிறையில அடைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்கள் நடராசன், தாளமுத்து இரண்டு பேரும் சிறைக் கொடுமை தாங்காம இறந்தார்கள். இந்தி எதிர்ப்பில் முதல் பலியானவர்கள் இந்த இரண்டு பேர்தான். தமிழ்நாட்டுல இப்படி ஒரு பெரும் போராட்டம் நடந்துட்டு இருக்கும் போது உலகப் போர் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவும் இந்தப் போர்ல கலந்துக்கும்னு இங்கிலாந்து சொன்னதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு மாநில காங்கிரஸ் ஆட்சிகள் ராஜினாமா பண்ணாங்க. தமிழ்நாட்டுல ராஜாஜியும் ராஜினாமா செஞ்சார்.

அவருக்கு அடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்த ப்ரிட்டிஷ் வைஸ்ராய் கட்டாய இந்தி கிடையாதுனு அறிவிச்சார். அதனால இந்தி எதிர்ப்பு போராட்டம் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

அப்போதைக்குதான்.

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான அடுத்தப் போராட்டம் இந்தியா சுதந்திரம் அடைஞ்ச பிறகு 1948ல நடந்தது.

அப்போ தமிழ்நாட்டோட முதல்வரா ஓமந்தூர் ராமசாமி இருந்தார். பள்ளிகள்ல இந்தியை கட்டாயப் பாடமா படிக்கணும்னு இவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அப்ப மீண்டும் தமிழகத் தலைவர்கள் ஒண்ணு சேர்ந்து போராட்டங்களை ஆரம்பிச்சாங்க. கறுப்புக் கொடி காட்டுறது, மறியல் நடத்துறதுன பல விதங்கள்ல போராட்டங்கள் நடந்துச்சு.

அதுக்கப்புறம் 1952ல ரயில் நிலைய பெயர் பலகைகள்ல இந்திக்கு முன்னுரிமை கொடுத்து எழுத ஆரம்பிச்சாங்க, இதை எதிர்த்தும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களை திராவிடர் கழகமும் அதிலிருந்து பிரிஞ்சு புதிதா துவக்கப்பட்டிருந்த திமுகவும் நடத்துனாங்க.

இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு 1964 – 65ல மிகப் பெரிய இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அப்போ ஏற்பட்ட கலவரங்கள்ல பலர் கொல்லப்பட்டாங்க. இந்தி திணிப்பு எதிர்ப்புல அப்போது நடந்ததுதாம் மிக முக்கியமான போராட்டம்.

1964ஆம் வருஷம் மார்ச்ல தமிழ்நாட்டு முதல்வரா இருந்த பக்தவச்சலம், சட்டப் பேரவைல மும்மொழி திட்டத்தை முன்மொழிந்தார். ஆங்கிலம், தமிழ், இந்தி இந்த மூணு மொழியையும் பள்ளிகள்ல கட்டாயமா படிக்கனும்னு அந்த திட்டம் சொல்லிச்சு. இது மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்க காரணமா இருந்துச்சு.

1964ஆம் வருஷத்திலேயே திராவிட முன்னேற்ற கழகம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை துவக்கிட்டாலும் அது தீவிரமடைஞ்சது 1965 ஜனவரிலதான். குறிப்பா ஜனவரி 25.

அண்ணா, கருணாநிதி, மதியழகன், அன்பழகன்னு திமுகவோட முன்னணி தலைவர்கள் அத்தனை பேரும் இந்திக்கு எதிரான தொடர் போராட்டத்துல இறங்கினாங்க. எல்லோருமே கைது செய்யப்பட்டாங்க.

திருச்சியை சேர்ந்த சின்னசாமின்ற 27 வயசு இளைஞர், ’தமிழ் வாழ நான் சாகிறேன்’ என்று இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளிச்சார்.

இந்த சம்பவம் போராட்டத்தோட வேகத்தை அதிகப்படுத்தியது.

தலைவர்கள்கிட்ட இருந்த போராட்டம், மாணவர்கள் போராட்டமா, பலமானதா மாறிடுச்சு. அப்போது தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் அரசு கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள்ல ஈடுபட்டுச்சு.

பல இடங்களில் போலீஸ் துப்பாக்கி சூடு, தீ வைப்பு, கணக்குக்கு வராத மரணங்கள்னு தமிழ் நாடு கலவர நாடாக மாறியது.

பக்தவச்சலம் அப்போ தமிழக முதல்வரா இருந்தார். அவர் போலீஸை வச்சு போராட்டத்தை அடக்க நினைச்சாரே தவிர போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைகளின் மூலம் அமைதிப்படுத்த நினைக்கல.

