No menu items!

மிஸ் ரகசியா : அதிமுக உதவியில் எம்.பி.யாகிறாரா அண்ணாமலை?

மிஸ் ரகசியா : அதிமுக உதவியில் எம்.பி.யாகிறாரா அண்ணாமலை?

காலை 10 மணிக்கெல்லாம் வழக்கமாக ஆபீஸில் ஆஜராவார் ரகசியா. ஆனால், இன்று காலை 10 மணிக்கு அவரது செல்ஃபோன் அழைப்புதான் வந்தது.

“லயோலா காலேஜ் சிக்னலில் மாட்டிக்கொண்டேன். கொஞ்சம் தாமதமாகும்” என்றார்.

“பத்து நிமிஷத்துல வாங்க, ஸ்டோரி அப் பண்ணணும்” என்றதும் கோபத்துடன் போனை கட் செய்தார்.

சில நிமிடங்கள் கழித்து அதே கோபத்துடன் ஆபீஸில் ஆஜரானார் ரகசியா…

“10 நிமிடத்தில் வருவதற்கு நான் என்ன சொமோட்டோ டெலிவரியா. வள்ளுவர் கோட்டம் சிக்னல்ல பாஜக போராட்டம். தமிழ்நாட்டு பட்ஜெட்டை கண்டிச்சு…. ஒரே கூட்டம். அதான் டிராஃபிக்” என்றார் ரகசியா.

“பாஜக போராட்டத்துக்கு டிராஃபிக் பாதிக்கிற அளவுக்கு கூட்டமா?”

“இப்படிதான் நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கிங்க. ஆனா, அவங்க சத்தமில்லாம எல்லா இடத்திலயும் ஆதரவை பெருக்கிக்கிட்டு இருக்காங்க.”

களைப்பாய் தெரிந்தவருக்கு தர்பூசணி ஜூஸ் கொடுத்து கூல் செய்தோம்.

“காலையில் ஒரு சோர்ஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. தமிழகத்தில் அடுத்து வரவுள்ள ராஜ்யசபா தேர்தல் பற்றி சில தகவல்களை சொன்னார். சட்டப் பேரவைத் தேர்தல்ல தோற்று எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைஞ்சதால இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் 2 எம்பிக்களைத்தான் தேர்வு செய்ய முடியும். இந்த இரண்டில் ஒரு இடத்தை தனக்கு பல்வேறு உதவிகள் செய்துவரும் அண்ணாமலைக்கு கொடுத்துவிடலாமா என்று யோசிக்கிறாராம் எடப்பாடி. இதன்மூலம் அவரது ஆதரவை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்பது எடப்பாடியின் கணக்கு. அண்ணாமலைக்கும் டெல்லியில் பதவி பெற ஆசை இருக்கிறதாம். ஆனா, இதற்கு அதிமுகவில் எதிர்ப்பு இருக்கிறதாம். நாமே பாஜகவை வளர்த்துவிடுவதா என்ற குரல்கள் எழுகிறதாம்.”

”அண்ணாமலைக்கு கிடைக்குமா கிடைக்காதா?”

“அமித் ஷா சொன்னா கிடைக்கும். அவர் சொல்லுவாரா என்பது தெரியவில்லை. திமுக கூட்டணிக்கும் 4 ராஜ்யசபா இடங்கள் இருக்கிறது.  அதில் தங்கத் தமிழ்ச்செல்வன், பூங்கோதை ஆகியோருக்கு நிச்சயமாக இடம் கிடைக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். அதோடு கொங்கு மண்டலத்துக்கும் ஒரு எம்பி பதவியை ஒதுக்க திட்டமிட்டுள்ளார்களாம். கார்த்திகேய சிவசேனாதிபதி அல்லது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நகராட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு சிறப்பான வெற்றி தேடித் தந்த அமைச்சர்  செந்தில் பாலாஜி கைகாட்டும் நபருக்கே  வாய்ப்பு என்கிறார்கள். நாலாவது சீட்டை டெல்டா பகுதிக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.”

“ஓஹோ?”

“அதிமுக உட்கட்சி தேர்தல் கிராமங்களில் நடந்து முடிந்துவிட்டது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாரியான தேர்தல்கள் 27-ம் தேதி நடக்க இருக்கிறது. மாவட்ட அளவில் தன் ஆதரவாளர்களை களம் இறக்க தீவிரமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் சசிகலா இணைவதை தடுப்பதற்கான அவரது முயற்சிகளில் இதுவும் ஒன்று.”

