பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு மீண்டும் ‘பொய்’ என சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. என்ன பேச்சு? ஏன் விமர்சிக்கப்படுகிறது? உண்மை என்ன? பார்ப்போம்…
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2020, ஆகஸ்ட் மாதம் ‘கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை’ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஜெர்மனி உள்ள நெடுஞ்சாலையில் பயணித்த அனுபவம் குறித்து பேசியிருந்தார். அதன் வீடியோ, அண்ணாமலை பேசியது உண்மையா என்ற கேள்வியுடன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதில் அண்ணாமலை பேசியது இதுதான்… “ஜெர்மனியில் முனீச், பெர்லின் என இரண்டு நகரங்கள் உள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பொருளாதார நகரங்கள். அங்கு A6 என ஒரு நெடுஞ்சாலை உள்ளது. மொத்தம் 12 லைன். 6 லைன் இந்தப் பக்கம், 6 லைன் அந்தப் பக்கம். அதில் குறைந்த பட்ச வேகம் மணிக்கு 240 கி.மீ. 240 கி.மீ. கீழே போகக் கூடாது.
இந்தியாவில் 100 கி.மீ.-க்கு மேல் சென்றால் கார் ஆடுமே, பயமா இருக்கும். விபத்து ஆகிவிட்டால் என்ன செய்வது? பிரேக் பிடிக்குமா? ஏன் என்றால் நம்ப ஊர் கல்ச்சரில் நாம் வளர்ந்தவர்கள். அங்கே நாங்கள் ஒரு வாடகை கார் எடுத்துச் செல்லும்போது டிரைவர் சொன்னது, ‘என்ன சார் மெதுவாகச் செல்கிறீர்கள். அழுத்துங்க சார், அழுத்துங்க சார். 180, 220, 240, 260 தொடுகிறோம் அந்த நெடுஞ்சாலையில். கிட்டத் தட்ட 600 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 20 நிமிடத்தில் கவர் செய்கிறோம். அப்போதுதான் தெரிந்தது. ஒரு வளர்ந்த நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று”.
அண்ணாமலையில் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அண்ணாமலை குறிப்பிடும் சாலையில் பயணித்த அனுபவம் குறித்து ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் எழுதியுள்ள பதிவில், ‘அண்ணாமலை சொல்வது போல் ஜெர்மனியில் முனீச், பெர்லின் இடையிலான சாலையின் பெயர் A6 கிடையாது A9. மேலும் அந்த நெடுஞ்சாலை 12 லைன் (பாதை) கொண்டது அல்ல. ஒரு பக்கம் 3 பாதை என்கிற வீதத்தில் இரண்டு பக்கமும் சேர்த்து 6 பாதைகளை மட்டுமே கொண்டது. கூடுதலாக இரண்டு பக்கமும் தலா ஒரு அவசர பாதையும் (Emergency லைன்) உள்ளது.
ஜெர்மனியில் 13,000 கி.மீ தொலைவிற்கு அமைந்துள்ள ஆட்டோபான் நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக எத்தனை கி.மீ வேகத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். வேகக் கட்டுப்பாடு என்பது கிடையாது. ஆனால், அரசு பரிந்துரைத்த அதிகபட்ச வேகம் என்பது 130 கி.மீ. அதாவது, இந்த சாலையில் 130 கி.மீ வேகத்தில் பயணம் செய்தல் பாதுகாப்பானது என அந்நாட்டு அரசு பரிந்துரைக்கிறது.
இச்சாலையில் செல்வதற்கு எனக் குறைந்த பட்ச வேகமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆறு வழிச்சாலையில் குறைந்த பட்ச வேகக் கட்டுப்பாடுகள்: ஃபாஸ்ட் லைன் – மணிக்கு 110 கி.மீ., மிடில் லைன் – 90 கி.மீ., ஸ்லோ லைன் – 60 கி.மீ.
அண்ணாமலை சொல்வது போல் 240 கி.மீ குறைந்த பட்ச வேகம் கிடையாது.
2017-2022 தரவின்படி, ஆட்டோபான் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 142 கி.மீ.
