இந்தியா முழுவதும் தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் நேற்றை விட இன்று அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90% பேருந்துகள் இயக்கப்படுவதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
துபாய், அபுதாபி பயணங்களை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நாடு திரும்பினார். இந்த பயணத்தின் வாயிலாக லூலூ நிறுவனம் தமிழகத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்திற்கு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் 14,700 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது துபாய், அபுதாபி நாடுகளில் வாழும் தமிழர்களையும் முதல்வர் சந்தித்தார்.
ஐஐடி மாணவி பலாத்காரம் – மாணவருக்கு ஜாமீன்!
சென்னை ஐஐடி மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான முன்னாள் மாணவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவியை, ஐஐடி ஆராய்ச்சி மாணவரான கிங்ஷூக் தேவ் சர்மா என்பவர், திருமணம் செய்வதாக உறுதி கூறி, 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரது நண்பர்களும் அம்மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப் பதியப்பட்டு விசாரணையில் கிங்ஷீக்தேவ் சர்மா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கிங்ஷீக்தேவ் சர்மாவை நீதிமன்றம் இன்று ஜாமினில் விடுவித்துள்ளது.
கஞ்சா வேட்டையில் இறங்கிய டிஜிபி சைலேந்திர பாபு
பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஏப்ரல் 27 வரை கஞ்சா வேட்டை நடக்கும் என அறிவித்துள்ளார். கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களை விற்பவர், கொள்முதல் செய்வோரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்து விற்போரை கண்காணிக்கத் தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை!
தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. மார்ச் 7ஆம் தேதி தங்கம் சவரன் ரூ. 40 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டது. பின்னர் சரியத் தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 160 குறைந்து 38,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராம் 72.40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.