“நீங்கதான் மன்னர். நான் தளபதி. நீங்க என்ன சொன்னாலும் செய்ய தயாரா இருக்கேன். என்ன நியூஸ் கேட்டாலும் ஏமாத்தாம பதில் சொல்வேன்” என்றவாறு ஆபீசுக்குள் எண்ட்ரி கொடுத்தாள் ரகசியா.
“என்ன லியோ ஃபீவரா”
“எனக்கு மட்டுமா? ஆளும் திமுக அரசுக்கும்தான் விஜய் ஃபீவர் பிடிச்சிருக்கு. விஜய்யோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு மண்டையை போட்டு உடைச்சுட்டு இருக்காங்க.”
“அதான் அவர் தெளிவா சொல்லிட்டாரே..2026ல கப்பு முக்கியம் பிகிலுனு. இதுல எதுக்கு மண்டைய உடைக்கணும்னு”
“அவங்க மண்டைய உடைக்கிறது அவர் வருவாரா மாட்டாராங்கிறது இல்லை. அவருக்குப் பின்னால யாரு? யார் சொல்லி இப்படிலாம் பேசுறாருன்றதுதான் அவங்க பிரச்சினை”
“பாஜகதான் விஜய் பின்னால இருக்குனு சொல்றாங்களே?”
“அப்படிதான் பேச்சு. திமுகவினரும் அப்படிதான் நினைக்கிறாங்க. அறிவாலயத்துல இதை பத்தி விசாரிச்சேன். விஜய் நேரடியா அரசியலுக்கு வரலனாலும் 1996ல ரஜினி திமுகவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுத்த மாதிரி விஜய் யாருக்காவது ஆதரவாகவோ எதிராகவோ வாய்ஸ் கொடுப்பார்னு நினைக்கிறாங்க. 2024 நாடாளுமன்றத் தேர்தல்லயே அவர் திமுகவுக்கு எதிரா இருக்கிற மாதிரி பிம்பத்தை கட்டமைச்சா என்ன செய்யறதுனு யோசிக்கிறாங்களாம்”
“விஜய் தரப்புல என்ன திட்டம்?”
“அவர் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம அடுத்த படத்தோட ஷூட்டிங்குக்கு பறந்து போயிட்டார். இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது ரஜினி பார்முலாவைத்தான் விஜய்யும் பாலோ பண்றார்னு ஒரு பேச்சும் இருக்கு. தனக்கு தேவைப்படும்போது மட்டும் அரசியல் பேசி, கடைசி வரைக்கும் அரசியல் பக்கம் வராம இருந்துடுவார்னு சொல்ற திமுகவினரும் இருக்காங்க”
“இனி விஜய் பத்தி அடுத்த ஆடியோ பங்ஷன்போது கவலைப்படலாம். எ.வ.வேலு சம்பந்தப்பட்ட இடங்கள்ல ரெய்ட் நடக்குதே?”
“எ.வ.வேலு இடங்கள்ல ரெய்ட் நடக்கும்னு நான் 2 வாரத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தேன். அப்ப நீங்க நம்பல. இப்ப நான் சொன்னது நடந்துடுச்சு. இதுக்கு என்ன சொல்றீங்க?”
“ரகசியா சொன்னா நம்பாம இருப்பேனா? நீதான் நான் நம்பலைன்னு நினைச்சிருக்கே. ஆமா இந்த ரெய்ட்ல ஏதாவது சிக்குமா?”
“அமைச்சரவை கூட்டம் நடந்தப்பவே அடுத்தடுத்து அமைச்ச்சர்கள் வீட்ல ரெய்ட் நடக்கலாம்னு முதல்வர் எச்சரிச்சிருக்காரு. அதனால அமைச்சர்கள் உஷாராத்தான் இருந்திருக்காங்க. அப்படி எச்சரிக்கையா இருந்ததால எ.வ.வேலு வீட்ல ஏதும் கிடைக்குமாங்கிறது சந்தேகம்தான். அதோட இப்பல்லாம் எங்கயாவது ரெய்ட் நடந்தா மக்களுக்கும் அது பிரேக்கிங் நியூஸா தெரியலை. எதிர்க்கட்சிக்காரங்க மேல அடுத்தடுத்து மத்திய அமைப்புகள் ரெய்ட் நடத்தறதால இதை ரொம்ப சாதாரணமாவும்,. பழிவாங்கும் நடவடிக்கையாவும்தான் பார்க்கிறாங்க. இப்படியே போனா இதுமாதிரி ரெய்ட்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையை மக்களுக்கு ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்குன்னு திமுக தலைவர்கள் சொல்றாங்க. நிறைய ரெய்ட் நடத்துனா நாடாளுமன்றத் தேர்தல்ல நமக்கு நிறைய வெற்றி வாய்ப்புனு சந்தோஷமா பேசிக்கறாங்க. ”
“அப்போ ரெய்டுக்குலாம் அவங்க பயப்படலையா?”
“இல்லை. நாங்க பார்க்காத ரெய்டானு ஜாலியா இருக்காங்க”
“ஆளுநர் மேல உச்ச நீதிமன்றத்துல தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்கே?”
