No menu items!

மிஸ் ரகசியா: ராகுல்காந்தி அடித்த கமெண்ட்

மிஸ் ரகசியா: ராகுல்காந்தி அடித்த கமெண்ட்

அலுவலகத்தில் தனது கேபினில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ படித்துக் கொண்டிருந்தார் ரகசியா. லேசாக தொண்டையைக் கனைத்ததும் நிமிர்ந்து பார்த்தார்.

“எனக்கு முன்னாடியே ஆபீசுக்கு வந்துட்டியே… என்ன விஷயம்?”

“ஒரு பங்ஷனுக்கு போகவேண்டி இருக்கு. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட செய்திகளை சொல்லலாமேன்னு வந்தேன். உங்களை ரூம்ல காணோம். சும்மா இருக்க வேண்டாமேன்னு நம்ம இணையதளத்துல வெளியான ‘எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – இந்திய அரசும் அரசியலும்’ கட்டுரையை படிச்சிட்டுருந்தேன். சில பேச்சாளர்களை ஆரம்பத்திலேயே தட்டி வைக்காததோட பலனை பாஜக இப்ப அனுபவிக்கிறதைப் பத்தி சரியா சொல்லி இருக்கீங்க. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவோட இமேஜ் கெடறதை நினைச்சு பிரதமர் ரொம்பவே கவலைப்படறதா தமிழக பாஜக தலைவர்கள் சொல்றாங்க.”

“இதுல இருந்து மீண்டு வர்றதுக்கு மோடிஜி ஏதாவது பிளான் வச்சிருப்பார்.”

“அப்படித்தான் அவங்களும் நினைக்கறாங்க. இன்னும் 2 மாசத்துல ஜனாதிபதி தேர்தல் வரப்போகுது. தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சிதான்னு நிரூபிக்க இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருத்தரை ஜனாதிபதி வேட்பாளரா பிரதமர் அறிவிப்பார்னு சொல்றாங்க.”

“யாருக்கு அந்த வாய்ப்பு இருக்கு?”

“இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தற்போதைய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இல்லாட்டி முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர்ல யாராவது ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்னு சொல்றாங்க”

“எப்படியோ இந்தப் பிரச்சினையால ஒரு இஸ்லாமியருக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைக்கப் போகுது.”

“அதையும் நிச்சயமா சொல்ல முடியாது. இந்த பதவிக்காக இப்போதைய துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவும் ராஜ்நாத் சிங்கும் முயற்சி செஞ்சுட்டு இருக்காங்களாம். அப்படி அவங்கள்ல யாருக்காவது கொடுக்கறதா இருந்தா, துணை ஜனாதிபதியா குலாம் நபி ஆசாத்தை தேர்ந்தெடுக்கலாமான்னு பாஜக யோசிக்குது.”

“குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சிக்காரராச்சே..”

“ஆமா… இங்கதான் ஒரே கல்லுல 2 மாங்கா அடிக்க பாஜக திட்டம் போடுது. காங்கிரஸ் கட்சி தலைமை மேல குலாம் நபி ஆசாத் இப்ப அதிருப்தியா இருக்கார். இந்த நேரத்துல அவரை துணை ஜனாதிபதி ஆக்கினா, காங்கிரஸ்ல இருக்கிற அதிருப்தியாளர்களை இழுக்க முடியும். அதே நேரத்துல பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சிங்கிற இமேஜையும் உடைக்க முடியும்னு பாஜக தலைவர்கள் நினைக்கிறாங்க.”

“பாஜகன்னதும் நினைவுக்கு வருது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னபடி 2 துறைகள்ல இருக்கிற ஊழல் பட்டியலை வெளியிட்டுட்டாரே…”

“ஆமா. இதுக்கான பத்திரிகையாளர் சந்திப்பில முதல்ல யூடியூப் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லைன்னு சொல்லி இருக்காங்க. ஆனா அப்படி சொன்னா பாஜகவுக்கு ஆதரவான யூடியூப் செய்தியாளர்களால பேட்டியை கவர்செய்ய முடியாதுன்னு சொன்ன பிறகு யூடியூப் செய்தியாளர்களையும் அழைச்சிருக்கார்.”

“அண்ணாமலையோட புகார் பட்டியலைப் பற்றி ஆளும்கட்சியில என்ன பேசிக்கறாங்களாம்?”

“இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லைன்னு வெளியில சொன்னாலும், போகப் போக அண்ணாமலை இன்னும் என்னென்ன குடைச்சல்களைத் தரப்போறாரோன்னு டென்ஷன்ல இருக்காங்களாம். அவருக்கு தகவல் தர்ற அதிகாரிகள் யார்னு கண்டுபிடிக்கச் சொல்லியும் உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவு போட்டிருக்காராம்”

“அண்ணாமலையால ஆளுங்கட்சிக்கு டென்ஷன்னு சொல்லு.”

