No menu items!

கலவரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில்

கலவரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில்

தமிழ் சினிமாவின் அதிரிபுதிரி கமர்ஷியல் படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளை விட பரபரப்பான சம்பவங்களுக்குப் பெயர் பெற்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில்.

தற்பொழுது மீண்டுமொரு முறை ஒரு கலவரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமாவின் இந்த உச்ச அமைப்பு.

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுக்குழு கூடியது. அவ்வளவுதான் இப்பொழுது தயாரிப்பாளர்கள் மத்தியில் புது பஞ்சாயத்து பற்றிக்கொண்டு எரிகிறது.

பொதுக்குழுவில் நடந்தது என்ன?

பொதுக்குழு கூடியதும் கணக்குவழக்குகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கணக்கு வழக்கில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லாததால் மளமளவென அடுத்தக்கட்டத்திற்கு சென்றது பொதுக்குழு.

அடுத்து சங்கத்தின் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதாவது இனிமேல் தமிழ் திரைப்படப் தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்றால், அவர்கள் துணைத்தலைவர் அல்லது செயலாளராக பணியாற்றி இருக்கவேண்டும். இந்த பொறுப்புகளை இதுவரை வகிக்காதவர்கள், தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாது.

பொதுக்குழுவில் இப்படியொரு புதுவிதியை சொன்னதும், நிலவரம் கலவரமாகியது.
சுமூகமாக போகும் என்று நினைத்த கவுன்சில் நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி.

‘என்ன விளையாடுறீங்களா. இதெல்லாம் சரி இல்ல’ என்று உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார் இயக்குநரும், உச்ச நடிகரான விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

எஸ்.ஏ.சி-யின் குரலை அடுத்து இந்த விதியை எதிர்த்து பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான கலைப்புலி. ஜி. சேகரன், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ், செயற்குழு உறுப்பினரும் மூத்த இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார், விடியல் ராஜூ, மன்னன் என முக்கியப்புள்ளிகள் அடுத்தடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் எஸ்.ஏ.சி. உடனடியாக பொதுக்குழுவை விட்டு வெளிநடப்பு செய்தார்.

மற்றொரு முக்கியப்புள்ளியான மன்னன், இந்த விதி மாற்றம் குறித்து எந்த தகவலும் முன்பே சொல்லப்படவில்லை. எனக்கு இது பற்றி தெரியாது என படபடத்தார்.

இத்துடன் மற்ற சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு கவுன்சில் தேர்தலில் ஓட்டு போடு உரிமை இல்லை என்று அடுத்த குண்டை தூக்கிப்போட்டனர் தற்போதைய நிர்வாகிகள்.

இந்த விதிமுறைகள் அனைத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கும் மட்டுமே பொருந்தும். ஃப்லிம் சேம்பருக்கு பொருந்தாது என்றும் பொதுக்குழுவில் கூறப்பட்டது.

சுமூகமாக தொடங்கிய பொதுக்குழு அடுத்து தயாரிப்பாளர்களின் கூக்குரலினால் அல்லோகலப்பட்டது.

கவுன்சில் விதியை மாற்றுவது அல்லது புதிய விதியைக் கொண்டு வருவது என்றால், அது குறித்து பொதுக்குழுவுக்கு முன்னரே அதன் உறுப்பினர்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். அதேபோல் பொதுக்குழு அழைப்பை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த விதிமுறைகளை தற்போதுள்ள நிர்வாகிகள் பின்பற்றவில்லை என ஒரு தரப்பு கோபத்தில் இருக்கிறது.

தங்களுக்கு வேண்டிய ஆட்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதை ஏற்க முடியாது. மேலும் விதி சேர்ப்பது பற்றி கொடுக்கப்பட்ட புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கவுன்சில் நிர்வாகிகள் சமாளிப்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது என தயாரிப்பாளர்கள் மத்தியில் சலசலப்பு கிளம்பியிருக்கிறது.

’பை லா கொண்டு வரும் போது, ஒவ்வொரு விதியையும் முழுமையாக படித்து காட்ட வேண்டும். முழு விதிகளையும் படித்து காட்டிய பிறகு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் இது மாதிரியான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கு ஒப்புதல் கிடைத்ததாக அவசரமாக ஒரு மினிட்ஸ் புக்கை தயார் செய்திருக்கிறார்கள்’ என்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.

முந்தைய நிர்வாகிகள் இருக்கும் வரை மூத்த தயாரிப்பாளர்கள் மற்றும் நலிவுற்ற தயாரிப்பாளர்களுக்கு பென்ஷனாக 12,500 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. இது பலருக்கு மருத்துவ செலவுகளுக்கும், குடும்பச் செலவுகளுக்கும் பெரும் உதவியாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள நிர்வாகம் இந்த பென்ஷனை பல தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பதில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது இப்போது தெரியவந்திருக்கிறது.

‘’கவுன்சிலின் உறுப்பினர்கள் படமெடுத்து அப்படத்தை 25 திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருந்தால் மட்டுமே பதவிக்குப் போட்டியிடலாம் என்கிறார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லோருமே இப்படி படமெடுத்துதான் பதவிக்கு வந்தார்களா? எத்தனைப் படங்கள் இவர்கள் சொந்தமாக எடுத்திருப்பார்கள்.

சின்னப்படங்களுக்கு அரசு மானியம் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு படம் குறைந்தப்பட்சம் 8 திரையரங்குகளிலாவது வெளியாகி இருக்கவேண்டும். ஆனால் சின்னப்படங்களுக்கு இப்போது எங்கே திரையரங்குகள் கிடைக்கிறது. இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. முன்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் கொடுக்கப்பட்டது. இப்போது அதையும் இல்லாமல் செய்துவிட்டார்கள். போலி உறுப்பினர்களை நீக்குங்கள் என்றாலும் அதை இவர்கள் ஏற்கவில்லை’’ என்று கொந்தளிக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.

இதுவரை இல்லாத வகையில் தேர்தலில் போட்டியிட ஏன் இவ்வளவு விதிகள் புகுத்தப்பட்டிருக்கிறது. ஏன் இவ்வளவு கெடுப்பிடிகள் என்று விசாரித்தால். ‘வருகிற ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்களுக்கு குடியிருப்பு வசதி செய்யப்பட்ட இருக்கிறது. அதற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நட்டு தொடங்க இருக்கிறார்கள். அதுவரை இந்த நிர்வாகமே பதவியில் இருந்து பெயரைத் தட்டிச்செல்லவேண்டுமென நினைக்கிறார்கள்’ என்று முணுமுணுக்கிறார்கள்.

இவ்வளவு பிரச்சினை எழுந்த பின்னும், தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் ஒருத்தர் கூட இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...