உச்ச நீதிமன்றத்தின் உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களில் 9159 பத்திரங்களும், அதன் மூலம் வழங்கப்பட்ட 4,002 கோடி ரூபாய் குறித்த தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் மக்களிடமிருந்து நன்கொடை வாங்குவது பல காலமாக நடந்துக் கொண்டிருப்பதுதான். ஆனால், இதில் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பதையும் எந்தக் கட்சி யார் யாரிடம் இருந்து எவ்வளவு நன்கொடை பெற்றது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், 2017இல் மோடி அரசு தேர்தல் பத்திரம் என்னும் புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த பத்திரங்கள் ரூ. 1,000 முதல் ரூ. 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் இருக்கும். இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் இதன் மூலம் நன்கொடை அளிக்கலாம்.
பழைய நன்கொடை முறைக்கும் தேர்தல் பத்திரம் மூலமான நன்கொடைக்கும் இடையேயான வித்தியாசம், பின்னதில் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்கிற விவரத்தை தேர்தல் ஆணையம் உட்பட யாரும் தெரிந்துகொள்ள முடியாது. இதனால், இந்த திட்டத்தை அறிவித்த போதே எதிர் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கியும் இதனை எதிர்த்தது. எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், மோடி அரசு இந்தத் திட்டத்தை 2018 ஜனவரி 29ஆம் தேதி சட்டப்பூர்வமாக்கியது.
இதனையடுத்து, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஒன்றாக விசாரித்த நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவு கடந்த மாதம், ‘தேர்தல் பத்திரம் அரசமைப்பிற்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், “அதுவரை விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்” என்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டது.
ஆனால், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான 44,434 செட் தகவல்களை டிகோட் செய்து, பொருத்திப் பார்த்து ஒப்பிட்டுதான் சொல்லமுடியும். எனவே, ஜூன் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ரிட் மனு தாக்கல் செய்தது.
ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த இந்த மனுவை எதிர்கட்சிகள் விமர்சித்தன. “மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டே எஸ்பிஐ இவ்வாறு தெரிவித்துள்ளது; ஏனெனில், ஜூன் மாதம் தேர்தல் முடிந்துவிடும்” என்பது அவர்களது வாதம்.
இதனிடையே, உச்ச நீதிமன்றமும் அவகாசம் வழங்க முடியாது என்று உறுதியாக இருந்ததால் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை (12-03-24) சமர்ப்பித்தது. தொடர்ந்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணைய தளத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எஸ்பிஐ சமர்ப்பித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, RTIக்கு எஸ்.பி.ஐ தந்த தகவல் படி 28030 தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு 16,518 கோடி ரூபாய். ஆனால், தற்போது தேர்தல் ஆணையத்துக்கு 18,871 பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் மட்டும்தான் கொடுக்கபட்டிருக்கிறது. அதன் மதிப்பு 12,516 கோடி. அதாவது, 9159 தேர்தல் பத்திரங்களின் தகவல்கள் மறைக்கபட்டிருக்கிறது. அதன் மதிப்பு 4,002 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மறைக்கப்பட்ட பத்திரங்கள், 1 மார்ச் 2018 முதல் 12 ஏப்ரல் 2019 வரை விநியோகிக்கபட்டவை. 2019இல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய காலகட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைக்கப்பட்ட 9159 தேர்தல் பத்திரங்களின் மூலம் கொடுக்கப்பட்ட 4,002 கோடி ரூபாயில் 95% பாஜகவுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘யார் அந்த கொடையாளிகள்? ஏன் தகவல்கள் மறைக்கப்பட்டன? என்ற கேள்விகளுக்கு எஸ்.பி.ஐ. பதலளிக்குமா?’ என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.