“ஆளுங்கட்சிக்கு டென்ஷனோ இல்லையோ… தமிழ்நாட்ல இருக்கிற பாஜக மூத்த தலைவர்கள் டென்ஷன்ல இருக்காங்க. அண்ணாமலை தங்களை கலந்தாலோசிக்காம சர்வாதிகாரி மாதிரி அவரே முடிவுகளை எடுக்கிறார்ங்கிறது அவங்களோட வாதம். அதோட திமுகவை குறை சொல்றதைத் தவிர கட்சியை பலப்படுத்த அவர் எதையும் செய்யலைன்னும் டெல்லி தலைமைகிட்ட அவங்க புகார் சொல்லிட்டு இருக்காங்களாம்.”

“மரியாதை இல்லன்னா புலம்பத்தானே செய்வாங்க?”

“ஆளுங்கட்சி குடும்ப வாரிசுகளோட தொழில் நிறுவனங்கள் பத்தின பட்டியலை அண்ணாமலை சமீபத்துல வெளியிட்டார். அதுக்கு பதிலடியா ‘அமித்ஷாவுக்கு அண்ணாமலை வைத்த ஆப்பு’ன்னு ஒரு கட்டுரையை முரசொலியில வெளியிட்டு இருக்காங்க. அந்த கட்டுரையில அமித் ஷாவின் மகன் தொடர்புடைய நிறுவனங்கள் பத்தின விவரங்களை பட்டியல் போட்டு எழுதி இருக்காங்க. இது அண்ணாமலையால வந்த பாதிப்புன்னு மேலிடத்துல தமிழக பாஜக தலைவர்கள் புகார் சொல்லியிருக்காங்க.”

“கோட்டை நியூஸ் ஏதாவது இருக்கா?”

“பெரும்பாலும் தலைமைச் செயலாளர் தலைமைச் செயலகத்தை தாண்டி யோசிக்க மாட்டாங்க. முதல்வர் கலந்துக்கிற அரசு நிகழ்ச்சிகள்ல மட்டும்தான் கலந்துக்குவாங்க. ஆனா இப்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு எல்லா துறை பணிகளையும் நேர்ல போய் ஆய்வு பண்ணிட்டு வர்றார். குடிநீர் வழங்கல் துறை பணிகள், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி, சாலை போடும் பணின்னு எல்லாத்தையும் நேர்ல போய் ஆய்வு செய்யறார். அதுபத்தின குறிப்புகளையும் முதல்வருக்கு அனுப்பிட்டு இருக்காரு. இதனால முதல்வர் சந்தோஷப்பட்டாலும், தங்கள் துறையில தலைமைச் செயலாளர் மூக்கை நுழைக்கறது சில அதிகாரிகளுக்கு பிடிக்கலையாம். ஆனா இதையெல்லாம் தலைமைச் செயலாளர் கண்டுக்கிறதா இல்லை.”

“இப்படிப்பட்ட துடிப்பான அதிகாரிகள்தான் நாட்டுக்கு தேவை.”

“இந்த ஆட்சியில இன்னொரு விஷயத்துலயும் அதிகாரிகாள் வருத்தத்துல இருக்காங்க. அதிமுக ஆட்சியில் ஓய்வு பெற இருக்கும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பாங்க. ஆனா இந்த ஆட்சியில இதுகேல்லாம் வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். சமீபத்துல ஓய்வு பெற்ற ஒரு மூத்த காவல்துறை அதிகாரி பதவி நீட்டிப்புக்காக கோட்டையில முக்கிய பிரமுகரை சந்திச்சிருக்காரு. அவர்கிட்ட பேசின பிரமுகர், இந்த ஆட்சியில் பதவி நீட்டிப்புக்கெல்லாம் வாய்ப்பே இல்லைன்னு கண்டிஷனா சொல்லிட்டாராம்.”

“முதல்வர் பத்தி ஏதும் செய்தி இருக்கா?”

“ திராவிட மாடலின் முக்கிய அஜெண்டாவே மு.க. ஸ்டாலினை தமிழின தலைவர் ரேஞ்சுக்கு கொண்டு போகணுங்கிறதுதானாம். அதுக்கான வேலையில இப்ப ஒரு டீம் ஈடுபட்டு இருக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள மீதி 6 பேருக்கும் விடுதலை வாங்கி கொடுத்து முதல்வரோட இமேஜை உயர்த்தறதுக்கான வேலைகளை இப்ப செஞ்சுட்டு இருக்காங்க.”

“கார்த்தி சிதம்பரம் மேல இருக்கிற வழக்கு இப்ப எந்த நிலையில இருக்கு?”

“கார்த்தி சிதம்பரத்தை கைது நடவடிக்கையில் இருந்து காப்பாத்த ப.சிதம்பரம் எல்லா முயற்சிகளையும் செஞ்சுட்டு இருக்கார். மகாராஷ்டிராவில் தனக்குள்ள தொடர்புகளை வச்சு டெல்லியில இருக்கிற சில முக்கிய புள்ளிகள்கிட்ட பேச வச்சிருக்கார். ஆனா அவங்க எந்த உத்தரவாதமும் கொடுக்கலையாம். இதுக்கு நடுவுல ராகுல் காந்தி இந்த விஷயத்தால டிஸ்டர்ப் ஆகியிருக்கிறதா சொல்றாங்க. இந்த 2 பேரால கட்சிக்கு கெட்ட பேருன்னு அவர் கமெண்ட் அடிச்சதாவும் சொல்றாங்க. சரி எனக்கு பங்ஷனுக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்” என்று விடைபெற்றார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...