2022-ம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தாருக்கு கிடைத்தது எப்படி என்பதே ஒரு மர்மம்தான்.
Foot Balla விளையாட்டில் கத்தார் ஒன்றும் அத்தனை புகழ்பெற்ற நாடல்ல.
கத்தார் அணி ஒரு முறைகூட உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றதில்லை.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அந்த நாட்டில் ஒரே ஒரு சர்வதேச ஃபுட்பால் மைதானம்தான்.
இது மட்டுமில்லாமல் கத்தார் ஒரு வெப்ப நாடு. ஏசி இல்லாமல் இருக்க முடியாது. அந்த நாட்டில் மைதானத்தில் ஃபுட்பால் விளையாடுவது என்பது ரொம்ப கஷ்டம்.
இப்படி பாதகமான பல விஷயங்கள் இருந்தும் 2022-ம் ஆண்டில் உலகக் கோப்பையை நடத்தும் நாடாக கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டது.
போட்டியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற வசதிமிக்க நாடுகள் இருந்தும் கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்தனை நெகடிவ் விஷயங்கள் இருந்தும் உலக கால்பந்து போட்டியை நடத்த கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது இன்று வரை மர்மம்தான். தங்கள் நாட்டை தேர்ந்தெடுக்க பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் என்றும் ஒரு பேச்சு உண்டு.
இத்தனை நெகடிவ் அம்சங்கள் இருந்தும் அத்தனையையும் மாற்றிவிட்டது கத்தார்.
2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பை நடத்துவதற்கான பணிகளைத் துவக்கியது கத்தார்.
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக கத்தார் இருப்பதால் காசுக்கு பஞ்சமில்லை.
நாட்டில் இருந்த ஒரே கால்பந்து மைதானத்தை சீரமைக்கும் பணியுடன், புதிதாக 7 மைதானங்களையும் முழுவீச்சில் கட்டத் தொடங்கியது. இதற்காக சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து வருவிக்கப்பட்டார்கள்.
இந்தப் கட்டிடப் பணியாளர்களில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்தாம் அதிகம்.
நம் ஊரில் மெட்ரோ ரயில்களை அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டதைப்போல், கத்தாரில் மைதானங்கள், ஓட்டல்கள், சாலைகளை அமைக்கும் பணிகளில் மற்ற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுல ஒரு சோகமான விஷயமும் இருக்கிறது. கத்தாரின் வெப்பத்தை தாங்க முடியாமல் 6,500 பேர்வரை கடந்த 10 ஆண்டுகளில் இறந்திருக்ககூடும் என்று பிபிசி செய்தி நிறுவனம் சொல்கிறது. ஆனால் கத்தார் அரசு மறுத்துள்ளது.
மைதானங்கள் போதாதென்று வருவோரை தங்க வைப்பதற்கான ஏராளமான ஓட்டல்கள், போக்குவரத்து சீராக இருக்க சாலைகள் உள்ளிட்டவற்றையும் கடந்த 10 ஆண்டுகளில் அமைத்தது ஒரு ஆச்சர்யமான சாதனை.
பொதுவாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோடை காலத்தில்தான் நடக்கும்.
காரணம், கால்பந்து ஆடும் பெரும்பாலான நாடுகளும், போட்டி நடத்தும் நாடுகளும் குளிர்ந்த பிரதேசங்களாக இருப்பதால் வெயில் காலத்தில் கால்பந்து போட்டிகள் நடத்தப்படும்.
ஆனால் வெப்ப நாடான கத்தாரில் கோடைகாலத்தில் 50 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் காய்ச்சி எடுக்கும் என்பதால் முதல் முறையாக குளிர்காலத்துக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டி மாற்றப்பட்டுள்ளது.
குளிர்காலம் என்றாலும் கத்தாரின் வெயில் தாக்கும் என்பதால் போட்டி நடக்கும் 8 மைதானங்களையும் ஏசி செய்துவிட்டது. இதற்கு முன்பு எந்த கால்பந்து மைதானத்திலும் ஏசி கிடையாது. கத்தார் இதையும் சாதித்திருக்கிறது.
போட்டிகளை நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்தால் மட்டும் போதுமா? போட்டிகளைக் காணவரும் ரசிகர்களை தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா?
அங்கும் கத்தாருக்கு சிக்கல்கள்.
