பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த மில்லினியத்தில் பணத்தைவிட காதல் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய இன்றைய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதிலும் சத்யேந்திர சிவலை போன்ற சிலர் காதலுக்காக நாட்டைக்கூட காட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
யார் இந்த சத்யேந்திர சிவல் என்று கேட்பவர்களுக்காக…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் சத்யேந்திர சிவல். ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு துணை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார் சத்யேந்திர சிவல். 27 வயதான இவர், கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து மாஸ்கோவில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நேரத்தில்தான் அவருக்கு காதல் வந்தது. சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.
ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது காதலி, சத்யேந்திர சிவலை ஏமாற்றினார். உண்மையில் அவர் காதலித்தது சத்யேந்திராவை அல்ல. அவரது வேலையை. சத்யேந்திர சிவலின் வேலையைப் பயன்படுத்தி, அவர் மூலமாக இந்திய ராணுவ ரகசியங்கள் சிலவற்றைப் பெற்றுள்ளார். அதற்குப் பதில் விலை உயர்ந்த சில பரிசுகளை அவருக்கு கொடுத்திருக்கிறார்.
ஒரு பக்கம் காதல்… இன்னொரு பக்கம் காதலி தரும் பரிசுகள் என இரண்டும் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட சிவலை தூண்டியுள்ளது.
இந்த சூழலில்தான் சத்யேந்திர சிவலின் நடவடிக்கைகளில் உத்தர பிரதேச மாநில காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். பாகிஸ்தானுகாக சிவல் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், அவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்த நேரத்தில் அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் சுற்றி வளைத்து விசாரணைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். விசாரணையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினருக்கு இந்திய ராணுவம் தொடர்பான சில ஆவணங்களை கொடுத்ததை சிவல் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு படை அதிகாரியான மோஹித் அகர்வால் கூறும்போது, “ சத்யேந்திர சிவலை பல மாதங்களாக கண்காணித்து வந்தோம். அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும் வகையில் இருந்தன. வங்கி கணக்குகளை ஆய்வு செய்தோம். இதில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. யாரிடமெல்லாம் தகவல் தொடர்பை ஏற்படுத்தினார் எனவும் கவனித்தோம். தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் கைது செய்துள்ளோம்.
இவரை விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவருடைய மொபைல் போனை கைப்பற்றியுள்ளோம். இதில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்று விசாரித்து வருகிறோம்” என்கிறார்.