நிம்மதியாக சாக விரும்பும் அப்பா, அதற்கு தோள் கொடுக்கும் மகன் இதுதான் பொங்கல் ரேஸில் களமிறங்கியிருக்கும் காஸ்ட்லியான ’வாரிசுவின்’ ஒன்லைன்.
தன்னுடைய சம்பாத்தியத்தில் மிகப்பெரும் பிஸினெஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கும் சரத்குமார், அவர் நினைத்ததை மட்டுமே எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். வீடு என்பது மண்ணாலும் கல்லாலும் ஆனது அல்ல. உணர்வுகளால் உருவானது என்பதால் தனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், சரத்குமாருடன் குடும்பம் நடத்தும் அம்மா ஜெயசுதா. அப்பாவின் சொத்தை அடைய அவர் சொல்லை மீறாமல், ஆனால் தங்களுக்குள்ளே போட்டிப் போடும் மகன்களாக ஸ்ரீகாந்த், ஷாம். தன்னுடைய வாழ்க்கையை தனக்குப் பிடித்தது போல வாழ விரும்பும் கடைசி வாரிசு விஜய். கூடவே ஸ்ரீகாந்தின் மனைவியாக சங்கீதா, அவரது துடிப்பான தங்கையாக ராஷ்மிகா மந்தானா, ஷாம் மனைவியாக ……., இவ்வளவு பெரிய குடும்பத்தின் வீட்டு வேலையாளாக யோகிபாபு, உப்பு சப்பில்லாத வில்லனாக பிரகாஷ்ராஜ், இவருக்கு முட்டுக் கொடுப்பவராக கணேஷ் வெங்கட்ராம், கெஸ்ட் ஆக்டராக எஸ்.ஜே. சூர்யா என்று பரீட்சையில் இருபது மதிப்பெண் கேள்விக்கான பதிலைப் போல ஒரு பக்கத்திற்கு நீள்கிறது இத்தனை குணாதிசயங்களுடன் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களின் பட்டியல்.
இத்தனை கதாபாத்திரங்களை வைத்து கொண்டு ஒரு ஃபேமிலி சென்டிமெண்ட் கதையைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி.
கமர்ஷியல் சினிமாவின் ’வாரிசு’ என்று தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் விஜய். அடிக்கிற அடியாக இருக்கட்டும், பதபதைக்கிற பாசமாக இருக்கட்டும், கலாய்க்கிற காமெடியாக இருக்கட்டும், ஆல் ரவுண்டராக அசத்தியிருக்கிறார் விஜய். எப்படி இந்த மனிதரால் ரசித்தும் ஆட முடிகிறது, மற்றவர்கள் ரசிக்கும்படியும் ஆட முடிகிறது என்று அசரவைக்கிறது விஜயின் நடனம். விஜயை மட்டுமே நம்பி இப்படியொரு வீக்கான திரைக்கதையுடன் படமெடுக்க முடியும் என்பதை வம்சி பைடிப்பள்ளி தமிழ் சினிமாவிற்கு தனது பொங்கல் செய்தியாக கூறியிருக்கிறார்.
ராஷ்மிகா மந்தானா. இவர்தான் நேஷனல் க்ரஷ்ஷா என்று யோசிக்க வைத்திருக்கிறார். அந்தளவிற்கு அவருடைய அந்த குறுகுறுப்பான அழகும் எக்ஸ்ப்ரஷனும் மிஸ்ஸிங். இவருக்கான ஒரே வேலை விஜயைக் காதலிப்பது. டூயட்டுக்கு ஆடுவது. அதிலும் பாடல்களுக்கு இவரது காஸ்ட்யூம் எல்லாம் கரகாட்ட காஸ்ட்யூமின் ரெஸ்ட்ரோ பாணியில் பளபளக்கின்றன.
சரத்குமார் தனது கதாபாத்திரற்கு ஏற்றவாறு கலங்கியபடியே படம் முழுக்க வருகிறார். அன்பான அம்மாவாக, விஜயுடன் வரும் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்குகிறார் ஜெயசுதா. சரத் குமாருக்கு பான்க்ரியாட்டிக் கேன்சர் என்று ஒரு ட்விஸ்ட்டுக்கான டயலாக்கை சொல்வதைத் தவிர வேறெந்த வேலையும் பிரபுவுக்கு இல்லை. பிரகாஷ் ராஜ் ஹீரோவுக்கு சவால்விடும் அசகாய வில்லனாகவும் இல்லை. ஒரு கட்டத்தில் இவர் வில்லனா இல்லை காமெடியனா என்ற குழப்பம் வருகிறது. சங்கீதாவிற்கு மூன்றே மூன்று வசனம் மட்டுமே. ஸ்ரீகாந்தும், ஷாமும் படம் முழுக்க கோபப்படுகிறார்கள். அந்த கோபம் அவர்களது குரலில் மட்டும்தான் இருக்கிறது.
இப்படி அதாகப்பட்ட கதாப்பாத்திரங்கள், ஏகப்பட்ட மனுஃபேக்சரிங் பிரச்சினைகளோடு இருப்பதால் எதுவும் நம் மனதில் ஒட்டவில்லை.
இதனால் 20 அடி 30 அடி லாங் ஜம்ப்பில் பாய்ச்சல் எடுக்கவேண்டிய சென்டிமெண்ட் படம் சில சென்டிமீட்டர் தாவியதும் அப்படியே உட்கார்ந்துவிடுகிறது.
நல்லவேளையாக யோகி பாபு இருக்கிறார் என்று சொல்ல வைத்திருக்கிறது விஜய் – யோகி பாபு அடிக்கும் லூட்டிகள். விஜயும் யோகி பாபுவும் மாற்றி மாற்றி அடிக்கும் கவுண்டர்கள்… காமெடி என்கவுண்டர்கள்.
விஜயின் படங்களில் பொதுவாகவே பாடல்கள் நன்றாக இருக்கும். அந்த லிஸ்ட்டில் வாரிசுவையும் சேர்த்திருக்கிறார் எஸ்.எஸ். தமன். ‘ரஞ்சிதமே’ இந்தாண்டின் எஃப்.எம் ஹிட் லிஸ்ட்டில் எப்பொழுதும் இருக்கும் என உறுதியாக நம்பலாம். தீ தளபதி விஜய் ரசிகர்களுக்கான ரிங் டோன், காலர் டோன் பரிசு. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தை காட்டி பட்ஜெட் அதிகம் தெரியுமா என்று சொல்லாமல் சொல்கிறது. பிரவின் கே.எல். எடிட்டிங்கில் கொஞ்சம் கட்டிங் போட்டிருந்தால் வளவள படமாக இல்லாமல் இருந்திருக்கும். சண்டைக்காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் விஜய்.
ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ரிச்சாகவும், டீடெய்லிங்குடனும் இருக்க வேண்டுமென மெனக்கெட்டு இருக்கும் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி அதே அக்கறையை திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலும் செலுத்தியிருந்தால், ஜெயிக்கிற குதிரையை வைத்து கொண்டு பந்தயத்தில் இந்தளவிற்கு தடுமாறியிருக்க வாய்ப்பில்லை.