நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற டைம்ஸ் நவ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த நாளிலேயே இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி மற்றும் செய்திப் பத்திரிகையான இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்பு முடிவுகளும் பாஜக கூட்டணிக்கு சாதகமான செய்தியை வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளையும் வெல்லும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பாஜக 304, காங்கிரஸ் 71:
சி வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா டுடே நடத்தியுள்ள இந்த கருத்துக் கணிப்பில் இப்போதைய சூழலில் தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களில் வெற்றி பெறும். இதில் பாஜக தனியாக 304 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி 166 இடங்களை வெல்லும். இதில் காங்கிரஸ் கட்சி தனியாக 71 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிஜு ஜனதா தளம், பிஆர்எஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 42 இடங்களில் வெல்லும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இந்தியா அலை:
இந்திய அளவில் மோடி அலை வீசும் சூழலில், தமிழகத்தில் இந்தியா அலை வீசுவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இப்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் ஆளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு 47 சத ஆதரவும், அதிமுக கூட்டணிக்கு 38 சதவீத ஆதரவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீத ஆதரவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 35,801 நபர்களிடம் பேசி இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மக்களை கவர்ந்த ராமர் கோயில்:
பாஜக ஆட்சியின் முக்கிய சாதனையாக ராமர் கோயில் கருதப்படுவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசின் முக்கிய சாதனையாக ராமர் கோயிலை 42 சதவீதம் பேர் கருதுகிறார்கள். உலகளாவிய அளவில் இந்தியாவின் பெருமையை அதிகரித்ததை முக்கிய சாதனையாக 19 சதவீதம் பேரும், காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 370-ம் எண் சட்டப்பிரிவை வாபஸ் பெற்றதை 12 சதவீதம் பேரும் முக்கிய சாதனையாக கருதுகிறார்கள்.
முக்கிய பிரச்சினையாகும் விலை உயர்வு:
இந்த தேர்தலில் பாஜக அரசின் முக்கியமான தலைவலியாக விலைவாசி உயர்வு இருக்கப் போகிறது. விலைவாசியை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்து விட்டதாக 24 சதவீதம் பேர் நினைக்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு அடுத்த்தாக வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசின் தோல்வியாக 18 சதவீதம் பேர் கருதுகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு திறமையாக செயல்படவில்லை என்று 13 சதவீதம் பேர் நினைக்கிறார்கள்.
மோடி தலைமையிலான அரசு ஊழலை கட்டுப்படுத்தியதா என்ற கேள்விக்கு 46 சதவீதம் பேர் மோடி அரசு ஊழலை கட்டுப்படுத்தியதாகவும், 47 சதவீதம் பேர் ஊழலை கட்டுப்படுத்தவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.