No menu items!

ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆச்சு?

ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆச்சு?

அஜிங்க்ய ரஹானே, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என்று சர்வதேச கிரிக்கெட்டில் சில மாதங்களாக ஃபார்மை இழந்திருந்த வீரர்கள் பலரும் இந்த ஐபிஎல்லில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி சக்கை போடு போடுகிறார்கள். இந்த ஆண்டின் இறுதியில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்காக சந்தோஷப்படும் மனநிலையில் இந்திய ரசிகர்கள் இல்லை. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து சொதப்பி வருவதே இதற்கு காரணம்.

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் ஆடியிருக்கும் ரோஹித் சர்மா, மொத்தமாகவே 184 ரன்களைத்தான் எடுத்துள்ளார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் அதிகபட்சமாக 65 ரன்களை எடுத்துள்ள ரோஹித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் 129.58. இதில் மிகப்பெரிய சோகமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆன ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர்களின் (15) பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளார். ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங், சுனில் நரைன் ஆகியோரும் இதுவரை 15 முறை டக் அவுட் ஆகி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்த சோக சாதனையுடன் இன்னொரு மோசமான சாதனையையும் அவர் ஐபிஎல்லில் படைத்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் (70 முறை) அவுட் ஆன பேட்ஸ்மேன் என்பதுதான் அந்த பரிதாப சாதனை. கடந்த 3 போட்டிகளில் 2, 3, 0 என்று மிக மோசமான ஸ்கோர்களையே ரோஹித் சர்மா அடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை இரட்டைச் சதம் அடித்தவர் (3 இரட்டைச் சதங்கள்) என்ற பெருமை ரோஹித் சர்மாவுக்கு இருக்கிறது. இதனாலேயே இந்த உலகக் கோப்பை போட்டியில் அவரது பேட்டிங்கை இந்திய அணி பெரிதும் நம்பி இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து சொதப்பி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே 2 ஆண்டுகளாக ஃபார்மை இழந்திருந்த விராட் கோலி இப்போதுதான் ஓரளவுக்கு தேறி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் ரோஹித் சர்மா ஃபார்ம் அவுட் ஆகி அணிக்கு சுமையாக மாறிவிடுவாரோ என்று கவலைப்படுகிறார்கள் ரசிகர்கள்.

பேட்டிங்கில் சொதப்பினாலும், அணியில் இப்போது இருக்கும் வீரர்களில் தோனியைப் போல் Mr.Coolஆக அணியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் பெற்றவராக ரோஹித் சர்மாதான் இருக்கிறார். அதனால் அவரை அணியில் இருந்து நீக்குவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. மாறாக அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறார்கள்.

”ரோஹித் சர்மாவின் பலவீனம் பவுன்சர்கள். யாராவது இடுப்புக்கு மேல் பந்தை வீசினால் அதை சிக்சருக்கு கடாசிவிட வேண்டும் என்று ரோஹித் சர்மா துடிக்கிறார். முழு வேகத்தில் பந்தை தூக்கியடிக்க முயல்கிறார். இதுபோன்ற சூழலில் பல முறை பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கேட்சாக மாறிவிடுகிறது. அவரது இந்த பலவீனத்தை தெரிந்துகொண்ட எதிரணியினர் வேண்டுமென்றே ஷார்ட் பிட்ச் பந்துகளை அவருக்கு வீசுகிறார்கள். தனது இந்த பலவீனத்தை உணர்ந்து ரோஹித் சர்மா பொறுப்பாக பேட்டிங் செய்ய வேண்டும்” என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான மார்க் பவுச்சர், “டி20 போட்டிகளில் அதிரடியான தொடக்கம் வேண்டும் என்று நினைக்கும் ரோஹித் சர்மா, அதற்காக ஆக்ரோஷமாக ஆடி விக்கெட்டை இழக்கிறார். இதுபோன்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி சில முறை ஆட்டம் இழப்பது சகஜம்தான். இதிலிருந்து ரோஹித் சர்மா நிச்சயம் மீண்டு வருவார். அவர் ஃபார்முக்கு திரும்பினால் அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம்” என்கிறார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இப்படித்தான் நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கையைக் காக்க ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...