No menu items!

3 லட்ச ரூபாயில் திருமண அழைப்பிதழ்! அம்பானி வீட்டு கல்யாணம்!

3 லட்ச ரூபாயில் திருமண அழைப்பிதழ்! அம்பானி வீட்டு கல்யாணம்!

வீட்டுக்கு வந்து யாராவது கல்யாணப் பத்திரிகை வைத்தால், அதை கல்யாண தேதி வரை பூஜையறையில் வைப்பது சிலரது வழக்கம். கல்யாண நாள் முடிந்த பிறகு பெரும்பாலும் அவை குப்பைத் தொட்டிக்கு போய்விடும். ஆனால் அம்பானி வீட்டு திருமண அழைப்பிதழை அப்படி குப்பைத் தொட்டியில் போட முடியாது. வீட்டு லாக்கரில்தான் வைக்க வேண்டும். அந்த அளவுக்கு தங்கமும் வெள்ளியும் கலந்து  காஸ்ட்லியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி நடக்கிறது. இந்த திருமணத்துக்காக எந்தெந்த வகையில் எல்லாம் செலவுசெய்ய முடியுமோ, அந்த வகையில் எல்லாம் பணத்தை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள் அம்பானி தம்பதியர். அந்த ஆடம்பர செலவு லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் விஷயம் திருமண அழைப்பிதழ்.

பொதுவாக ஒரு அழைப்பிதழ் என்றால் அதை ஒரு அட்டையில் அச்சடித்து கவரில் போட்டுக் கொடுக்காபார்கள். இன்னும் சிலர் ஆடம்பரத்துக்காக பட்டுத் துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங் செய்து கொடுப்பார்கள். ஆனால் அம்பானியோ தன் வீட்டு அழைப்பிதழை தங்கமும் வெள்ளியும் கலந்து ஒரு கோயில் வடிவில் செய்து  ஒரு பெட்டிக்குள் வைத்து கொடுத்து வருகிறார்.

அந்த பெட்டியைத் திறந்தால் பக்தி மந்திரங்கள் ஒலிக்கும். கூடவே  வெள்ளியில் செய்யப்பட்ட மினி கோயில் நமக்கு காட்சி தரும். நான்கு வாயில்களைக் கொண்ட அந்த கோயிலுக்குள் நான்கு பக்கமும் வெவ்வேறு கடவுள்களின் சிலைகள் தங்கம் மற்றும் வெள்ளி கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த கோயிலுக்கு கீழ் உள்ள பெட்டியைத் திறந்தால் விநாயகர்,  லக்ஷ்மி, ராதா கிருஷ்ணர் மற்றும் துர்கையின் படங்களும், அடுத்தடுத்த பக்கங்களில் கல்யாணப் பத்திரிகையும் இடம்பெற்றுள்ளன.  அவற்றுடன் ஆனந்த் மற்றும் ராதிகா மெர்சண்ட்டின் இனிஷியல்கள் பொறிக்கப்பட்ட 2 விலைமதிப்புமிக்க துணிகளும் வைக்கப்பட்டுள்ளன. கூடவே சிறிய சைஸ் சாமி படங்களும்.

இந்த கல்யாணப் பத்திரிகையின் விலை பற்றிய  தகவல் இதுவரை  அதிகாரப்பூர்வமாய் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அதிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளியை வைத்து ஒரு பத்திரிகையின் மதிப்பு மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன் நடந்த அம்பானி மகள் திருமணத்துக்கு கொடுக்கப்பட்ட கல்யாணப் பத்திரிகை மூன்று லட்ச ரூபாய். இப்படி மொத்தம் 7 ஆயிரம் அழைப்பிதழ்களை அச்சடித்திருக்கிறார்கள். 7 ஆயிரத்துடன் 3 லட்சத்தை பெருக்கி பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள்.

காஸ்ட்லியான இந்த கல்யாணப் பத்திரிகையை முதலில் காசி விஸ்வநாதர் கோயிலில் வைத்து வணங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி. இந்தக் கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கியிருக்கிறார்.

அடுத்து மா அன்னபூர்ணா கோயிலுக்கு சென்று திருமண அழைப்பிதழை வைத்து பிரார்த்தனை செய்து அந்தக் கோயிலுக்கு ஒன்றரை கோடி நன்கொடையும் வழங்கியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வர், பாலிவுட் நட்சத்திரங்கள் என பல விஐபிக்களுக்கும் அம்பானி குடும்பத்தினர் அழைப்பு விடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் வித்தியாசமான ஆடைகளை வடிவமைத்து அணிந்து செல்கிறார்கள். இதற்கும் பல லட்ச ரூபாய் செலவு செய்கிறார்கள்.

திருமண அழைப்பிதழுக்கே இப்படியென்றால், திருமணத்த்தில் அம்பானி குடும்பம் எவ்வளவு வாரி இறைக்கப் போகிறதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...