No menu items!

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

1

கடலில் மிதந்த நாட்கள்

கடலில் மிதக்கும் சொர்க்கம் இந்த சொகுசுக் கப்பல்கள். அதனால் மெக்ஸிகோ போக வேண்டும் என்று முடிவு செய்த போது தரை வழியா விமான வழியா என்ற கேள்விக்கே இடமில்லாமல் கடல் வழியைத் தேர்ந்தெடுத்தோம். க்ரூஸ் ஷிப் எனப்படும் இந்த சொகுசுக் கப்பல்கள் சுற்றுலாத் தொழிலில் நெடுங்காலமாக இருந்து வரும் ஒரு விஷயம். டைட்டானிக் படம் மறக்க முடியுமா?

அமெரிக்காவிலிருந்து சொகுசுக் கப்பல் மூலமாக மெக்ஸிகோ மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்குச் சென்று பார்த்து விட்டு வர முடியும். கப்பலின் அதிக பட்ச வேகமே மணிக்கு முப்பது மைல்கள்தான். ஆகவே, செல்லும் இடங்களைப் பொறுத்து ஐந்து நாள், ஏழு நாள், பத்து நாள், பதினாலு நாள் என்று கப்பலில் பயணிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், கப்பலில் இருக்கும் ஒரு விநாடி கூட அலுப்புத் தட்டி விடாமல் இருக்கும்படி கப்பலுக்குள் ஒரு குட்டி உலகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற கப்பல் பத்தொன்பது தளங்கள் கொண்ட நகரும் நட்சத்திர ஹோட்டல்.

பதினைந்தாவது மாடியிலிருந்தே திறந்த வெளித் தளங்கள் ஆரம்பமாகின்றன. அதாவது மொட்டை மாடி போல கப்பலின் மேற்பரப்பு. வானம் பார்த்த நீச்சல் குளங்கள். பஃபே உணவகம். காபிக் கடை. மதுக்கடை. மிகப் பெரிய எல் ஈ டி திரை டிவி. கூடைப் பந்து மைதானம். மினி கோல்ஃப் மைதானம் எல்லாமே அங்கே இருக்கின்றன.

மற்ற தளங்களில் தங்கும் விடுதி அறைகளும் பார்களும் பிரத்யேக ஹோட்டல்களும் காஸினோ எனப்படும் சூதாட்ட மையங்களும் ஒரு பெரிய உள்ளரங்கு சினிமா தியேட்டருமாக ஒரு பெரு நகரமே ஆர்ப்பாட்டமாய் வீற்றிருக்கிறது.

பால்கனியுடன் அமைந்த தங்கும் அறைகள் அதிகக் கட்டணம் கொண்டவை. ஆனால், அப்படியான அறை எடுக்காமல் போனால் பின்னர் வருந்த நேரிடும். பால்கனி இருந்தால் படுக்கையிலிருந்தே கடலைப் பார்க்கலாம். இரவில் பால்கனியில் அமர்ந்து நட்சத்திரப் பின்னணியில் கப்பல் கடலைக் கிழித்துக் கொண்டு செல்வதை வேடிக்கை பார்க்கலாம்.

எங்கள் கப்பல் ஃப்ளோரிடா மாநிலத்தில் ஃபோர்ட் லாடர்டேல் என்னும் ஊரிலிருந்து கிளம்பியது.

ஒரு மாதம் முன்பே கப்பல் கம்பெனியின் மொபைல் அப்ளிகேஷனில் பாஸ்போர்ட் இத்யாதிகளை அப்லோட் செய்து விட்டதால் போர்ட் ஆஃப் என்ட்ரியில் அந்த விபரங்களை ஒரு சின்ன ப்ளூடூத் குப்பியிலடைத்து உங்களிடம் தந்து விடுகிறார்கள்.

சத்யராஜ்குமார்

அதை நீங்கள் ஆபரணம் போல கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம். வாட்ச் போல மணிக்கட்டில் கட்டிக் கொள்ளலாம். கப்பலில் இருக்கும் நாட்களில் உங்கள் அடையாளம் அதுதான். காபியோ, மதுவோ, உணவோ ஆர்டர் செய்யப்போனால் கவுன்ட்டரில் இருக்கும் நபரின் கம்ப்யூட்டரில் உங்கள் முகம் வந்து விடும். உங்கள் அறை எண் அவருக்குத் தெரிந்து விடும். உங்களுடைய பாக்கேஜ் என்ன என்பதும் தெரிந்து விடும். அதாவது அன்லிமிட்டெட் உணவு மற்றும் பானங்களுக்கு மொத்தமாக ஏற்கெனவே பணம் கட்டியிருந்தால் ஐந்து நாட்களும் எல்லாமே இலவசம்.

