No menu items!

ட்விட்டர் – எப்படி வாங்கினார் எலன் மஸ்க்?

ட்விட்டர் – எப்படி வாங்கினார் எலன் மஸ்க்?

33,70,44,62,00,000.00 ரூபாய். எண்ணிப் பார்க்க முடிகிறதா? 33 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. இத்தனை பணத்தை (44 பில்லியன் டாலர்) கொடுத்து சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியிருக்கிறார் எலான் மஸ்க்.

உலகப் பணக்காரர்களின் இன்றைய நம்பர் ஒன் எலான் மஸ்க்குக்கு இப்போது 50 வயதாகிறது. பிறந்தது வளர்ந்தது எல்லாம் தென்னாப்பிரிக்காவில். 10 வயதிலேயே கம்ப்யூட்டர் மீது ஆர்வம் வந்து கற்றுக்கொண்டு, மேற்படிப்புக்காக கனடா சென்று, அங்கு சில காலம் கல்வி பயின்று 1994-ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அடுத்த 28 வருடங்களில் உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தை பிடித்துவிட்டார். அதி ஆச்சரியத்தை தரும் வளர்ச்சி.

கல்லூரி முடித்ததுமே 1995-ல் ஜிப்2 (Zip2) என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை மஸ்க்கும் அவரது சகோதரரும் இணைந்து தொடங்கினார்கள். அடுத்து எக்ஸ்காம் என்றொரு நிறுவனம். அதற்கடுத்து ஸ்பேஸ் எக்ஸ். இப்படி தொடர் நிறுவனங்கள். அனைத்திலும் வெற்றி. அடுத்து டெஸ்லா. எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதுதான் மஸ்க்கின் தொழில் வரலாறு.

எதையும் ஒரு சாகச உணர்வோடு அணுகுவது எலன் மஸ்க்கின் குணம். இந்த குணம் அவரது தந்தை மற்றும் தாத்தாவிடமிருந்து வந்திருக்க வேண்டும். எலன் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் என்ஜினியர், பைலட், ரியல் எஸ்டேட் என்று பல தொழில்கள் செய்தவர். தாத்தா ஜோஷ்வா ஒற்றை எஞ்சின் விமானத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்தை அழைத்துச் சென்ற சாகசத்தை செய்தவர். இப்போது புரியும் ஏன் எலன் மஸ்க் இப்படியிருக்கிறார் என்று.

ட்விட்டரை வாங்கியதன் மூலம் உலகத்தின் கவனத்தை தன் மீது திருப்பியிருக்கிறார் மஸ்க்.

2017-லேயே ட்விட்டரை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார் மஸ்க். அப்போதைய ஒரு பதிவில் ‘ஐ லவ் ட்விட்டர்’ என்று குறிப்பிட்டிருந்தார். உடனே ஒரு ட்விட்டர் பதிவாளர், ‘நீங்கள் ஏன் ட்விட்டரை வாங்கக் கூடாது?” என்று பதிவிட, அதற்கு பதிலளித்த மஸ்க், ‘எவ்வளவு விலை?’ என்று கேட்டிருந்தார்.

இந்த ஏப்ரல் 14-ல் ட்விட்டரை வாங்க விரும்புவதாக அறிவித்தார் மஸ்க். அப்போது அவர் சொன்ன தொகை 41 மில்லியன். இந்த வாய்ப்பை அவர்கள் ஏற்கவில்லை என்றால் என்னுடைய பங்குகள் குறித்து நான் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார். சுமார் 9 சதவீத ட்விட்டர் பங்குகளை எலன் மஸ்க் வைத்திருந்தார்.

ட்விட்டர் நிர்வாகம் முதலில் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவர்களுக்கு வேறு வழி இல்லை. எலன் மஸ்க்கின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் ட்விட்டர் பங்குகளின் மதிப்பு ஏறும்.

ட்விட்டர் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு செல்வ மதிப்பு கூடும். ஆனால், மஸ்க்கின் யோசனையை ஏற்கவில்லை என்றால் அவர் வைத்திருக்கும் பங்குகளை விற்பார். பங்கு சந்தையில் ட்விட்டரின் பங்கு மதிப்பு குறையும். பங்குதாரர்களுக்கு அது நஷ்டத்தை தரும்.

அவர்கள் ட்விட்டர் இயக்குநர்களை கேள்வி கேட்பார்கள். பதில் சொல்ல இயலாது. கிட்டத்தட்ட கழுத்தை இறுக்கிய நிலையில் ட்விட்டர் பங்குகள் மஸ்க்குக்கு விற்கப்பட்டிருக்கின்றன.

ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கியதுமே ட்விட்டர் பங்கு மதிப்பு 6 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இனி ட்விட்டர் முழுவதும் எலன் மஸ்க்கின் வசம். ட்விட்டரில் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தப் போவதாக உறுதியளித்திருக்கிறார். பாட்ஸ் எனப்படும் பொய் பதிவர்கள் களையெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். இவை மட்டுமின்றி ட்விட்டரை ‘ஒபன் சோர்ஸ்’ முறைக்கு மாற்றப் போவதாகவும் கூறியிருக்கிறார். இந்த மாற்றங்களை எப்படி செய்யப் போகிறார் என்பது குறித்து விளக்கங்கள் இல்லை.

கருத்து சுதந்திரத்தைக் குறித்து பேசும் எலன் மஸ்க், தன்னுடைய கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் தெரிவித்த பதிவர்களை ‘ப்ளாக்’ செய்திருக்கிறார். இவரா கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துவார் என்று நெட்டிசன்கள் இப்போதே கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எலன் மஸ்க் கரங்களுக்கு ட்விட்டர் வந்ததால் அதில் மீண்டும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் இணைவார் என்று கருதப்பட்டது.

அமெரிக்க தேர்தலின் போது வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பதிவிட்டார் என்ற காரணம் கூறி ட்விட்டரிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இப்போது மீண்டும் அவர் ட்விட்டருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிரம்ப் மறுத்துவிட்டார். இனி ட்விட்டர் பக்கமே வர மாட்டேன் என்று இன்று கூறியிருக்கிறார்.

ட்விட்டரை நிறுவியவர்களில் ஒருவர் ஜேக் டார்சே. இவர் எலன் மஸ்க்கின் நண்பர். ட்விட்டரின் தலைமைப் பொறுப்பிலிருந்த இவர் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து விலகினார். ஜேக் மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கான வாய்ப்புகள் கூடியிருக்கின்றன.

இப்போது ட்விட்டர் சிஇஒ ஒரு இந்தியர். பராக் அகர்வால். நவம்பர் 2021-ல்தான் பொறுப்பேற்றிருந்தார். அவர் இனி தலைமைப் பொறுப்பில் தொடர்வாரா என்பது சந்தேகத்துக்குள்ளாகியிருக்கிறது. ஏனென்றால், இப்போதைய ட்விட்டர் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லாதவர் எலன் மஸ்க், அதனால் நிர்வாகத்தை மாற்றியமைப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வருடத்துக்கு பதவியிலிருந்து பராக் அகர்வால் நீக்கப்பட்டால் அவருக்கு ட்விட்டர் ஈடு தொகை வழங்க வேண்டும். எவ்வளவு தெரியுமா?

42 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 321 கோடி ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...