உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 3 வெற்றிகளைப் பெற்ற நிலையில் வியாழனன்று வங்கதேச அணியைச் சந்திக்கிறது இந்தியா. இந்த இரு அணிகளும் இதுவரை 4 முறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதியுள்ளன. இதில் முதலாவதாக 2007-ம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையில் நடந்த போட்டியில் மட்டும் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 3 முறையும் இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் வியாழனன்று நடக்கப்போகும் போட்டியைப் பற்றி ஒரு கழுகுப் பார்வை…
ஆடுகளம்:
போட்டி நடக்கும் புனே மைதானத்தின் ஆடுகளம் என்றுமே பேட்டிங்குக்குதான் சாதகமாக இருந்துள்ளது. இந்த ஆடுகளத்தில் இதுவரை 14 இன்னிங்ஸ்கள் ஆடப்பட்டுள்ளன. இதில் 5 இன்னிங்ஸ்களில் மட்டுமே 300 ரன்களுக்கு குறைவான ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. மற்ற இன்னிங்ஸ்கள் அனைத்திலும் 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பது அதற்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதேநேரத்தில் இங்கு ஒரு அணியின் வெற்றியில் டாஸும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. டாஸில் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்கும். இலக்கை துல்லியமாக தெரிந்துகொண்டு, அதை சேஸ் செய்வது இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.
வானிலை:
இந்த உலகக் கோப்பை தொடரில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஒவ்வொரு போட்டியின்போதும், அந்த போட்டி நடக்கும் மைதானத்தில் மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று பார்ப்பது அதிகமாகி உள்ளது. அந்த வகையில் பார்த்தால் புனே நகரில் இப்போது வானிலை மிகத் தெளிவாக உள்ளது. பகலில் 33 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் இருக்கும் என்றும், இரவு நேரம் குளுமையாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய வீர்ர்கள்:
இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீர்ர்களாக பும்ராவும், ரோஹித் சர்மாவும் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. விக்கெட்களை எடுப்பதுடன் மிகக் குறைந்த அளவிலான ரன்களையே விட்டுக் கொடுப்பது பும்ராவின் பலம். இந்த தொடரில் அதிக விக்கெட்களை எடுத்த பந்துவீச்சாளர்களின் வரிசையில் இப்போது முதல் இடத்தில் இருப்பது பும்ராவின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 3 போட்டிகளில் ஆடிய பும்ரா 9 விக்கெட்களை எடுத்துள்ளார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். அதனால் புனே மைதானம் பும்ராவின் ஃபேவரைட் மைதானமாக உள்ளது. அதேபோல் பவர் ப்ளேவில் அட்டகாசம் செய்யும் ரோஹித் சர்மாவின் தொடக்க ஆட்டமும் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது.
மற்ற அணிகளுக்கு எதிராக எப்படியோ தெரியாது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக ஆடும்போது மட்டும் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு புது வேகம் வந்துவிடும். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஷகிப் அல் ஹசன் அடித்த மொத்த ரன்கள் 751. அவரது சராசரி ரன்கள் 37.55. 2007-ம் ஆண்டில் நடந்த போட்டியில் இந்தியாவை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்த ஷகிப், வியாழக்கிழமை நடக்கும் போட்டியிலும் வங்கதேசத்தின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்பதை மறுக்க முடியாது.