No menu items!

அதிமுகவை தனியாக்கும் பாஜக – அண்ணாமலை கணக்கு!

அதிமுகவை தனியாக்கும் பாஜக – அண்ணாமலை கணக்கு!

அதிமுகவை கழற்றிவிட பாஜக தயாராகிவிட்டது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக புதிய கூட்டணியுடன் களமிறங்குகிறது என்பதுதான் இன்றைய சூடான அரசியல் பேச்சு.

சமீபமாய் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் உறவு சரியில்லை என்பது நாடு அறிந்ததே. மூன்று நாட்களுக்கு முன் பிறந்த நாள் கொண்டாடிய தமிழ்நாட்டு பாஜகவின் தலைவர் அண்ணாமலைக்கு ஊர் உலகமே வாழ்த்து சொல்லியது. ஆனால் முக்கிய கூட்டணிக் கட்சியான அதிமுகவின் நிர்வாகிகள் யாரிடமிருந்தும் வாழ்த்து வரவில்லை.

கர்நாடகத் தேர்தல் முடிவுகளுக்கு முன் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கடுமையான மோதல்கள் இருந்தன. அதிமுகவினரால் அண்ணாமலை கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பாஜகவிலுள்ள அண்ணாமலை ஆதரவாளர்களும் அதிமுகவினரை சிறப்பாக விமர்சித்தார்கள்.

இந்த மோதல்களுக்கிடையே, ’இவரிடம் என்ன பேச்சு, டெல்லி தலைவரிடம் பேசிக் கொள்கிறேன்’ என்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பில் அண்ணாமலையும் கலந்துக் கொண்டார். இது எடப்பாடி பழனிசாமி எதிர்பாராதது. ஆனாலும் மீசையில் மண் ஒட்டாததுபோல் செய்தியாளர் சந்திப்பு நடத்திவிட்டு சென்னைக்கு திரும்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவினருக்கும் புரிந்துவிட்டது, பாஜக தலைமை அண்ணாமலையை தள்ளி வைக்காது என்று.

அந்த சந்திப்பின்போது அதிமுக இன்னும் பலத்துடன்தான் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, அதற்கு பதிலளித்த அண்ணாமலை, பழைய பலம் இல்லை, அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர். மறைந்ததும் பாதி பலம் குறைந்தது, ஜெயலலிதா மறைந்ததும் முழு பலமும் குறைந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமித்ஷாவிடம் அண்ணாமலை கூறியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அண்ணாமலை அப்படி கூறிய போது அதை முழுமையாக எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியவில்லை என்று டெல்லி முக்கியஸ்தர்கள் சொல்லுகிறார்கள்.

ஆனால் அதிமுகவுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. கர்நாடகத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தால் அதிமுக நோக்கி ஓடி வரும், அதிமுக தயவு வேண்டும் என்பதை உணரும் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் கர்நாடகத் தேர்தலில் தோற்றும் பாஜகவின் போக்கில் மாற்றமில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவை அண்ணாமலை கழற்றிவிடப் போகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனிமரமாகப் போகிறது என்ற செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரும். அதிமுக கூட்டணிக்கு வெளியே இருக்கும் விஜயகாந்தின் தேமுதிகவும் பாஜக கூட்டணிக்கு வரும். இவர்களுடன் ஓபிஎஸ் அணியும் பாஜக கூட்டணிக்குள் வரும் என்று கூறப்படுகிறது.

சமீபமாய் திமுக ஆட்சியை பிரேமலதா விஜயகாந்த் தீவிரமாய் விமர்சிப்பதன் பின்னணியில் இந்தக் கூட்டணி கணக்குகள் இருக்கின்றன. அதே போல் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றதும் இந்த அடிப்படையில்தான். திறப்பு விழா முடிந்ததும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். சட்டப் பேரவைத் தேர்தலில் இருந்தே அதிமுகவுக்கும் பாமகவுக்கும் நல்ல புரிதல் இல்லை. பாஜகவுடன்தான் கூட்டணி என்ற நிலைப்பாடுடன்தான் பாமகவின் அரசியல் பயணம் இருக்கிறது. தேமுதிகவுக்கும் அதே எண்ணம்தான். 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலேயே அவர்கள் அதிமுக கூட்டணிக்குள் வரவில்லை. எடப்பாடி தலைமையை ஏற்கவில்லை.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கும் செங்கோலுக்கும் அதிமுக ஆதரவுத் தெரிவித்தாலும் விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. சி.வி.சண்முகம்தான் அடையாள பங்கேற்பை நடத்தினார். எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதத்துடன் நிறுத்திக் கொண்டார்.

