15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு உட்பட 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மோதுகிறது. மொத்தம் 74 போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் மே 22-ம் தேதி நிறைவடையும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 104.43ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 94.47க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசலின் விலை ரூ3.40 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
28, 29-ல் பேருந்துகள் இயங்கும்
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
வேலூரில் மின்சார வாகனத்தால் தந்தை, மகள் உயிரிழப்பு
வேலூர் மாவட்டத்தில், இரு தினங்களுக்கு முன்பு புதிதாக பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தை துரைவர்மா (49) என்பவர் வாங்கியுள்ளார். இந்த வாகனத்தை நேற்று இரவு 10 அடி அகலம் 10 அடி நீளம் கொண்ட தனது சிறிய அறையில் நிறுத்தி சார்ஜ் ஏற்றியுள்ளார். நள்ளிரவில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து வெளியேறிய நச்சு புகை வீடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.
இதனால் வீட்டின் கழிப்பறை பதுங்கிய தந்தை துரைவர்மா(49),மற்றும் மகள் மோகன பிரீத்தி (13) மூச்சு திணறி பலியான சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.