என்டிடிவி பங்குகளை வாங்கியிருக்கிறது அதானி நிறுவனம்.
வட இந்தியாவின் பல பிரபல காட்சி ஊடகங்கள் அரசின் ஊது குரலாய் மாறிக் கொண்டிருக்கும் சூழலில் எதிர் குரலாய் தனித்து நின்றது என்டிடிவி. இப்போது அந்த தொலைக்காட்சியும் சுதந்திரமாய் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்குமா என்பது சந்தேகமாயிருக்கிறது.
கவுதம் அதானி. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த காலத்திலிருந்து அவருடைய நம்பிக்கை பெற்ற தொழிலதிபர். கடந்த எட்டு வருடங்களில் அதிர்ச்சி தரும் அபார வளர்ச்சியை அடைந்திருக்கிறது. உலகின் நான்காவது பெரிய பணக்காரராக அதானி உயர்ந்திருக்கிறார்.
1981ல் 19 வயது இளைஞனாக கல்லூரி முடித்த கையோடு குடும்பத்தின் பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இணைகிறார். 1985ல் சொந்த தொழில் முயற்சியில் இறங்குகிறார். வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பது. 1988ல் அதானி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம். 1989ல் 2 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. குஜராத் அரசு ஒப்பந்தங்கள் பல அவருக்கு கிடைக்கிறது. பத்து வருடங்கள் கழித்து 1998ல் அவர் நிறுவனத்தின் வர்த்தகம் 2800 கோடி ரூபாயாக உயர்கிறது. 2006ல் இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரி இறக்குமதியாளாராக உருவெடுக்கிறார். இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கங்களை வாங்குகிறார். அதன் பின் அசுர வளர்ச்சி. இங்கே குஜராத்தில் நடந்த அரசியல் மாற்றத்தையும் பார்க்க வேண்டும். 2001ல் குஜராத் முதல்வராகிறார் நரேந்திர மோடி. மோடிக்கும் அசுர வளர்ச்சி. அதானிக்கும் அசுர வளர்ச்சி. ஒருவர் இந்தியாவின் பிரதமராக உயர்ந்திருக்கிறார். மற்றொருவர் உலகின் நான்காவது பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கிறார்.
இந்த வெற்றிக் கதைகளின் பின்னணியில் என்டிடிவி பங்குகளை வாங்கிய காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. என்டிடிவி, டைம்ஸ் நவ், இந்தியா டுடே, நியூஸ்18, ரிபப்ளிக் போன்றவையே இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஊடக குழுமங்கள்.
டைம்ஸ் நவ்வை டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் நடத்துகிறது. இந்தியா டுடே தொலைக்காட்சியை இந்தியா டூடே நிறுவனம் நடத்துக்கிறது. நியூஸ் 18 பின்னணியில் இருப்பது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம். இந்த தொலைக்காட்சிகள் அனைத்தும் மத்திய பாஜக அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக மட்டுமில்லாமல் ஊடக அறத்தை மீறி ஆளும் கட்சியின் தவறுகளைக் கண்டுக் கொள்ளாமல் இருக்கின்றன என்பது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. அர்ணாப் கோஸ்வாமி நடத்தும் ரிபப்ளிக் தொலைக்காட்டி குறித்து கூற வேண்டியதில்லை. தீவிர வலதுசாரி சித்தாந்தத்துடன் நடத்தப்படும் சேனல்.
இப்படி பிரபல சேனல்கள் அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் சூழலில் தனித்து அரசின் தவறுகளையும் சுட்டிக் காட்டும் சேனலாக என்டிடிவி இருக்கிறது. இதன் நிறுவனரான பிரனாய் ராய்தான் காட்சி ஊடகங்களில் மிகப் பிரபலமாக இருக்கும் ராஜ்தீப் சர்தேசாய், அர்ணாப் கோஸ்வாமி போன்றவர்களுக்கு குரு. இவர்கள் என்டிடிவியில் இருந்துதான் உருவானவர்கள்.
நியு டெல்லி டெலிவிஷன் (New Delhi Television) என்பதுதான் என்டிடிவி. 1980களில் தூர்தர்ஷனுக்காக நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த என்டிடிவி இந்தியாவில் தொலைக்காட்சி யுகம் தொடங்கியபோது செய்தி சேனலைத் துவக்கியது. அங்கிருந்துதான் இன்று முன்னணியில் இருக்கும் பல செய்தியாளர்கள் உருவானர்கள்.
காலத்தின் வேகத்தினாலும் சில சுய கட்டுப்பாடுகளாலும் என்டிடிவியால் மற்ற சேனல்களுடன் போட்டியிட முடியவில்லை. கடந்த சில வருடங்களாக பல இடையூறுகளை சந்தித்தது. நிதிப் பிரச்சினை, வழக்குப் பிரச்சினை என சிக்கல்களின் இடமாக என்டிடிவி மாறிப் போனது.
2014ல் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே என்டிடிவிக்கு பிரச்சினைகள் தொடங்கின. என்டிடிவி பாஜகவுக்கு எதிரான சேனலாகவே பார்க்கப்பட்டது. முக்கியமாய் 2002ல் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த குஜராத் கலவரங்களின்போது அரசு தரப்பு தவறுகளை என்டிடிவி சுட்டிக் காட்டியது.
