‘கடுவா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் மலையாளத்திலும் தமிழிலும் வெளியிடப்படுகிறது. நடிகர்கள் பிருத்விராஜ், சம்யுக்தா, விவேக் ஓப்ராய் ஜீவா, ஆர்யா தயாரிப்பாளர்கள் அன்புசெழியன், ஆர்.பி செளத்ரி மற்றும் ‘கடுவா’ படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிருத்விராஜ் பேசியதாவது:
தமிழில் பேசலாம் என்று வந்தேன். ஏர்போர்ட்டிலிருந்து வரும்போது கமல் சாரின் பேட்டி ஒன்றைப் பார்த்ததும் அவரது தமிழுக்கு முன் என் தமிழெல்லாம் எம்மாத்திரம் என்று தோன்றியது. ஆனாலும் தமிழில் பேசுகிறேன். தவறிருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல தமிழ்ப்படங்களில் விரைவில் நடிப்பேன். இது ஒரு படத்துக்கான விளம்பரம் இல்லை. இனி அனைத்து மலையாளப் படத்தின் நிகழ்ச்சிகளும் இப்படி இருக்க வேண்டும், இந்தியா முழுவதற்குமான திரைப்படங்கள் உருவாக வேண்டும். மலையாளத்தில் சிறந்த திரைப்படங்கள் வெளிவருகின்றன. பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் ஆக்ஷன் கலந்த மாஸ் படங்கள் மட்டும் மலையாளத்தில் வருவதில்லை. மாஸ் ஆக்ஷன் திரைப்படங்களை கேரள திரையுலகம் மறந்துவிட்டது. அதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ‘கடுவா’வை எடுத்திருக்கிறோம்.
பான் இந்தியா அளவிற்கு விவேக் ஓப்ராய் முக்கியமானவர். என்னுடன் ஏற்கனவே நடித்திருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்கள். அவருடன் இரண்டாவது முறை பணியாற்றுவது மகிழ்ச்சி. விரைவில் லூசிஃபர் 2 உருவாகும்.
தமிழ் திரையுலகில் என் முதல் தொடர்பே ஆர்யாதான். நல்ல நண்பர். நான் ஜீவாவுடன் நடித்ததில்லை. விரைவில் ஜீவாவுடன் நடிக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“பிருத்விராஜின் ‘ப்ரோ-டாடி’ படத்தை மலையாளத்தில் எடுத்தால் மோகன்லால் வேடத்தில் யாரை நடிக்கவைப்பீர்கள்?” “ ரஜினி சார். கமல்ஹாசனைதான் எல்லோரும் நல்ல நடிகர் என்பார்கள். ஆனால் ரஜினிசாரும் சிறந்த நடிகர். ரஜினி சாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது என் கனவு” என்றார்.
”சமீபத்தில் நீங்கள் முல்லைப் பெரியாறு சிக்கல் தொடர்பாக ஒரு ட்வீட் போட்டிருந்தீர்கள். அதற்கு தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்படியிருக்கும்போது இந்தப் படத்துக்கு எப்படி தமிழர்கள் ஆதரவு தருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?”
”நல்ல கேள்வி. ஆனால் இதற்கு நான் பதிலளித்தால் இந்த செய்தியாளர் சந்திப்பு முல்லைப் பெரியாறு பற்றியதாக மாறிவிடும். அதுதான் தலைப்பு செய்தியாக இருக்கும். இது கடுவா திரைப்படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு” என்று கூறி முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து பேச மறுத்தார்.