நாங்கள் முனீச்சில் இருந்து பெர்லினுக்கு (529 கி.மீ) A9 நெடுஞ்சாலையில் சராசரியாக 120 கி.மீ வேகத்தில் பயணித்து 7 மணி நேரத்தில் சென்றடைந்தோம். காரில் 200 கி.மீ வேகத்திலும் செல்ல முடியும். ஆனால், நெடுஞ்சாலை முழுவதும் அதே வேகத்தில் செல்வது கடினம்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆட்டோபான் நெடுஞ்சாலையில் அதிவேக கட்டுப்பாடு இல்லாததால் மணிக்கு 200 கி.மீ. வேகத்திற்கு மேல் காரில் பயணித்த வீடியோக்களும் இணையத்தில் உள்ளன. அவற்றையும் சிலர் பகிர்ந்துள்ளார்கள்.
இந்த சர்ச்சை குறித்து, பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், “240 கிமீ வேகம் என்பது அண்ணாமலை பொய். அவன் வாயைத் திறக்கும் போதெல்லாம் பொய். அந்த வேகத்தில் அவருக்கு பிஜேபி டிக்கெட் கிடைக்காது, வேகமாக ஓட்டினால் ஜெர்மனியில் போலீஸ் டிக்கெட் மட்டும் கிடைக்கும் அல்லது அந்த வேகத்தில் யாருக்கும் சொர்க்க டிக்கெட்தான் கிடைக்கும். இளைஞர்களுக்கு மோசமான உதாரணம்’ என்று ட்விட் செய்துள்ளார்.
அண்ணாமலையின் பேச்சை பகிர்ந்து நடிகர் எஸ்.வி. சேகர் வெளியிட்டுள்ள ட்விட்டில், “படிப்பிற்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை என நிரூபிக்கப்பட்ட தருணம். உளறுவாய். சிரிப்பு போலீஸ். IPS படிச்சு ஒழுங்கா வேலை பாக்காம 6 வருஷத்துல டிஸ்மிஸ் பண்ணட்டுமா, இல்ல நீயே ராஜீனாமா பண்ணிட்டு ஓடிடுங்கிற மாதிரி திருட்டு ஆடியோ வீடியோ பண்ணி ஓடி வரத்துக்கு பதில் படிக்காத ஒருத்தனா இருக்கிறது மேல். ஜோதி பிரகாசமா எரியுது’ என காட்டமாக ட்விட் செய்துள்ளார்.
இதற்கு பதில் கூறியுள்ள பாஜகவினர் சிலர், “ஜெர்மனியில் சாலை தரம் எப்படி இருக்கு? நம்ம எப்படி இருக்கனும் என்று அண்ணாமலை பேசி இருக்கார். அதை விட்டுட்டு ஸ்பீட் என்னன்னு கண்டுபிடிச்சுட்டு இருக்காங்க. பைத்தியக்காரங்க” என்று காட்டமாக பதிவிட்டுள்ளனர்.
நடிகர் எஸ்.வி. சேகருக்கு பதலளித்து, அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ள ட்விட்டில், “கொஞ்சம் உங்கள் ஞானத்தை ‘German autobahn’ என்றால் என்ன என சமூக வலைதள பக்கங்களில் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் அல்லது தங்களின் அறிவுள்ள நண்பர்களிடம் கேட்டு அறிந்து!! கொண்டு!! பின்னர் அரசியல் பேசலாம்!!!” என தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசியல் விமர்சகரும் பாஜக ஆதரவாளருமான டாக்டர் சுமந்த் ராமன், “நான் ஜெர்மனியில் ஆட்டோபான்ஸில் பயணம் செய்திருக்கிறேன், குறைந்தபட்சம் 240 கிமீ வேகத்தைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சில பாதைகளில் வேக வரம்பு இல்லை. மேலும் வேகமான பாதையில் செல்லும்போது வாகன ஓட்டிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வேகம் உள்ளது. ஆனால், நிச்சயமாக எனக்கு தெரிந்தபடி, குறைந்தபட்ச வேகம் மணிக்கு 240 கி.மீ.” என்று தெரிவித்துள்ளார்.
நல்ல பொழுதுபோக்கு.