“உச்ச நீதிமன்றத்தில் இதுவரைக்கும் நடந்த ஆளுநர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்ல மாநில அரசுக்கு சாதகமாத்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கு. அதனால இந்த தங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்னு தமிழக அரசு நம்புது. ஆளுநர் மீது தனித்தனியாக வழக்கு போட்டு அவரை ஒரு சர்ச்சைக்குரிய நபராக முன்னிலைப்படுத்தறதுதான் திமுக அரசின் திட்டம். இப்ப தமிழ்நாட்டு மாதிரியே கேரளா, பஞ்சாப், தெலங்கானா அரசுகளும் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு எதிரா வழக்கு தொடர்ந்திருக்காங்க”
“தனக்கு எதிரா தமிழக அரசு வழக்கு போடப் போறது ஆளுநருக்கு முன்கூட்டியே தெரிஞ்சுடுச்சாமே?”
“ஆமாம். இந்த ஆட்சியில நடக்கற பல விஷயங்களை ஆளுநருக்கு இரண்டு குறிப்பிட்ட அதிகாரிங்க முன்கூட்டியே தெரிவிக்கிறதா தமிழக முதல்வருக்கு உளவுத் துறை ஏற்கெனவே தகவல் தெரிவிச்சு இருந்தது. அந்த அதிகாரிங்க யார்ங்கிற விஷயத்தையும் அவங்க சொல்லி இருந்தாங்க. ஆனா, ‘மத்திய அரசு அழுத்தம் காரணமா அவங்க இந்த வேலையைப் பார்க்கிறாங்க. இதுவும் நமக்கு நல்லதுதான்’ன்னு சொல்லி முதல்வர் அந்த பிரச்சினையை அப்படியே விட்டுட்டார். உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு வழக்கு போடப்போற நியூஸையும் இந்த அதிகாரிகள் தான் முன்கூட்டியே ஆளுநருக்கு சொல்லி இருக்காங்க. அவரும் சட்ட நிபுணர்கள்கிட்ட இதுபத்தி ஆலோசனை நடத்தி இருக்கார்.”
“மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாலயும் ஆளுநருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதா கேள்விப்பட்டேனே?”
“சங்கரைய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மதுரை பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றிச்சு. ஆனா அவரோட சுதந்திரப் போராட்ட தியாகம் பற்றி சில சந்தேகங்களை எழுப்பி ஆளுநர் அவருக்கு டாக்டர் பட்டம் தர மறுப்பு தெரிவிச்சிருக்கார். இதைத் தொடர்ந்து நடந்த பட்டமளிப்பு விழாவை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். இது தவிர ஆளுநர் கையால் நாங்கள் முனைவர் பட்டம் வாங்க மாட்டோம்னு சில பேராசிரியர்களும் அந்த நிகழ்ச்சியை புறக்கணிச்சாங்க. இதைத்தொடர்ந்து பல சிண்டிகேட் உறுப்பினர்களும் அந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துக்காமல் புறக்கணிச்சு இருக்காங்க. இது ஆளுநருக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கு.”
“சூர்யா சிவாவை திரும்ப பாஜகல சேர்த்திருக்காங்களே?”
“பாஜகல இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, திமுக, அதிமுக இரண்டு கட்சியிலயும் சேர அவர் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருந்தார். அப்படி ஏதாவது கட்சியில சேர்ந்தா அண்ணாமலை பற்றி சுடச் சுட நிறைய விவரங்கள் சொல்வேன்னெல்லாம் சொல்லிட்டு இருந்தார். ஆனா திமுகவுல அவருக்கு பெரிய அளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கல. அதிமுக அவரை ஏத்துக்க தயாரா இருந்தது. நவம்பர் 5-ம் தேதி எடப்பாடி முன்னிலையில அவர் அதிமுகல சேருவதா இருந்தார். அதுக்குள்ள அண்ணாமலை அவரைச் சமாதானப்படுத்தி, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் வாங்கிட்டார். பழைய கட்சிப் பதவியையும் கொடுத்திருக்கார். இதில பெரிய ஹைலைட் என்னன்னா அமர் பிரசாத் ரெட்டி ஜெயில்ல இருக்கும்போது அண்ணாமலை இந்த முடிவை சுயமா எடுத்திருக்கிறார். அமர் பிரசாத் ரெட்டிதான் பாரதிய ஜனதாவில் சூரியாவோட வளர்ச்சிக்கு தடையா இருந்தவர்ங்கிறதையும் இங்க நாம கவனிக்கணும்.”
“அப்போ அமர்பிரசாத் ரெட்டி அவுட் சூர்யா இன் -னு சொலியா? சரி, அதிமுக நியூஸ் ஏதாவது இருக்கா?”
“பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடிக்கு எதிரா ஓபிஎஸ் குரூப்பும், தினகரன் குரூப்பும் ஒழிக கோஷம் போட்ட்தையும், கார் மீது கல்வீச்சு, செருப்பு வீச்சு நட்த்தினதையும் தேவர் அமைப்புகள் அவ்வளவா ரசிக்கவிலை. தேவர் ஐயா நினைவிடத்தில் இப்படி சர்ச்சையை ஏற்படுத்தி அவரை கொச்சைப்படுத்திட்டீங்கன்னு தினகரன் ஓபிஎஸ் இருவரிடமும் கோபமாக வாக்குவாதம் செஞ்சிருக்காங்க. அதனாலதான் அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்திருக்க கூடாதுன்னு அடுத்த நாள் ஓபிஎஸ் கருத்து சொல்லியிருக்கார்.”