“இதை கட்சிக்காரர்கள் எப்படி பார்க்கிறார்கள்?”

“கட்சிக்காரர்களை விடுங்கள்… அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே எடப்பாடி நீடிப்பாரா என்ற சந்தேகம் இருக்கிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினருடன் வெளிநடப்பு செய்த எடப்பாடி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருக்க, ‘அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் யார் எந்தப் பக்கம் இருப்பார்கள்? கட்சி உடைந்து பாஜக எதிர்க்கட்சி ஆகிவிடுமா?  எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பாரா” என்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளே பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.”

“முதல்வரின் துபாய் பயணம் பற்றி ஏதும் தகவல் உள்ளதா?”

“துபாய் செல்லும் முன் மூத்த அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ஜூனியர் அமைச்சர்கள் சிலர், தங்களைக் கூட்டத்துக்கு கூப்பிடவில்லையே பதவிக்கு ஏதாவது ஆபத்தோ என்று அச்சப்பட்டுள்ளனர். அப்படி ஏதும் இல்லை என்று தெரிந்த பின்னர்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.”

“நல்ல வேடிக்கை.”

“துபாயில் இருந்து தமிழகத்துக்கு திரும்பும் வழியில் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் முதல்வர். அங்கு நடக்கவுள்ள திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பாஜக எதிர்ப்பு அணிகளை திரட்டுவதில் தீவிரம் காட்டவுள்ளார். அதேநேரத்தில் பிரதமரை சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, கவர்னருடனான பிரச்சினை ஆகியவற்றைப் பற்றி அப்போது பிரதமரிடம் பேச திட்டமிட்டுள்ளார். ஆனால், மோடி நேரம் ஒதுக்குவாரா என்றுதான் தெரிவில்லை.”

“கவர்னர் பிரச்சினை வேறு இருக்கிறதே?”

“ஆமாம். தினமும் டெல்லிக்கு போன் அடித்து பேசி வருகிறாராம் கவர்னர். ஊழல் அதிகாரி என கூறப்படும் போக்குவரத்து துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்யாதது பற்றியும், ஒரு அமைச்சரின் போக்குவரத்து ஊழல் பற்றியும் அவரையும் ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்றும் கவர்னரிடம் இருந்து தமிழக அரசுக்கு தாக்கீது வரலாம். அல்லது இந்நேரம் வந்திருக்கலாம் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”

“அப்படியா?

“ஆமாம்… அதேநேரத்தில் பாஜகவுக்கு தமிழகத்தில் எப்படி செக் வைக்கலாம் என்று திமுக தலைமை யோசிக்கிறது. தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவரும் அண்ணாமலையை ஏதாவது விஷயத்தில் சிக்கவைக்க முடியுமா என்று தீவிரமாய் யோசிக்கிறது.”

“அண்ணாமலை சிக்குவாரா?”

“அண்ணாமலை சிக்குவாரா என்று தெரியவில்லை. ஆனால், அதே கட்சியின் ஒரு எம்எல்ஏ ஏகத்துக்கும் கல்லா கட்டி வருகிறாராம். டெல்லி தலைவர்களை சந்திக்க சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்டு யாராவது சென்றால்கூட லட்சங்களைக் கேட்கிறாராம். சட்டமன்ற உறுப்பினரானது வானத்திலேயே பறப்பது போல் செயல்படுகிறாராம். இது கட்சிக்காரர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே ரீதியில் போனால் அவர் எங்காவது சிக்கிக் கொள்ளலாம் என்கிறார்கள்”  என்று சொல்லிக்கொண்டே வெளியில் கிளம்பினார் ரகசியா.

“வந்ததே லேட்டு. இதுல வந்த உடனே கிளம்பினா எப்படி?… முதல்வர் துபாய்ல இருந்து வந்ததும் சென்னை காவல்துறை அதிகாரிகளை மாத்தப்போறதா ஒரு பேச்சு இருக்கு. முடிஞ்சா அதுபத்தி கொஞ்சம் விசாரிச்சு வை” என்றோம்.

“ஓகே பாஸ்.  ஐபிஎல் பார்க்க மும்பை போறேன். செவ்வாய்க்கிழமைதான் வருவேன்” என்றவாறு பைக்கை பறக்கவிட்டார்  ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...