’இருபது வருஷம் நடிப்பது பெரிய விஷயம் இல்லை. இருபது வருஷமாக ஹீரோயினாக இருப்பதுதான் பெரிய விஷயம்.’ – த்ரிஷாவைப் பற்றி இப்படிதான் ’லியோ’ பட வெற்றிவிழாவில் கூறினார் விஜய்.
த்ரிஷா நடிக்க வந்து ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் அநேகமாக பெரிய கமர்ஷியல் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். எல்லோரையும் போலவே இவருக்கும் பாலிவுட் ஆசை எழுந்தது. ‘கட்டா மீட்டா’ என்னும் ஹிந்திப் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவரது நேரம் அந்தப் படம் சரியாக போகவில்லை. வசூலும் அள்ளவில்லை. இதனால் பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டார்.
இங்கே தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு, சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இதனால் திரைப்பட விழாக்கள் எதிலும் தலைக்காட்டாமல் மெளனமாக இருந்துவந்தார் த்ரிஷா.
இந்நேரத்தில்தான் அவருக்கு ’96’ திரைப்படம் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வெற்றியை அப்படம் பெற்றது. இதனால் ‘ஜானு’வாக த்ரிஷா கொண்டாடப்பட்டார். அடுத்த ஒரு இடைவெளியில், மணிரத்னத்தின் புண்ணியத்தில் ‘குந்தவை’ ஆக கொண்டாப்பட்டு வருகிறார்.
’பொன்னியின் செல்வன்’ வரிசைப் படங்களில் நடிக்க த்ரிஷா வெறும் இரண்டு கோடி வாங்கியதாக கூறுகிறார்கள்.
ஆனால் அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘லியோ’ படத்தில் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
இப்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’, அடுத்து கமலுடன் ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்து இருபெரும் கதாநாயகர்களுடன் நடித்துவரும் த்ரிஷா, சொல்லாமல் கொள்ளாமல தனது சம்பளத்தை பட்டென்று பத்து கோடியாக உயர்த்திவிட்டாராம்.
அந்தவகையில் இன்று அதிகம் சம்பளம் வாங்கி வரும் நயன்தாராவை, த்ரிஷா இப்போது பின்னுக்குத் தள்ளியிருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.
விக்னேஷ் சிவனை முந்திய பிரதீப் ரங்கநாதன்!
நயன்தாரா தனது காதல் கணவருக்கு தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி லைகா ப்ரொடக்ஷனில் அஜித்தை இயக்கும் பட வாய்ப்பை வாங்கி கொடுத்தார். ஆனால் தன்னுடைய கவன சிதறலால், அந்த பட வாய்ப்பை இழந்தார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில்தான், ‘லவ் டுடே’ படம் மூலம் எல்லோரையும் தன் பக்கம் திரும்ப வைத்த பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டார் விக்னேஷ் சிவன்.
முதலில் இந்த கூட்டணியில் படமெடுக்க திட்டமிட்டது கமலின் ராஜ்கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்தான். ஆனால் கமலுக்கும் விக்னேஷூக்கு ஏதோ கருத்து வேறுபாடு என்கிறார்கள்.
இதனால் இந்த படத்தை அப்படியே ’லியோ’ படத்தயாரிப்பாளருக்கு மாற்றி விட்டார் விக்னேஷ் சிவன்.
பணம் வந்தால் போதும் என பிரதீப் ரங்கநாதன், ஆனால் ஹீரோவாகதான் நடிப்பேன் என்று தயாராகிவிட்டார்.
இப்போது இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், பிரதீப் ரங்கநாதனை வைத்து படமெடுக்க களத்தில் குதித்த விக்னேஷ் சிவனுக்கு சம்பளம் 10 கோடியாம். ஆனால் ஒரே பட த்தில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு விக்னேஷ் சிவன் சம்பளத்தை விட இரு மடங்கு சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம். அதாவது 20 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.
அறுபது கோடியில் படமெடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரின் சம்பளம் மட்டுமே ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 50 சதவீதமாம்.
துருவ நட்சத்திரத்தை புறக்கணிக்கிறாரா விக்ரம்?
’இந்தியன் 2’ படத்தைப் போலவே ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கும் ஒரு நீண்ட பின்னணி இருக்கிறது. இந்த இரு படங்களும் தயாரான பின்பும் வெளியாக அதிக வருடங்கள் எடுத்து கொண்டிருக்கின்றன.
’துருவ நட்சத்திரம்’ படம் முடிந்த பின்பும், நிதிப்பிரச்சினையால் இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனனால் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக வெளியிட முடியவில்லை. இந்த நிதிப்பிரச்சினையை சமாளித்து துருவ நட்சத்திர ததை வெளியிடுவதற்காகதான் நடிக்கவே ஆரம்பித்தேன் என்று கெளதம் வாசுதேவ் மேனன் கூறினார்.
ஒருவகையில் எப்படியோ சமாளித்து இப்படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அதற்கான ப்ரமோஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
ஆனால் படத்தின் நாயகனான விக்ரம் இந்த ப்ரமோஷன் பக்கமே எட்டிப்பார்க்கவே இல்லை. ’பொன்னியின் செல்வன்’ பட த்திற்காக விழுந்து விழுந்து பேட்டிகள் கொடுத்த விக்ரம், ’கோப்ரா’ படத்திற்காக திரும்பிய பக்கமெல்லாம் பேட்டி கொடுத்த விக்ரம், துருவ நட்சத்திரம் படம் பக்கம் திரும்ப கூட இல்லை.
பா.ரஞ்சித் படத்தில் நடித்துவரும் ‘தங்கலான்’ பட வேலைகளில் இருப்பதால், இந்த பட ப்ரமோஷனுக்கு வரவில்லை என்று ஒரு காரணத்தை கூறுகிறது விக்ரம் வட்டாரம்.