இந்திய பொருளாதாரம் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சியைக் கண்டுள்ளது, பொருளாதார நிபுணர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்? இது நீடிக்குமா?
நடப்பு நிதியாண்டின் (2022-23) ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 16.2% இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. இந்நிலையில், ஏப்ரல் – ஜூன் காலாண்டு ஜிடிபி விவரத்தை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்; உலகின் வட பகுதி நாடுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பம், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தி குறைவு; இவற்றால் சர்வதேச அளவில் உயர்ந்துள்ள விலைவாசி, மக்கள் மத்தியில் வாங்கும் தன்மை குறைந்துள்ளது போன்றவை பல்வேறு நாடுகளின் உற்பத்தியை பாதித்துள்ளன.
உதாரணமாக ஏப்ரல் – ஜூன் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 0.4% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற நாடுகளில் ஸ்பெயின் 1.1%, இத்தாலி 1.0%, பிரான்ஸ் 0.5%, ஜெர்மனி 0.1%, யுகே -0.1%, யுஎஸ் -0.6% என்றுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஜிடிபி 13.5% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த 16.2% இல்லையென்றாலும் இந்த வளர்ச்சி நம்பிக்கை தரும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 20.1% ஆக இருந்தது. ஆனால், அதன்பிறகு குறைந்து ஒற்றை இலக்கத்திலேயே வளர்ச்சி கண்டு வந்தது. 2021 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 8.4%, அக்டோபர் – டிசம்பரில் 5.4%, 2022 ஜனவரி – மார்ச்சில் 4.1% என்னும் நிலையே இருந்தது. இதனால்தான், 2022 ஏப்ரல் – ஜூன் காலாண்டின் 13.5% வளர்ச்சி என்பது பலருக்கும் மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சிக்கு காரணம்
முக்கியத் துறைகளைப் பொறுத்தவரைக்கும் சிலவற்றில் உற்பத்தி உயர்ந்துள்ள அதேநேரம் சில துறைகளில் குறைந்துள்ளது. வேளாண் துறையில் கடந்த ஆண்டில் 2.2% மட்டுமே வளர்ச்சி இருந்த நிலையில் தற்போது 4.5% வளர்ச்சி அடைந்துள்ளது.
கட்டமைப்பு 16.8%; ரியல் எஸ்டேட், தொழில்ரீதியான சேவை 9.2%; பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் மற்ற துறைகள் 26.3%; மின்சாரம், கேஸ் மற்றும் பயனபாட்டு துறைகள் 14.7% வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைத்துறை 2021-22 முதல் காலாண்டில் 34.3% இருந்தது. தற்போது வெளியாகியுள்ள 2022-23 முதல் காலாண்டு அறிக்கையில் 25.7% என குறைந்துள்ளது.
இதுபோல் உற்பத்தி துறையும் சரிவினை கண்டு 4.8% மட்டுமே வளர்ந்துள்ளது. சுரங்கத் துறை கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 18% வளர்ச்சி அடைந்த நிலையில் தற்போது 6.5% மட்டுமே வளர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்திற்கு முன்பு 9.9% ஆக இருந்த 8 முக்கியத் துறை உற்பத்தி பிரிவுகளின் வளர்ச்சி அளவீடுகள், 2022-23 முதல் காலாண்டில் 4.5% ஆக குறைந்துள்ளது என மத்திய அரசின் தரவுகள் கூறுகிறது.
ஆனாலும் வேளாண்மை, சேவைத்துறை சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனியார் நுகர்வு அதிகரிப்பு, சர்வதேச அளவில் நிலவி வந்த மந்த நிலைக்கு மத்தியிலும் இங்கு பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வளர்ச்சி நீடிக்குமா?
உறுதியாக சொல்ல முடியாது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகளவில் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்னும் நீடிக்கிறது. மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களும் பணவீக்கமும் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, வரும் காலாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் இது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.