அண்ணாமலையின் கணக்கு இதுதான்.

நாடாளுமண்றத் தேர்தலில் 20 முதல் 25 இடங்களை பாஜகவுக்கு கொடுத்தால் அதிமுகவுடன் கூட்டணி. இல்லையென்றால் தனித்துப் போட்டி.

அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் பாஜகவுக்கு பலம் இல்லை என்ற கருத்தை அண்ணாமலை மறுத்து சில புள்ளிவிவரங்களை மேலிடத்துக்கு கொடுத்திருக்கிறார்.

இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, புதிய தமிழகம் போன்ற பெரிய கட்சிகளும் என்.ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஜெகன் மூர்த்தியின் புரட்சிப் பாரதம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணி ஆகிய கட்சிகளும் இருக்கின்றன.

இத்தனை கட்சிகளில் அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பாஜகவின் குடைகுள் வரும். இவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் போன்றவர்களும் வருவார்கள். தேமுதிகவும் சேர்ந்துக் கொள்ளும்.

இப்படியொரு கூட்டணி அமைந்தால் அதுதான் திமுகவை எதிர்க்கும் பிரதான கூட்டணியாக மக்கள் பார்வையில் தெரியும். அதிமுக பலவீனமாக தனித்து காட்சியளிக்கும்.

ஒன்றரை கோடி உறுப்பினர்கள், 33 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் அதிமுகவை வெளியேற்றிவிட்டு பாஜக கூட்டணியால் வெற்றி பெற இயலுமா என்ற கேள்வி இருக்கிறது.

2021 தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றது வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் மட்டும்தான். இதில் கோவை, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் இருக்கின்றன. வட மாவட்டங்களில் பாமக செல்வாக்குடன் இருக்கிறது. அதானால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணக்கிடப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் அதிகபட்சம் பத்து தொகுதிகள் கொடுப்பார்கள். அதில் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் வெற்றிப் பெற வாய்ப்பிருக்கிறது.

அதிமுக இல்லாமல் போட்டியிட்டால் 25 தொகுதிகளில் போட்டியிடலாம். அதே போல் குறைந்தபட்சம் 4 அல்லது 5 தொகுதிகளில் வெற்றி பெறலாம். அதே எண்ணிக்கையில்தான் வெற்றி என்றாலும் நம்முடைய இருப்பை பலமாக காட்டிவிட முடியும் என்ற கணக்கை எடுத்துக் கூறியிருக்கிறார் அண்ணாமலை என்று டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

அதிமுகவும் பாஜகவும் பிரிந்து நின்றால் அது திமுகவுக்குதானே சாதகம் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. கூடி நின்றாலும் இதே ரிசல்ட்தான் வரும் என்று பதில் கூறப்பட்டிருக்கிறது.

அண்ணாமலையின் இந்தக் கணக்குகள் அதிமுகவும் அறிந்திருக்கும். பாஜக கூட்டணி இல்லையென்றால் அவர்களுக்கு சிக்கலில்லை. ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகளும் இல்லையென்றால் அவர்களுக்கு சிக்கல் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பல வழக்குகள் இருக்கும் நிலையில் மத்தியிலும் மாநிலத்திலு எதிரணியினர் இருப்பது ஆபத்து என்பதையும் அறிந்து வைத்திருக்க்கிறார்கள்.

தமிழ்நாட்டு அமைச்சரவையில் புதிதாய் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் அமைச்சர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம். பாஜகவைத் தனிமைப்படுத்துங்கள். மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம், வழக்குகள் அச்சம் வேண்டாம் என்று தன்மையாக சொல்லியிருக்கிறாராம். இப்படியும் ஒரு செய்தி உலவுகிறது.

சூடு பிடித்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல், திரை மறைவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...