90-ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகர்களில் ஒருவர் ஆர்னால்ட் ஸ்வாஸ்நேகர். பாடிபில்டராக இருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறிய இவர், பல அதிரடி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் நம்ம ஊர் எம்ஜிஆரைப் போலவே அரசியலில் நுழைந்த அர்னால்ட், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, பாடிபில்டிங்கில் இருந்து சினிமா, அரசியல் ஆகியவற்றில் கால் வைத்த அர்னால்ட் இப்போது மீண்டும் பாடி பில்டிங்கிற்கு மாறியுள்ளார். இம்முறை அவர் மாறியது பாடி பில்டராக அல்ல. பாடி பில்டிங் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி ஆசிரியராக.
இதைப் படித்ததும் நாமும் அர்னால்டிடம் பயிற்சி பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வருகிறதா?… இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டுமானால் உங்களிடம் ஒரு கோடி ரூபாயாவது இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு செஷனுக்கு பயிற்சி அளிக்க, மாணவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாயை கட்டணமாக வாங்குகிறார் அர்னால்ட்.
எலன் மஸ்க்கின் புதிய பிசினஸ்
உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலன் மஸ்க், புதிதாக வாசனை திரவிய உற்பத்தியில் இறங்கியுள்ளார். ‘பிரண்ட் ஹேர்’ (Burnt Hair) என்ற பெயரில் புதிய வாசனை திரவியம் ஒன்றை புதன்கிழமையன்று அவர் வெளியிட்டுள்ளார். இந்த வாசனை திரவியத்தின் விலை ஒரு பாட்டிலுக்கு ரூ.8,400.
இதற்கான விளம்பரத்துக்கு மாடல்களையெல்லாம் எலன் மஸ்க் பயன்படுத்தவில்லை. மாறாக அவரே தனது சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். “ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலாரும் இந்த செண்டைப் பயன்படுத்தலாம்” என்று இந்த செண்ட் பாட்டிலைப் பற்றி கூறியுள்ளார் எலன் மஸ்க்.
என்ன இருந்தாலும் 8,400 ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் செண்டை வாங்க வேண்டுமா என்று யோசிக்கிறீர்களா? ஆனால் விலையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எலன் மஸ்க்கின் புதிய தயாரிப்பு என்ற வகையில் பலரும் இந்த செண்ட் பாட்டிலை 8,400 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இந்த வகையில் அறிமுகமான 4 மணி நேரத்தில் 10 ஆயிரம் செண்ட் பாட்டில்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
என்ன இருந்தாலும் பணக்காரன் பேச்சுக்கு இருக்கும் மரியாதையே தனிதான்.
1,161 கிலோ பூசணிக்காய்!
காய்கறிகளிலேயே பெரிய காய் என்று பூசணிக்காயைச் சொல்லலாம். அந்த பூசணிக்காயையே இன்னும் பிரம்மாண்டமாண்டமாக வளர்த்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயியான டிராவிஸ் கினேகர்.
அமெரிக்காவின் மினெஸோடா (Minnesota) என்ற பகுதியைச் சேர்ந்த இந்த விவசாயி வளர்த்துள்ள பூசணிக்காயின் மொத்த எடை 1,161 கிலோ. வெட்டிக் குழம்பு செய்தால் ஒரு ஊருக்கே பரிமாறும் அளவுக்கு விளைந்து நிற்கிறது இந்த பூசணிக்காய். இந்த பூசணிக்காய்க்கு கினேகர் வைத்துள்ள பெயர் ‘மேவரிக்’.
வடக்கு கரோனிலாவில் நடந்த பிரம்மாண்ட பூசணிக்காய்களுக்கான போட்டிக்கு 35 மணிநேரம் பயணம் செய்து இந்த பூசணிக்காயை கொண்டு வந்துள்ளார் கினேகர். பிரம்மாண்டமான பூசணிக்காய்களை விளையவைப்பது இவருக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கெனவே கடந்த 2020-ம் ஆண்டில் 1,065 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளையவைத்து சாதனை படைத்துள்ளார் கினேகர்.
“முதல் பூசணிக்காயை பிரம்மாண்டமாக உருவாக்கியபோது, அது அதிஷ்டத்தால் நடந்ததாக பலரும் சொன்னார்கள். அதைப் பொய்யாக்குவதற்காக இப்போது அதைவிட பிரம்மாண்டமான பூசணிக்காயை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார் கினேகர்.