இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கருப்புக் குதிரையாக இருக்கிறது மொராக்கோ அணி. பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுக்கல் என்று கால்பந்து போட்டிகளில் பழம் தின்று கொட்டை போட்ட ஐரோப்பிய அணிகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அரை இறுதிச் சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது மொராக்கோ. இதன்மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவரை 5 முறை மொராக்கோ ஆடியிருக்கிறது. இதில் இதற்கு முன்பு மெக்சிகோவில் 1986-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிதான் மொராக்கோவுக்கு சிறந்த உலகக் கோப்பை. அந்த உலகக் கோப்பை தொடரில் போலந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை டிரா செய்த மொராக்கோ, போர்ச்சுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது. இதில் குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்தது. இருந்தாலும் 2-வது சுற்றின் முதல் ஆட்டத்தில் தோற்று கால் இறுதி வாய்ப்பை இழந்தது. இதுதான் மொரோக்கோ அணியின் சிறந்த உலகக் கோப்பை ஆட்டம்.
ஆனால் இந்த உலக் கோப்பையில் மொரோக்கோ அணியின் அதிரடி ஆட்டத்தப் பார்த்து மற்ற அணிகள் மிரண்டு இருக்கின்றன.
மொரோக்கோ அணி இந்த அளவு சிறப்பாக ஆட இரண்டு பயிற்சியாளர்கள் உதவியிருக்கிறார்கள்.
முதலில் வாஹித் ஹலிசோடிக் என்ற பயிற்சியாளர் மொரோக்கோ அணிக்கு பயிற்சி கொடுத்து வந்தார். அவர் பயிற்சியில் மொரோக்கோ அணி வேகமாக முன்னேறியது.
அவருக்கு அடுத்து – உலகக் கோப்பைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு மற்றொரு பயிற்சியாளர் வந்தார். இவர் பெயர் வாலித் ரெகுராகுயி.
மொராக்கோ அணிக்காக 45 போட்டிகளில் ஆடியவரான ரெகுராகுயியை பயிற்சியாளராக நியமித்தபோது பலரது புருவங்கள் உயர்ந்தன. ஆனால் இன்று அவரை எல்லோரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். இன்றைய மொரோக்கோவின் வெற்றிகளுக்கு அவர்தான் காரணம் என்று பாராட்டுகிறார்கள்.
அவர் இரண்டு அம்சங்களில் மொரோக்கோ அணிக்கு வழிகாட்டுகிறார். ஒன்று சரியான, முறையான, தவறாத, கடுமையான பயிற்சி. மற்றொன்று ஒவ்வொரு ஆட்டத்தையும் எதிரணியை திணற வைப்பது போல் திட்டமிடுதல். இந்த இரண்டும்தான் இன்று மொரோக்கோவை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
உலகக் கோப்பையில் மொரோக்கா அணி என்று ஆட்டக்காரர்கள் ஆடினாலும், மொராக்கோ அணியில் உள்ள 26 வீரர்களில் 14 பேர் வேறு வேறு நாடுகளில் வளர்ந்தவர்கள். குறிப்பாக முக்கிய போட்டிகளில் எதிரிகளை ஸ்கோர் செய்ய விடாமல் கோல் எல்லையைக் காத்தவரான யூனஸ் போனு கனடா நாட்டில் பிறந்தவர். இந்த உலகக் கோப்பையில் மொத்தம் ஒரே ஒரு கோலைத்தான் அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அவரைப் போல் அச்ரஃப் அகீமி மாட்ரிட் நகரில் பிறந்தவர். இப்படி பல்வேறு நாடுகளில் பிறந்து, பின்னர் மொராக்கோவில் செட்டிலான வீரர்களை வைத்து இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இந்த வீரர்கள் பலரும் பிறந்து வளர்ந்தது வெளிநாடுகளிலாக இருந்தாலும், இவர்களின் பெற்றோர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். மொராக்கோவைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். அப்படி குடிபெயர்ந்த மக்களின் வாரிசுகள்தான் இப்போது மொராக்கோவை கால்பந்தில் வல்லரசாக்கி வருகிறார்கள்.
பொதுவாய் கால்பந்து வீரர்கள் தங்கள் காதலிகளுடன் வலம் வருவார்கள். வீரர்கள் கோல் அடிக்கும்போது கேமராக்கள் அவர்களின் காதலிகளை காட்டுவது வழக்கம்.
ஆனால் மொராக்கோ வீரர்கள் விஷயத்தில் நடப்பது வேறு. உலகக் கோப்பையில் ஆடச் சென்றுள்ள பல மொராக்கோ வீரர்கள் தங்கள் அம்மாக்களை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். போட்டியில் மொராக்கோ வீரர்கள் கோல் அடிக்கும்போதெல்லாம் இந்த அம்மாக்கள் ஆட்டம்போட அதை கேமராக்கள் அழகாக படம்பிடித்துள்ளன.
ஸ்பெயின் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கோல் அடித்த மொராக்கோ வீரர் அச்ரஃப் ஹகீமி (Achraf Hakimi) தனது அம்மாவுடன் மைதானத்தில் டான்ஸ் ஆடிய காட்சியும், மற்றொரு வீரரான சொஃபைன் பௌஃபால் தனது அம்மாவைக் கட்டிக்கொண்டு நடனம் ஆடிய காட்சியும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.
கால்பந்தில் தாங்கள் இந்த அளவுக்கு முன்னேறியதற்கு தங்கள் அம்மாக்கள் சிறுவயதில் தந்த ஊக்கமும் உற்சாகமும்தான் காரணம் என்று கூறும் வீரர்கள் அதற்கு நன்றிக்கடனாக அவர்களை கத்தாருக்கு அழைத்து வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
வீரர்கள் மட்டுமல்ல, கத்தார் அணியின் பயிற்சியாளரான வாஹித் ரெகுராகுயியும் இந்த உலகக் கோப்பைக்கு தனது அம்மாவை அழைத்துச் சென்றுள்ளார். கால் இறுதிப் போட்டியில் போர்ச்ச்சுக்கலை மொராக்கோ வென்றதும், பார்வையாளர்கள் இருக்கும் இடத்துக்கு ஓடிச் சென்ற ரெகுராகுயிஅங்கிருந்த தனது அம்மாவை கட்டிப்பி பிடித்து பாசமழை பொழிந்திருக்கிறார். மொத்தத்தில் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்’ என்று அம்மா செண்டிமென்டில் கண்களைக் குளமாக்குகிறார்கள் மொராக்கோ வீரர்கள்.