No menu items!

ஹர்த்திக் பாண்டியா 2.0!

ஹர்த்திக் பாண்டியா 2.0!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்டியா நியமிக்கப்பட்டபோது பலரின் புருவங்கள் உயர்ந்தன. தொடர் காயங்களால் பல மாதங்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடாமல் இருந்தவர் ஹர்த்திக் பாண்டியா. அத்துடன் இந்திய அணியில் ஒரு விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்பட்டவர். பேட்டிங்கில் கடைசி நேரத்தில் ரன்களைக் குவிக்கும் பினிஷராகவும், அவசரத்தில் உதவும் 5-வது பந்துவீச்சாளராகவும் மட்டுமே இருக்கும் அவரால் கேப்டன் என்ற பெரிய பொறுப்பை சுமக்க முடியுமா என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது.

ஆனால் இன்று அந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஆச்சரியக் குறிகளாக மாற்றிவிட்டார் ஹர்திக் பாண்டியா. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற பெரிய அணிகளெல்லாம் இடுப்பொடிந்து கிடக்க, ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ஐபிஎல்லின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு முதல் காரணம் ஹர்த்திக் பாண்டியா. ஜடேஜாவைப் போலவே ஹர்த்திக் பாண்டியாவும் இந்திய அணியில் ஒரு விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவர்தான்.

ஆனால் தன்னிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்ததும் ஜடேஜாவைப் போல் தயங்காமல், ஒரு பொறுப்புள்ள மூத்த மகனைப்போல் செயல்பட்டார் ஹர்திக் பாண்டியா. இந்த மாற்றம் அவரது பேட்டிங்கிலேயே எதிரொலித்தது.

பொதுவாக கடைசி 5 ஓவர்களில் வந்து ‘பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம்…” ஸ்டைலில் அதிரடி காட்டுவது ஹர்திக்கின் ஸ்டைல். ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அந்த ஸ்டைலை மாற்றினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அணியின் 3-வது அல்லது நான்காவது பேட்ஸ்மேனாக மாறி களத்தில் குதித்தார். 1992-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் கடைப்பிடித்த பாணி இது. இந்த தொடரில் பாகிஸ்தானின் 3-வது அல்லது நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய இறங்கிய இம்ரான்கான், ஒருபக்கம் நங்கூரமடித்து நின்று மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட உற்சாகப்படுத்தினார். அதேநேரத்தில் கடைசி கட்டத்தில் தானும் அதிரடி காட்டி அணியை வெற்றிபெற வைத்தார்.

இந்த ஐபிஎல்லில் அதே பாணியைக் கடைப்பிடித்த ஹர்த்திக் பாண்டியா, இதுவரை தான் ஆடிய 11 போட்டிகளில் 344 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி ரன்கள் 38.22.

இந்திய அணியில் சமீப காலமாக ஹர்த்திக் பாண்டியா சேர்க்கப்படாததற்கு முக்கிய காரணம் பந்துவீச்சு. ஆரம்பத்தில் 5-வது பந்துவீச்சாளராக பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஹர்த்திக் பாண்டியா, இடையில் காயம் காரணமாக பந்துவீச்சில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக 2 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த வெங்கடேஷ் ஐயரை இந்திய அணி பயன்படுத்தி வந்தது. இந்தச் சூழலில் இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சிலும் தொடர்ந்து அசத்திவருகிறார் ஹர்திக் பாண்டியா. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்துவீசும் அவர், பவுன்சர்களையும், யார்க்கர்களையும் சரமாரியாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்து வருகிறார்.

இப்படி பேட்டிங், பந்துவீச்சில் மட்டுமின்றி, கேப்டன்ஷிப்பிலும் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார் ஹர்திக் பாண்டியா.

“நான் என்றுமே தனியாக வளர வேண்டும் என்று எண்ணியதில்லை. ஒரு அணியாக வளரவேண்டும் என்றே எண்ணி வந்திருக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா. அவரது இந்த தன்மையும் குஜராத் அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாகி இருக்கிறது.

ரோஹித் சர்மாவுக்கு வயதாகி வரும் நிலையில் அடுத்த கேப்டன் ஆவதற்கு தகுதியான ஒருவரை இந்த ஐபிஎல் தேர்வுக்குழுவின் கண் முன் நிறுத்தியுள்ளது. கூடவே பழைய ஹர்திக் பாண்டியாவின் இரண்டாவது வெர்ஷனையும் இந்த தொடர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

பாண்டியாவின் வெற்றிகள் தொடரட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...