அந்த ப்ளூடூத் வில்லை மூலமாக நீங்கள் அறையை நெருங்கும்போதே உங்களை உணர்ந்து கொண்டு அறைக் கதவு திறந்து கொள்கிறது. புறாக்கூண்டு போன்ற அறைதான். இரண்டு மெத்தைகள், ஒரு பங்க் பெட். அட்டாச்டு டாய்லெட்டுடன் ஒரு குட்டி பாத்ரூம் மற்றும் பால்கனி.

கப்பலுக்குள் நுழையும் வரைதான் கப்பல் என்ற உணர்விருக்கிறது. உள்ளே வந்து விட்டதும் – ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் பின்னணியில் – கப்பலுக்குள் இருக்கிறோம் என்பதே மறந்து விடுகிறது. கடலை எட்டிப் பார்க்கிற வரைக்கும் ஓடும் கப்பலில் இருக்கிறோம் என்ற ப்ரக்ஞை கூட எழுவதில்லை, எப்படி பூமி சுற்றுவதை பூமியின் மேல் இருக்கும் நாம் உணர்வதில்லையோ அப்படித்தான்.

நான்காவது தளத்தின் வழியே உள்ளே நுழைகிறோம். ஐந்தாவது தளம் ஹோட்டல் ரிசப்ஷன் போல சோபாக்களுடன் வரவேற்கிறது. நடுநாயகமாய் ஒரு பியானோ போடப்பட்டிருக்க இசைக்குழு ஒன்று பியானோ, கிடார் எல்லாம் வாசித்துப் பாடிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் இருபத்தினாலு மணி நேரமும் ஸாண்ட்விச்சும் கேக்கும் வழங்க ஒரு ஸ்டால் வைத்திருக்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் போல காபி ஸ்டாலும் உண்டு.

பதினோராவது தளத்தில் இருந்தது எங்கள் அறை. அறைக்காக அமர்த்தப்பட்ட பிரத்யேக பணியாளர் எங்களை வரவேற்கிறார். அடுத்த ஐந்து நாட்களுக்கு என்ன வேண்டுமானாலும் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு இன்முகத்துடன் உபசரித்துச் செல்கிறார். இவர்களுக்கான டிப் கப்பல் கட்டணத்துடன் சேர்த்தே வாங்கி விடுகிறார்கள். இருந்தாலும் பயணம் முடிந்து விடை பெறும்போது அவர்களுக்கு சிறு சன்மானத் தொகை தருவது வழக்கத்தில் உள்ளது.

இது தவிர நீங்கள் விருப்பப்பட்டுத் தர விரும்பினால் Onboard Gratitude என்ற அன்பளிப்புத் தொகையை கப்பல் கம்பெனியே நாள் ஒன்றுக்குத் தனியாக வசூலிக்கிறார்கள். அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம், “இந்தப் பணத்தை உங்களுக்கு அளித்து விடுவார்களா?” என்று கேட்டேன்.

‘இல்லை. இந்தப் பணம் கம்பெனியின் எல்லாக் கப்பல்களிலும் இருந்தும் கம்பெனியின் பொதுக் கணக்குக்குப் போய் அதையே பிரித்து எங்களுக்குச் சம்பளமாக அளிக்கிறார்கள்.” என்றார்.

வருடத்தில் ஒன்பது மாதங்கள் குழந்தை, குட்டி, மனைவி, மக்களைப் பிரிந்து – ஒரு நாளில் பதினாலு மணி நேரத்துக்கு மேல் உழைப்பவர்களின் மேலான அநியாயமான சுரண்டல் என்று தோன்றியது. சுமார் நாலாயிரம் பேர் பயணிக்கும் இக்கப்பலில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருபத்தினாலு மணி நேரமும் வேலை பார்க்கிறார்கள். உங்களுக்கு இம்மியளவு கூட அசௌகரியம் ஏற்பட்டு விடக் கூடாது என நாலு பேருக்கு ஒருவர் என்ற அளவில் பணியாளர்கள் எங்கும் நிறைந்து கிடக்கிறார்கள். இது தவிர பொறியாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், சமையல்காரர்கள், பொழுதுபோக்க உதவும் இசை வல்லுநர்கள், நடனக்காரர்கள்.

