நயன்தாராவின் திருமணத்தைப் பற்றி தமிழகத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்க, இதே நேரத்தில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் திருமணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்துள்ளது. தனது நீண்டநாள் காதலரான சாம் அஸ்காரியை அவர் மணந்தார். நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இந்த திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பிரிட்னி ஸ்பியர்ஸின் முன்னாள் கணவரான ஜேசன் அலெக்சாண்டருக்கு இந்த திருமணத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை. இருப்பினும் இந்த திருமணத்தில் பங்கேற்றே தீருவேன் என்று அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளர் ஜேசன் அலெக்சாண்டர். இதைத் தொடர்ந்து பிரிட்னியின் பாதுகாவலர்கள் அளித்த புகாரின்பேரில் ஜேசன் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார். ‘கல்யாணப் பரிசு தர வந்த என்னை கம்பி எண்ண வைத்துவிட்டார்களே’ என்று புலம்புகிறாராம் முன்னாள் கணவர்.
ஜஸ்டின் பீபரால் சிரிக்க முடியாது
பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், தான் ‘ராம்சே ஹண்ட் சின்ட்ரோம்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நோயால் தனது முகத்தின் வலப்பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் காரணமாக அவரால் வலது கண்ணை இமைக்கவோ, சிரிக்கவோ முடியாது. இந்த நோயின் காரணமாக உலகம் முழுக்க இசைப்பயணம் செய்யும் திட்டத்தை ரத்து செய்துள்ளார் ஜஸ்டின் பீபர். இந்தச் சூழலில் நோயிலிருந்து மீள்வதற்காக மருத்துவர்களின் உதவியுடன் முகத்துக்கான உடற்பயிற்சிகளை செய்துவருகிறார் ஜஸ்டின் பீபர்.
ரஞ்சியில் சதமடித்த மேற்குவங்க அமைச்சர்
தீவிர அரசியலில் இருந்தபோதிலும் கிரிக்கெட்டையும் விடாமல் பிடித்திருக்கிறார் மனோஜ் திவாரி. மேற்கு வங்கத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருணாமூல் கட்சியில் இணைந்த மனோஜ் திவாரி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பின்னர் அம்மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஒருபக்கம் அமைச்சர் பதவியை வகித்தாலும், மறுபக்கம் கிரிக்கெட்டையும் அவர் விடாமல் இருக்கிறார். மேற்கு வங்க அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகிறார். இந்த சூழலில் இந்த வாரம் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 136 ரன்களையும் குவித்து சாதனை படைத்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இத்தனை ரன்களைக் குவிப்பது இதுவே முதல் முறை.
கார் பெயிண்ட் செய்ய ரூ.1 கோடி
ஏற்கெனவே 2 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருக்க மூன்றாவதாக ஒரு ரோல்ஸ்ராய்ஸ் குலினன் காரை வாங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இந்த காரின் விலை 6.95 கோடி ரூபாய். இதில் முகேஷ் அம்பானி சேர்த்துள்ள எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளுடன் சேர்த்தால் இந்தக் காரின் விலை 13 கோடியை தாண்டுகிறது. இதற்கான பெயிண்டிங் செலவு மட்டும் 1 கோடி ரூபாயாம். இப்போதைக்கு இந்தியாவிலேயே அதிக விலைமதிப்புள்ள கார் இதுதான்.
0001 என்ற பதிவு எண்ணை இந்த காருக்கு வாங்குவதற்கு மட்டுமே ரூ.20 லட்சத்தை செலவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான் போலிருக்கிறது.
வயதானவர்களின் நாடாகும் ஜப்பான்
உலகிலேயே அதிக வயதானவர்கள் வாழும் நாடு எது என்பது குறித்து உலக வங்கி நடத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி ஜப்பான் நாட்டில்தான் ஆதிக அளவில் முதியவர்கள் வாழ்கிறார்கள். அந்நாட்டில் உள்ள மக்களில் 28 சதவீதம் பேர் 65 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இந்த வரிசையில் அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. அந்நாட்டில் 23 சதவீதம் பேர் 65 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்த இரு நாடுகளுக்கும் அடுத்த இடத்தில் போர்ச்சுக்கல், பின்லாந்து, கிரீஸ், ஜெர்மனி, பல்கேரியா ஆகிய நாடுகள் உள்ளன.