2017ல் என்டிடிவி அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. என்டிடிவியின் உரிமையாளர்கள் பிரனாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் என்டிடிவியின் இயக்குநர்களாக செயல்பட முடியாது என்று செபி உத்தரவிட்டது. இப்படி ஏகப்பட்ட சிக்கல்களில் இருக்கும் நிலையில் இப்போது அதானியும் பங்குகள் வாங்கி என்டிடிவிக்கு மேலும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
அதானி குழுமம் பங்குகள் வாங்கிய முறை குறித்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. என்டிடிவியை அதானி எப்படி மறைந்திருந்து தாக்கினார் என்பதைப் புரிந்துக் கொள்ள என்டிடிவியின் பங்குகள் குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
2009ல் என்டிடிவியின் நிதிச் சிக்கல்களைத் தீர்க்க விஷ்வபிரதான் கமர்ஷியல் ப்ரைவேட் லிமிட்டட் (Vishvapradhan Commercial Private Limited) சுருக்கமாய் விசிபிஎல் என்ற நிறுவனத்திடமிருந்து 403 கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள் பிரனாய் ராயும் ராதிகா ராயும். இதுதான் இன்றைய சிக்கலின் ஆரம்பப் புள்ளி.
இந்த விசிபிஎல் ஒரு ஷெல் கம்பெனி. மற்றொரு பெரிய நிறுவனத்தின் அல்லது பெரிய மனிதரின் நிதியை கையாளும் நிறுவனங்களை ஷெல் கம்பெனி என்று அழைப்பார்கள். அதாவது முகமூடி நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு 403 கோடி ரூபாயை யார் கொடுத்தது என்று பார்த்தால் அதில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஷினானோ ரீடைல் ப்ரைவேட் லிமிட்டட் (Shinano Retail) என்ற நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு யார் சொந்தக்காரர் என்று பார்த்தால் அது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் வென்ச்சர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம். இத்தனை வாக்கியங்களை சுருக்கிப் பார்த்தால் பிரனாய் ராய்க்கு 403 கோடி ரூபாயைக் கொடுத்தது முகேஷ் அம்பானி என்பது தெரியும்.
வாங்கிய பணத்துக்குப் பதில் என் டிடிவியின் 29 சதவீத பங்குகளை விபிசிஎல்லுக்கு கொடுக்கிறார் பிரனாய் ராய். இப்போது விபிசிஎல் நிறுவனத்தை கவுதம் அதானியின் நிறுவனம் வாங்கிவிட்டது. அதனால் என்டிடிவியின் 29 சதவீத பங்குகள் அதானி வசம் வந்துவிட்டன.
29 சதவீதத்தை வைத்துக் கொண்டு என்டிடிவிக்கு உரிமை கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழும்.
29 சதவீத பங்குகள் உடைய நிறுவனத்தை வாங்கியதுடன் அதானி நிற்கவில்லை வெளி மார்க்கெட்டில் இருக்கும் 26 சதவீத என்டிடிவி பங்குகளையும் வாங்க விரும்புவதாக அறிவித்திருக்கிறது.
தனிப்பட்ட முறையில் பிரனாய் ராயும் அவரது மனைவி ராதிகா ராயும் என்டிடிவியின் 32 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் வெளி சந்தையில் இருக்கும் பங்குகளை அதானியால் வாங்க இயலும். அப்படி வாங்கினால். அதானி முக்கிய பங்குதாரர் ஆகிவிடுவார். பிரனாய் ராயின் கட்டுப்பாட்டிலிருந்து என்டிடிவி சென்று விடும்.
இந்த நிகழ்வுகள் குறித்து என்டிடிவி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’இந்த மொத்த பரிவர்த்தனையும் எங்களிடம் எவ்வித ஆலோசனையும் இல்லாமல் தகவலும் தெரிவிக்கப்படாமல் ஒப்புதல் பெறப்படாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செபி அனுமதி இல்லாமல் புரமோட்டர்களின் 99.5% பங்குகளை அதானி நிறுவனம் வாங்க முடியாது என என்டிடிவி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. ஏனெனில், பிரணாய் ராயும், ராதிகா ராயும் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கவும், விற்கவும் 2020ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி செபி தடை விதித்துள்ளது.
இந்த தடை 2022 நவம்பர் 26ஆம் தேதி காலாவதியாகிறது. எனவே, செபி அனுமதி இல்லாமல் பிரணாய் ராய், ராதிகா ராயிடம் உள்ள புரமோட்டர் பங்குகளை அதானி நிறுவனம் வாங்க முடியாது என என்டிடிவி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்படி இடியாப்ப சிக்கலில் இருக்கிறது என்டிடிவி.
இந்த சிக்கலிலிருந்து என்டிடிவி வெளிவருமா? அதானி கையில் மாட்டாமல் தப்பிக்குமா என்ற கேள்விகளுக்கு நிச்சயமான விடை இல்லை.
அதானி சூறாவளிக்கு பிரனாய் ராய் தப்பி சுதந்திரமாய் என்டிடிவியை இனி நடத்துவது சிரமம் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அதானியிடம் பணம் மட்டுமில்லை, அதிகாரமும் இருக்கிறது. ஆனால் பிரணாய் ராயிடம் சிக்கல்கள் மட்டுமே இருக்கின்றன என்ற காரணத்தை கூறுகிறார்கள்.