சிவகார்த்திகேயனின் டான் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சுவராசியம்…
விழா தொடங்கிய சில நிமிடங்களிலேயே உதயநிதி ஸ்டாலின் வந்துவிட்டார். அவரை உடனடியா பேசவும் மேடைக்கு அழைத்துவிட்டார்கள். திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் பிஸியாக இருக்கும் உதயநிதி இந்த விழாவில் கலந்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவருடைய ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் ‘டான்’ படத்தை வெளியிடுகிறது.
சிரிப்புடன் பேசத் தொடங்கினார் உதயநிதி.
சென்னை தனியார் கல்லூரியில் 6-ம் தேதி நடைபெற்ற ’டான்’படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், “ உண்மையா சொல்லணும்னா இப்ப சினிமாவுல டான்னா அது சிவாதான். சிவா வைத்ததுதான் இப்போது சட்டம். அதுக்காக ட்ரெய்லர்ல அப்படியொரு டயலாக் வச்சிருக்கிங்க…. (தொகுப்பாளர் விஜய்யை திரும்பிப் பார்த்து ) நீங்க ரெண்டு பேர் சேர்ந்து அப்படியொரு டயலாக் வச்சிருக்கிங்க பாத்திங்களா? (சும்மா லைட்டா தான்னே என்று பதிலளித்தார் விஜய்)
தமிழ் சினிமாவிலிருக்கும் இரண்டு டான்களில் ஒருவர் சிவா. தமிழ் சினிமாவின் மற்றொரு டான் இசையமைப்பாளர் அனிருத். இவர்கள் தனித் தனியாக படங்களில் வேலை செய்தாலே அது வெற்றி படமாக அமையும். இவர்கள் இணைந்து பணியாற்றினால் கண்டிப்பாக அமோக வெற்றி பெறும்.
இந்தப் படம் காலேஜ் கலாட்ட படம்னு நீங்க நினைச்சிக்கிட்டு இருப்பிங்க. ஆனா ஸ்கூல்ல நடக்குற மாதிரி ஒரு எபிசோட் இருக்கு. அதுல் சிவாவும் பிரியங்காவும் நல்லா பண்ணியிருக்காங்க. காலேஜ் போர்ஷன்ல எஸ்.ஜே. சூர்யா சார் நல்லா பண்ணியிருக்காங்க. படத்தின் கடை அரை மணி நேரத்துல சமுத்திரகனி அண்ணன் சிறப்பா பண்ணிருக்காங்க” என்றார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட ட்ரெய்லர் டயலாக் இதுதான். அந்தக் காட்சியில் சிவகார்த்திகேயனும் விஜய்யும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
சிவகார்த்திகேயனிடம் விஜய் பேசும்போது ‘பேசாம அரசியலுக்கு போயிருலாமா?’ என்று கேட்பார். அதற்கு சிவகார்த்திகேயன், ‘அதுக்கு நிறைய பொய் பேசணுமே’ என்று பதிலளிப்பார்.
இந்த வசனங்களைதான் உதயநிதி மறைமுகமாக சிரித்துக் கொண்டே குறிப்பிட்டார்.
இறுதியில் பேசிய சிவகார்த்திகேயன், “ ட்ரெய்லர்ல அந்த வசனம் வந்ததும் உதயநிதி சார் என்னை திரும்பிப் பார்த்தாரு. உடனே நான் டக்குனு திரும்பி அந்த வசனம் முழுக்க முழுக்க கற்பனை. எனக்கும் இந்த வசனத்திற்கும் சம்மந்தம் இல்லை. இன்னொன்னும் சொல்லிறேன் சார் இந்த வசனத்தை உங்க பக்கத்தில உட்கார்ந்து பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலை வரும்னு நினைக்கல. சிபி இப்படி கோர்த்துவிட்டுட்டார்னு சொன்னேன். அதுக்கு சார், ஒகே ஒகேனு சிரிச்சுக்கிட்டே சொன்னார். இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அந்த டயலாக்கை மட்டும் எடுத்துருங்களேன்னு சொல்லியிருப்பேன்.
இது ஒரு ஜாலியா வச்ச டயலாக்தான், சாரும் இதை ஜாலியா எடுத்துக்கிட்டாங்க. சிபி, இதை மட்டும் நீ பண்ணாம இருந்திருக்கலாம்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
சிவகார்த்திகேயன் பேச்சுக்கும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கும் அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது.