No menu items!

மிஸ் ரகசியா: ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பு ஏன்?

மிஸ் ரகசியா: ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பு ஏன்?

“மூப்பில்லா தமிழ்த் தாயே..” என்ற ஏ.ஆர் ரஹ்மானின் பாடலை மெல்லிய குரலில் பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரகசியா.

”பாட்டெல்லாம் அப்புறம். அமைச்சர் ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டிருக்கிறாரே என்ன காரணம்? அதை சொல்லு முதல்ல” என்று ஆர்வமாய் கேட்டோம்

“ராஜகண்ணப்பன் அமைச்சர் பதவியே பறிக்கப்படும் என்றுதான் முதலில் பேச்சு இருந்தது. ஆனால், இப்போது இலாகா மாற்றம் மட்டும் நடந்திருக்கிறது. அவர் மேல ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். போக்குவரத்து துறைக்கு தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கினதுலேயே பிரச்சினை ஆரம்பிச்சிருச்சு. அதற்கு பிறகு தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுக்கள்.

கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்து பேசும்போது உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. உதாரணமாய் அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தபோது அமைச்சர் ஆடம்பர நாற்காலியில் அமர்ந்துகொண்டு திருமாவை பிளாஸ்டிக் சேரில் அமரச் செய்தார் என்ற விமர்சனம் சமூக ஊடகங்களில் அதிகமாய் பரவியது.

திருமாவளவன் மட்டுமல்லாமல் யார் அவரை சந்திக்க சென்றாலும் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற கருத்தும் உண்டு. இதற்கெல்லாம் உச்சமாக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரனை சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார் என்ற குற்றச்சாட்டு வந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முதல்வர் இந்த முறை நடவடிக்கை எடுத்துட்டார். எதையும் பொறுத்துக்கலாம், ஆனா சாதி ரீதியாக அவமானப்படுத்துவதை ஏத்துக்க முடியாதுனு கூறினாராம். இந்த நடவடிக்கை மத்த அமைச்சர்களுக்கும் பயத்தை கொடுத்திருக்கு” என்றார் ரகசியா.

“சமூக நீதி, சமத்துவம்னு பேசுற கட்சியான திமுக சரியான நடவடிக்கைதான் எடுத்துருக்கு. சரி உன் பாட்டை பாடு. ஏ.ஆர். ரஹ்மான் பத்தி ஏதோ சொல்ல வந்தியே?”

பாட்டை மீண்டும் தொடர்ந்தார் ரகசியா.

“அட நல்லா பாடறியே. உனக்கு நிருபர் வேலை மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன் நல்ல பாடகியாவும் இருக்கியே” என்று ரகசியாவை வரவேற்றோம்.

“இப்படித்தான் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆச்சரியப்பட்டு இருக்கார். ஆனா என்னைப் பாத்து இல்லை. முதல்வரைப் பார்த்து. துபாய்ல ஏ.ஆர்.ரஹ்மானோட இசைக்கூடத்துக்கு முதல்வர் போயிருக்கார். அப்ப ‘மூப்பில்லா தமிழ்த் தாயே’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் காட்ட, முதல்வரும் கூடவே பாடி இருக்காரு. இதைக்கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான், ‘உங்க குரல் நல்லா இருக்கு. எனக்கு ஒரு பாட்டை நீங்க பாடணும்’னு கேட்க முதல்வரும் சம்மதிச்சு இருக்கார். தமிழ், திராவிடக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல்வர் பாடற பாட்டு விரைவில் வரலாம் என்று ரஹ்மான் ஸ்டுடியோ வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன”

நல்ல விஷயம்தான். ஆமா, துபாய், அபுதாபி பயணத்துக்கு போன முதல்வர் அங்கிருந்து நேரா டெல்லி போறதாதானே போன தடவை சொல்லியிருந்தே. ஆனா முதல்வர் சென்னைக்கு வந்துட்டாரே. ரகசியா சொன்னது எப்படி தப்பா போச்சு?”

“அது ஒண்ணும் இல்லை. அதிக நாட்கள் தொடர்ந்து சென்னையில இருந்து விலகி இருந்தா பைல்கள் ஏகத்துக்கும் தேங்குமேன்னு யோசிச்சிருக்காரு முதல்வர். கட்சிப் பணிகளும் காத்திருக்கு. அதனாலதான் சென்னைக்கு வந்துட்டாரு. டெல்லி பயணத்தை 31-ம் தேதிக்கு தள்ளி வச்சிருக்காரு. இந்த தடவை டெல்லிக்கு போனதும் முதல்ல பிரதமரை சந்திக்கப் போறாராம் முதல்வர். திமுக தலைமை அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமருக்கு கொடுத்துட்டு அப்படியே அமித் ஷாவை சந்திக்கறது அவரோட திட்டம்”

“ஓஹோ?”

“ஆமாம். அமித் ஷா கிட்ட அழைப்பிதழைக் கொடுக்கும்போதே அண்ணாமலையார் பத்தியும், ஆளுநர் பத்தியும் தன்னோட அதிருப்தியை அவர் வெளிப்படுத்துவார்னு திமுகவினர் பேசிக்கிறாங்க?

“எதிர்க்கட்சித் தலைவர்களை எப்ப சந்திக்க போறாராம்?”

“1-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கப் போறாராம். 2-ம் தேதி நடக்கிற திறப்பு விழாவுக்கு வரப்போற தலைவர்களை வச்சு தேசிய அரசியல் போற போக்கு தெரியும்.”

“திமுக தலைமை அலுவலகம் எப்படி இருக்காம்?”

“சென்னையில இருக்கிற அறிவாலயத்தைப் போல ரொம்ப பிரம்மாண்டமா கட்டியிருக்காங்க. 3 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்துல தனி அறைகள், சந்திப்பு கூடம், பொது நூலகம்னு பல விஷயங்கள் இருக்கு. டெல்லியில் ஒரு முக்கிய கட்டிடமா திமுக அலுவலகம் மாறும் என்று கூறுகிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தல் சூழலில் திமுகவின் டெல்லி அலுவலகம் எதிர்க் கட்சியினர் ஒன்றுபடும் முக்கிய இடமாக இருக்கப் போகிறது என்று கூறுகிறார்கள்”

“அதிமுக விஷயம் ஏதாவது தெரியுமா?”

“சசிகலாவுக்கு இடமில்லைன்னு நாம சேர்ந்து தீர்மானம் நிறைவேத்திட்டு நீங்க மாத்தி, மாத்தி பேசறதான்னு பன்னீர்கிட்ட எடப்பாடி கோவிச்சிருக்கார். அதே நேரத்தில் இவ்விஷயத்தில் எடப்பாடியார் நினைத்த அளவுக்கு ஆள்சேர்க்க முடியவில்லை. எடப்பாடியாருக்கு உற்ற நண்பரா இருந்தவர் ஒரு மாஜி நீதியரசர். அவர்தான் டெல்லிக்கு இவர் சார்பில் தூது போயிட்டு இருந்தார். சசிகலாவின் கொங்குநாட்டு பயணத்தின்போது அவரை இந்த நீதியரசர் சந்திக்க, எடப்பாடிக்கு அதிர்ச்சி.”

“எடப்பாடிக்கு தொடர்ந்து அதிர்ச்சி செய்திகளாகவே இருக்கு. பன்னீர் சொன்னது அவரது தனிப்பட்டக் கருத்து என்று கூறியிருக்கிறாரே..?”

“ எடப்பாடி – பன்னீர் எப்போதுமே அப்படிதானே. எடப்பாடிக்கு இன்னொரு பிரச்சினையும் வந்திருக்கு. அவருக்கு ஆதரவா செயல்பட்டு வந்த ராயபுரத்துக்காரர் வருத்தத்துல இருக்காராம். அதிமுகவில் நிறைய செய்தித் தொடர்பாளர்கள் இருந்தாலும் நான் மட்டும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து மீடியாவுக்கு பேட்டி கொடுத்தேன். அதன் விளைவாகத்தான் இப்போது ஊர் ஊராகப் போய் கையெழுத்து போடவேண்டி இருக்கிறது. மற்றவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். நான் மட்டும் என்ன இளிச்சவாயனா? என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கிறாராம் ஜெயமானவர்”
“பாவம்தான்”

“ஆமாம். தமிழக பாஜகவில் தலைவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பலர் அவருக்கு எதிராக வெளிப்படையாகவே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக பாஜக நிர்வாக குழுக்களை மாற்றியமைக்கும் முயற்சி அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது என்கிறார்கள். பலரை நீக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். ஆனால் கட்சியின் பழைய ஆட்கள் அவரது இந்த நகர்வை விரும்பவில்லையாம். நாளடைவில் அவருக்கு எதிராகவே இந்த நடவடிக்கைகள் முடியலாம்”


”நீங்கள்தான் கட்சிக்குள் எதிர்ப்பு என்கிறீர்கள். ஆனால் ஆளும் திமுகவுக்கு எதிராக அவர்தானே முனைப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். கட்சியை வளர்ப்பதற்கு செய்ய வேண்டியதை செய்துக் கொண்டுதானே இருக்கிறார்?”

”அரசியல்ல ஆளும் கட்சியை விமர்சனம் செய்வது மட்டுமே வளர்ச்சி தராது. உட்கட்சியை விவகாரங்களை நீங்கள் சரியாக கையாளவிட்டால் காலை வாரிவிட்டுவிடும்”

“இப்பதான் காலேஜ் முடிச்சு ஜர்னலிசம் வந்த அதுக்குள்ள அரசியல் ஞானி போல பேசுற”

” இன்னும் சொல்றேன் கேட்டுக்குங்க. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றி அப்பதவியை வானதிக்கு தரலாம் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. வானதிக்கு டெல்லி மேலிடம் நம்பும் ஒரு பத்திரிகையாசிரியரின் ஆதரவும் இருக்கிறதாம்”

“அப்படியா? சரி. ஸ்டாலினின் துபாய் பயணம் அவரோட மதிப்பை கூட்டியிருக்கு போல, வருங்கால பிரதமர் என்று திமுகவினர் புகழ்கிறார்களே?”

“ஸ்டாலின் தன்னை பலப்படுத்திக்கொண்டு வருகிறார். கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டை பிரம்மாண்ட ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக மாற்றி, ராஜாஜி ஹால் அருகே உள்ள ஸ்பெஷாலிடி மருத்துவமனையை மாற்றும் அளவுக்கு தைரியம், சக்தி வந்துள்ளது. ஓமந்தூரர் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மீண்டும் மாற்றப்படலாம். அப்படி மாற்றினாலும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு வராது. அந்த அளவுக்கு ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி இருக்கிறது என்று பாஜகவின் தமிழக ஆலோசகர் மட்டுமில்லாமல் உளவுத்துறையும் டெல்லி மேலிடத்துக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது”

“ஓஹோ?”

“ஆட்சியில் மட்டுமில்லாமல் குடும்ப ரீதியாகவும் பலமாகி வருகிறார் ஸ்டாலின். அவருக்கும், அழகிரிக்கும் இடையே கடந்த சில காலமாக இருந்துவரும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருகிறது என்கிறார்கள். இருவருக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும், துபாய்க்கு செல்லும்முன் அவரிடம் முதல்வர் பேசியதாகவும் கூறுகிறார்கள். விரைவில் இருவரும் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை”

“இதயம் இனிக்கட்டும்… கண்கள் பனிக்கட்டும்…”

“ஆமாம். கோவை மகேந்திரனுக்கு இது சுக்ர திசை காலம். கமலிடம் இருந்து பிரிந்ததில் இருந்தே அவருக்கு ஏறுமுகம்தான். தமிழச்சி தங்கபாண்டியன் மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். ராஜ்யசபா எம்பி பதவியும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. டி.ஆர்.பாலுவின் ஆதரவு அவருக்கு பரிபூரணமாக இருப்பதே ஏறுமுகத்துக்கு காரணமாம். அதேபோல் பூங்கோதை ஆலடி அருணாவுடன் ராஜ்யசபா தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார் ஜோயல். மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த இவருக்கு சின்னவரின் ஆசி பரிபூரணமாக இருக்கிறதாம்”

“சசிகலா விஷயம் ஏதாவது இருக்கிறதா?”

“அதிமுகவில் உள்ள முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் சசிகலாவுக்கு ஆதரவு தர முன்வந்திருக்கிறார்கள். அந்த குழுவுக்கு தலைமை தாங்குபவர் வைத்தியலிங்கம். ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களை சசிகலாவுக்காக வளைக்க வலைவீசி வருகிறார் வைத்தியலிங்கம்.”

”இப்பதான் ஆதரவு திரட்டவே ஆரம்பிச்சிருக்காங்களா? எப்போ ஆதரவு திரட்டி எப்போ கட்சியை கைப்பற்றுவாங்க”

”டெல்லிலருந்து சிக்னல் வந்ததும் எல்லாம் வேகமா நடக்கும்” என்று கூறியபடி கிளம்பினார் மிஸ்.ரகசியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...