தமிழக காங்கிரஸ் ஆட்சி இப்படி இருக்க, மத்திய காங்கிரஸ் ஆட்சில மந்திரிகளா இருந்த தமிழ் நாட்டை சேர்ந்த சி,சுப்ரமணியனும் ஓ.வி. அழகேசனும் இந்தி திணிப்பை கண்டிச்சு அமைச்சரவைலருந்து ராஜினாமா செஞ்சாங்க.

அப்பதான் மத்திய அரசுக்கு நிலைமையோட தீவிரம் புரிஞ்சது.

’இந்தி பேசாத மாநிலங்களோட சம்மதம் இல்லாம மத்திய அரசு ஆட்சி மொழி விஷயத்துல எந்த முடிவும் எடுக்காது. ஆங்கிலமே தொடரும்னு அப்ப பிரதமரா இருந்த லால்பகதூர் சாஸ்திரி சொன்ன பிறகுதான் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது.

இந்தப் போராட்டம் கட்டாய இந்தியை மட்டும் தடுக்கல. தமிழ்நாட்டுல அதுக்கப்புறம் காங்கிரசையும் ஆட்சிக்கு வர முடியாம தடுத்துருச்சு.

1967ல திமுக முதல் முறையா ஆட்சிக்கு வரதுக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான் முக்கியமான காரணமா இருந்தது.

இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு பிறகு என்ன நடந்தது? போராட்டங்களுக்கு பலன் கிடைத்ததா?
1950ல இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது இந்தியை அலுவல் மொழியாவும் பதினைஞ்சு வருஷத்துக்கு இந்தியோட சேர்ந்து ஆங்கிலமும் அலுவல் மொழியாவும் இருக்கும்னு குறிப்பிட்டாங்க.

பதினைஞ்சு வருஷத்துக்குள்ள இந்தியை இந்தியா முழுதும் பரப்பிரனும்றதுதான் வட இந்திய தலைவர்களின் அப்போதைய நோக்கமா இருந்தது.

ஆனா பல மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமா, ’இந்தி கட்டாயமாக்கப்படாது. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலமும் இணைப்பு மொழியா தொடரும்’ னு 1959ல பிரதமரா இருந்த நேரு நாடாளுமன்றத்துல வாய் மொழியா உறுதி அளிச்சார்.

1967ல இந்திரா காந்தி இந்தியாவுல ஆங்கிலமும் அலுவல் மொழியா தொடர ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

தமிழ்நாட்டுல இந்தியை முழுமையா பாடத் திட்டங்கள்லருந்து நீக்கி, மும்மொழி திட்டத்தை கைவிடும் தீர்மானத்தை, முதலமைச்சரா இருந்த அண்ணா, 1968 ஜனவரி மாசம் தமிழ்நாட்டு சட்டசபைல நிறைவேற்றினார்.

இதெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு பலனாக நடந்தவை.

இன்னைக்கு நம்மளை இந்தி ஆக்கிரமிக்காம இருக்குதுனா அதுக்கு காரணம் அன்னைக்கு போராடினவங்கதான்.

அந்த போராட்டத்துல ஈடுபட்ட சிலர் பெரிய அரசியல் தலைவர்களா வளர்ந்தாங்க. பெரிய பெரிய பொறுப்புகளுக்கும் வந்தாங்க.

ஆனா எல்லோருக்கும் அந்த வசதி, வாய்ப்புகள் கிடைக்கல.
தாய் மொழி தமிழுக்காக பலர் செய்த தியாகங்கள் மறக்கப்பட்டு விட்டது.

மொழிப் போர் தியாகிகளுக்காக தமிழகத்துல சில நினைவிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில ஒரு பெரிய அரசு கட்டிடம் இருக்கு அதுக்கு பேர் தாளமுத்து – நடராசன் மாளிகை.

1938ல நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்துல முதல்ல இறந்தவங்க இவங்கதான். அவங்க நினைவா கட்டிடத்துக்கு பெயர் வச்சிருக்காங்க.

இந்த கட்டிடத்து பேரை பாக்கிற இன்றைய தலைமுறையினர் பலருக்கு தாளமுத்து நடராசன்றது இரண்டு பேரோடு பெயர்னே தெரியாது. ஒரே பெயர்னுதான் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்க யாருனும் பலருக்கு தெரியாது. இதுதான் இன்றைய நிலை.

1965ல் ஜனவரி 25ல் தொடங்கிய தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மறக்காமலிருக்கதான் ஜனவரி 25 மொழிப் போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுல இந்தி திணிப்புக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து பல வருடங்கள் ஆயிருச்சு.
ஆனால் இப்போதும் மத்திய அரசு ஏதாவது ஒரு வகையில் இந்தியை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

இந்தி மத்திய அரசால் துணிக்கப்படுவதும் தமிழ்நாடு அதை எதிர்ப்பதும் தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...