டிவி சிரீயலை போல இழுத்து கொண்டே போன அத்தி ராவ் – சித்தார்த் காதல் பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் எங்குச் சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.
உங்கள் இருவருக்கும் இடையே காதலா என்று கேட்டால் உடனே அந்த இடத்தில் இருந்து நழுவிவிடுவார்கள். இப்படியே டிமிக்கி கொடுத்த இருவருக்கும் ஒரு வழியாக நிச்சயத்தார்த்தம் முடிந்துவிட்டது.
நிச்சயத்தார்த்தம் முடிந்ததும், வழக்கம் போல் இவர்கள் இருவரும் காணாமல் போய்விட்டனர். ஊடகங்களில் இருந்து யார் போன் செய்தாலும், இவர்கள் இருவரும் எடுப்பதில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது.
இவர்களது திருமணம் எப்போது என விசாரித்தால், கோடை முடிந்து, சித்தார்த் நடித்திருக்கும் ‘இந்தியன் 2’ படம் வெளியான பிறகுதான் திருமணம் என முடிவாகி இருக்கிறதாம்.
சித்தார்த் தமிழ் பிராமணர் என்பதால், திருமணத்தை இங்குள்ள முறைப்படி செய்யவேண்டுமென சித்தார்த் பெற்றோர், அதிதி குடும்பத்தாரிடம் கூறிவிட்டார்களாம். அதேபோல் தெலுங்கு வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர் அத்தி. அவர் குடும்பத்தாரும் எங்களது சடங்குகளையும் சேர்த்தே செய்துவிடுவோம் என்று கூறியிருக்கிறார்களாம்.
இதெல்லாம் இருக்கட்டும், என்னுடைய சினிமா கேரியரை கொஞ்சம் தூக்கிவிட ‘இந்தியன் 2’ படம் உதவும். அதனால் ஒரு வெற்றியை ருசித்தப் பிறகு திருமணத்தை வைத்து கொள்ளலாம் என சித்தார்த் கூறியிருக்கிறார். இதற்கு அதிதியும் ஒகே சொல்ல, இப்போது திருமணம் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் கழித்து நடைபெறலாம் என்று கூறுகிறார்கள்.
சமந்தாவின் வாட்ச் விலை இவ்வளவா?
சினிமா ஷூட் இருக்கிறதோ இல்லையோ சமந்தாவுக்கு தினமும் ஷூட் இருக்கும் போல. அந்தளவிற்கு சமூக ஊடகங்களிலும், பாட் காட்களிலும் பரபரப்பாக இருக்கிறார். சமூக ஊடகங்களில் மக்கள் தன்னைப் பற்றி சிந்தித்தபடியே இருக்க வேண்டுமென்பதற்காகவே கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், உடற்பயிற்சி செய்யும் காணொலிகளையும் பதிவேற்றியபடியே இருப்பது வழக்கம்.
அப்படிதான் ஒரு புகைப்படத்தையும் சமூக ஊடக கணக்கில் ஏற்றி இருக்கிறார். இதைப் பார்த்துதான் இப்போது ரசிகர்கள் வாயைப் பிளந்தபடியே ரசிக்கிறார்கள். அப்படி என்னதான் அந்தப் புகைப்படத்தில் இருக்கிறது என்று கேட்டால், சமந்தா மணிக்கட்டில் அணிந்திருக்கும் கைக்கடிகாரம்தான் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
சமந்தா விலையுயர்ந்த குசி ப்ராண்ட்டின் ஜாக்கெட் மற்றும் ஸ்கர்ட் அணிந்திருக்கிறார். இந்த ஆடையின் விலையே ஒரு லட்சத்திற்கு நெருக்கமாக இருக்கிறதாம். அதே போல் அவர் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை சுமார் 70 லட்சம் என்கிறார்கள்.
பாம்பைப் போலவே சமந்தாவின் மணிக்கட்டை சுற்றி இருக்கும் இந்த கைக்கடிகாரம் செர்பென்டி ஸ்பைகா [Serpenti Spiga watch] ப்ராண்ட் வாட்ச் ஆகும். இதன் டயலில் இருப்பவை எல்லாம் வைரங்கள். அதிலும் குறிப்பாக இந்த பல்கரி செர்பென்டி வாட்ச்சின் விலை 70 லட்சம்.