கப்பலில் மேலும் கீழும் போய் வர முன்னாலிருந்து பின்னால் வரை ஆறேழு லிஃப்ட்கள் உள்ளன. லிஃப்ட்டை ஒட்டி படிக்கட்டுகளும் உள்ளன. நாள் பூராவும் கப்பலுக்குள்ளேயே இருந்தாலும் மேலும் கீழும் பலமுறை போய் வருவதால், போனிலிருக்கும் ஆக்டிவிட்டி ஆப் தினமும் ஐந்து மைல் தூரம் நடந்து விட்டதாகக் காட்டியது. காலையில் வாக்கிங் செல்ல ஆறாவது தளத்தில் கப்பலைச் சுற்றி அழகான நடைபாதை அமைத்திருக்கிறார்கள். மூணு ரவுண்ட் அடித்தால் ஒரு மைல் தூரமாம்.

ஒவ்வொரு ஃப்ளோரிலும் பல இடங்களில் தொடு திரையில் கப்பலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி நிரல், கப்பலின் மேப் எல்லாமே உள்ளது. அதிலேயே லாகின் செய்து நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம். நடனப் பயிற்சி, இசை நிகழ்ச்சி, மணமாகாதவர்கள் துணை தேடும் நிகழ்ச்சி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நாள் பூராவும் நடக்கின்றன. நாங்கள் சில இசை நிகழ்ச்சிகள் பார்த்தோம். லைன் டான்சிங் எனப்படும் நடனப் பயிற்சியில் ஈடுபட்டோம். மற்றபடி நீச்சல் குளத்தில் நீந்துவதும் வெளியே வந்து உணவருந்துவதும் மறுபடி குளத்தில் மூழ்குவதுமாக என் பொழுதுகள் போயின. சில சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டு போயிருந்தேன். கப்பலின் பல்வேறு பகுதிகளில் உட்கார்ந்து கடலழகை ரசித்துக் கொண்டே அந்தப் புத்தகங்களையும் வாசித்து முடித்தேன். முக்கியமாக அதிகாலை நேரம் கப்பலின் உச்சிக்குப் போய் அமர்ந்து காபியும் புத்தகமுமாக விடியலை எதிர்நோக்குவது கிடைத்தற்கரிய மறக்க முடியாத தருணம்.

உணவு மற்றும் பானங்களைப் பரிமாறும் இளைஞர் இளைஞிகளில் பல இந்திய முகங்களையும் பார்க்க முடிந்தது. அவர்களுக்கும் நம்மைப் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆறு மாதக் குழந்தையைப் பிரிந்து வந்திருக்கும் கோவையைச் சேர்ந்த பையன், மதுரைக்கார இளைஞன், பூனாவைச் சேர்ந்த இளம்பெண் இப்படிப் பலரோடும் பேச முடிந்தது. அவர்களும் தனி அக்கறை எடுத்து நம்மைக் கவனித்துக் கொண்டார்கள். இரண்டாம் நாள் மேற்கத்திய உணவுகள் அலுத்துப் போன நிலையில் தமிழ் பேசும் சிப்பந்திகளிடம் தமிழ்நாட்டு உணவு வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, சிக்கன் குழம்பும் சாம்பாரும் பிரத்யேகமாக சமைத்துக் கொடுத்தார்கள்.

இப்படியாக அந்த நகரும் சொர்க்கபுரியில் இரண்டு இரவுகள் ஒரு பகல் பொழுது கழிந்ததும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில் கப்பல் மெக்ஸிகோவில் தரை தட்டியது. வெளியே போய் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் ஐந்தரை மணிக்கு முன்னால் கப்பலுக்குத் திரும்பி விட வேண்டும். ஆறு மணிக்குக் கப்பல் புறப்பட்டு விடும்.

துறைமுக விதிகளின்படி எந்த ஒரு கப்பலும் இரவு வேளைகளில் கரையில் நங்கூரமிட்டு நிற்க அனுமதி இல்லை. ஆகவே, இரவானால் கடலுக்குள் சென்று விட வேண்டும். “கப்பல் கிளம்புவதற்குள் வந்து சேராவிட்டால் என்ன ஆகும்?” என்று கேட்டதற்கு –

“துறைமுகத்தில் இருக்கும் எங்கள் ஏஜண்ட்டுகள் உங்களை விமானம் ஏற்றி பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். ஆனால், அதற்காகும் செலவை உங்களிடமிருந்து வசூலித்துக் கொள்வோம்.”

“எவ்வளவாகும்?”

“ஆயிரக்கணக்கான டாலர்கள். நேரத்துக்கு வந்து சேர்ந்து விடுங்கள்.” என்று சிரித்தார்கள்.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...