ஒரே சட்டக் கல்லூரியில் படித்த நண்பர்கள் ஒரு வழக்கை வெவ்வேறு விதமாக எப்படி கையாள்கிறார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார் என்பதே ‘கில்டி மைண்ட்ஸ் – Guilty Minds’ வெப் சீரிஸின் கதைக்களம். அமேசான் ப்ரைமில் இதைக் காணலாம்.
உச்ச நீதிமன்ற நீதிபதி காஸேவின் மகளான காஷஃப், தனது தோழி வந்தனாவுடன் ஒரு சட்ட நிறுவனத்தை தொடங்குகிறார். எளிய மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாகவும், உண்மையை அடிப்படையாகக் கொண்டும் இவ்விருவரும் வாதாடி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் நண்பனான தீபக், பல்லாண்டுகளாக இருக்கும் ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் சேர்கிறார். தன்னுடைய வாடிக்கையாளரை ஜெயிக்க வைப்பதே இவர்களின் நோக்கம்.
ஒவ்வொரு வழக்கிலும், இவ்விரண்டு அணியினரும் எப்படி வாதாடுகிறார்கள்? யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நிஜமான நீதிமன்றத்தில் எப்படி ஒரு வழக்கு கையாளப்படுமோ அவ்வண்ணமே படமாக்கியிருப்பது அருமை.
இந்த வெப் சீரிஸில் மொத்தம் 10 எபிசோட்கள். ஒவ்வொரு எபிசோடிலும் வெவ்வேறு வழக்குகளை கையாள்கின்றனர். நடிகையின் மானபங்க வழக்கு, கருத்தரிப்பு மையத்தின் முறைகேடுகள், கோலா நிறுவனங்களின் அத்துமீறல்கள், செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் சிக்கல்கள், விடலைப் பருவப் பிள்ளைகளை வன்முறைக்குத் தூண்டும் விதமான வீடியோ கேமின் விளைவுகள், வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என பல விதமான வழக்குகளைக் கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே நாம் பெரும்பாலும் ஏற்கெனவே செய்திகளாகப் படித்தவை என்பதால், பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
வெறும் நீதிமன்ற நாடகமாக மட்டும் அல்லாமல், வாதாடுபவர்களின் சொந்த வாழ்க்கையையும் பின்னணியாக அமைத்திருப்பது ஒரே சீரிசில் இரண்டு கதைகளைப் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது. காஷஃப்கும், தீபக்கிற்கும் இருக்கும் காதல், கொள்கை முரண்பாடு, சில பல கேள்விகளை எழுப்புகின்றது.
யாருமே முற்றிலும் நல்லவனும் கிடையாது, கெட்டவனும் கிடையாது என்பதை பதிவு செய்யும் முயற்சி சற்று தோல்வியடைந்திருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸில் வரும் Suits வெப் தொடர் போன்று, அமேசானில் இந்தியன் மசாலாக்களைத் தூவி ஒரு நல்ல சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் Suits தொடர் அளவிற்கு தெளிவு இல்லை. வேகமும் இல்லை. நிறையக் கதாப்பாத்திரங்கள் வருவதால் குழப்பமாக இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி அனைவரின் நடிப்பும் அற்புதமாகவும்,எதார்த்தமாகவும் இருப்பது பாராட்டுக்குரியது. ஷெஃபாலி முதன்முறை இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார்.
நீதிமன்ற வழக்குகளில் ஆர்வமிருப்பவர்கள் மட்டுமல்ல, சமூக சிக்கல்களில் ஆர்வமிருப்பவர்களும் இந்தத் தொடரைப் பார்க்கலாம்.