கத்தாரில் நடக்கும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 13 லட்சம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தாரின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே சுமார் 29 லட்சம்தான். அப்படியிருக்கும்போது எக்ஸ்ட்ராவாக 13 லட்சம் பேர் வந்தால் என்ன செய்வது? அவர்களை எங்கே தங்க வைப்பது என்ற சிக்கல்கள் எழுந்தன.
இத்தனை ரசிகர்கள் தங்கக்கூடிய அளவில் அங்கு ஓட்டல்கள் இல்லை. ஏற்கெனவே இருக்கும் ஓட்டல்களிலும் பிஃபா உறுப்பினர்கள், அணிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்காக 20 ஆயிரம் அறைகளை ஏற்கெனவே சர்வதேச கால்பந்து சம்மேளனம் ரிசர்வ் செய்து வைத்துள்ளது. இதனால் மீதமுள்ள அறைகள்தான் ரசிகர்களுக்கு கிடைக்கும். அது போதுமானதாக இருக்காது.
கத்தாரில் தங்கும் வசதி இல்லாததால், பக்கத்து நாடான சவுதி அரேபியாவில்தான் பெரும்பாலான ரசிகர்கள் தங்கவேண்டி இருக்கும். அப்படி தங்கும் ரசிகர்கள் தினந்தோறும் கத்தாருக்கு வந்து போட்டிகளைக் காண வசதியாக தினந்தோறும் சவுதி அரேபியாவுக்கும் கத்தார் தலைநகர் டோஹாவுக்கும் இடையே 160 விமானங்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது கத்தார் அரசு (வழக்கமாக இரு நகரங்களுக்கும் இடையே தினமும் 6 விமானங்கள் மட்டுமே சென்றுவரும்.)
இதேபோல் பக்கத்தில் உள்ள பனானா தீவில் ரசிகர்களை தங்கவைக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. அந்த தீவில் இருந்து படகில் 20 நிமிடங்கள் பயணம் செய்தால் டோஹா நகருக்குள் நுழைந்துவிடலாம்.
இதைத்தவிர தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான ஸ்லீப்பிங் பாட்களையும் முக்கிய நகரங்களில் கத்தார் அரசு அமைத்துள்ளது.
ஓட்டல்களில் இடம் கிடைக்காதவர்களுக்காக MSC World Europa என்ற கப்பல் டோஹா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 22 அடுக்குகளைக் கொண்ட இந்த கப்பலில் 6,700 ரசிகர்கள் வரை தங்கிக்கொள்ளலாம்.
இந்த ஏற்பாடுகள் தவிர பாலைவனங்களில் டெண்ட் அடித்தும் ரசிகர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தங்குமிடத்துக்கு அடுத்ததாக ஃப்ட்பால் ரசிகர்கள் சந்திக்கும் பிரச்சினை மது. மதுவைச் சுவைத்துக்கொண்டே கால்பந்து போட்டியை ரசிப்பது மேற்கத்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
கத்தார் நாட்டை பொறுத்தவரை அங்கு பொது இடங்களில் மது குடிப்பது தண்டனைக்குரிய குற்றம். மீறி குடிக்க வேண்டும் என்றால் அதற்கு லைசன்ஸ் வாங்கவேண்டும்.
அதனால் உலகக் கோப்பைக்காக மட்டும் தங்கள் விதியை சற்று தளர்த்தியுள்ளது கத்தார். ஆனால் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மது அருந்தவேண்டும் என்ற கத்தாரின் விதிகள் மதுவுடன் விளையாட்டை விரும்பும் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பேற்றியுள்ளது.
கால்பந்து போட்டிகள் என்றாலே ரசிகர்கள் மோதலும் வந்துவிடும்.
தங்கள் நாட்டு அணி தோற்றால் ரசிகர்கள் மோதலில் ஈடுபடுவது உலகக் கோப்பைகளில் சாதாரணமாக நடக்கும் விஷயம். இந்த முறை ரசிகர்களின் மோதலை கட்டுப்படுத்தவும், ரசிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் அரசுத் துறையில் இருந்து 32 ஆயிரம் பேரையும், தனியார் துறையில் இருந்து 17 ஆயிரம் பேரையும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது கத்தார்.
தங்கள் நாட்டில் போதுமான போலீஸார் இல்லாததால் துருக்கியில் இருந்து 3 ஆயிரம் போலீஸார் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆக, உலகக் கோப்பைக்காக கத்தார் பிரமிக்கத்தக்க வகையில் மாறியிருக்கிறது. ஆட்டங்களும் பிரமிப்பைத் தருமா.