No menu items!

திக் திக் செமி ஃபைனல் : இந்தியா – பாகிஸ்தான் மோதலா? என்ன நடக்கும்?

திக் திக் செமி ஃபைனல் : இந்தியா – பாகிஸ்தான் மோதலா? என்ன நடக்கும்?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிச் சுற்றை எட்டிய நிலையில், நான்காவதாக அரை இறுதிச் சுற்றை எட்டப்போகும் அணி எது என்ற சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது.

நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த ஒரு இடத்துக்காக கடுமையாக போராடி வருகின்றன. இந்த 3 அணிகளும் இப்போது தலா 8 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் அரை இறுதியை எட்டுவதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்போம்…

நியூஸிலாந்து:

இப்போதைய நிலையில் மற்ற 2 அணிகளைவிட நியூஸிலாந்து அணிக்கான வாய்ப்புகள் சற்று அதிகமாக இருக்கின்றன. இதற்கு காரணம் நியூஸிலாந்து அணியின் நெட் ரன் ரேட். இப்போதைய நிலையில் நியூஸிலாந்து அணியின் நெட் ரன் ரேட் +0.398. அதனால் தங்கள் கடைசிப் போட்டியில் நெட் ரன் ரேட்டைப் பற்றி நியூஸிலாந்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

தங்கள் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணியை வெல்வதில் மட்டும் அந்த அணி கவலைப்பட்டால் போதும். மேலும் இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை பலவீனமான அணிகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. அந்த அணியை எதிர்த்து தங்கள் கடைசி போட்டியில் ஆடுவது நியூஸிலாந்துக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் போட்டி நடக்கும் பெங்களூரு நகரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நியூஸிலாந்து அணி டென்ஷனில் இருக்கிறது. அப்படி மழை பெய்து 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டால், நியூஸிலாந்தின் பாடு கஷ்டம். மற்ற இரு அணிகளும் கடைசி ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே நியூஸிலாந்தால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.

ஆப்கானிஸ்தான்:

இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணி, அரை இறுதி வாய்ப்புக்காக கடைசி வரை போராடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் தங்களைப் பற்றிய கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது ஆப்கானிஸ்தான். ஆனால் அந்த அணி அரை இறுதிக்கு செல்ல கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

இதற்கான முக்கிய காரணம் கடைசி லீக் ஆட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அணி. இந்தியாவுக்கு அடுத்து, இந்த உலகக் கோப்பையில் வலிமையான அணியாக கருதப்படும் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஆடுகிறது. அந்த அணியை ஆப்கானிஸ்தான் அணி வெல்வது கடினம். அப்படியே வென்றாலும் நியூஸிலாந்தும், பாகிஸ்தானும் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் தோற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு உள்ளது. அவர்களின் நெட் ரன் ரேட் -0.338 என மோசமான நிலையில் இருப்பதே இதற்கு காரணம்.

பாகிஸ்தான்:

இந்த தொடரில் தட்டுத் தடுமாறி முன்னேறிய பாகிஸ்தான் அணி, தன் கடைசி போட்டியில் இங்கிலாந்தை எடுத்து ஆடவுள்ளது. அந்த அணி அரை இறுதிச் சுற்றுக்குள் நுழையவேண்டுமானால் இந்த போட்டியில் அதிக ரன் ரேட்டில் ஜெயிக்க வேண்டும். இப்போது அவர்களின் நெட் ரன் ரேட் +0.036

அரை இறுதிக்கு பாகிஸ்தான் முன்னேறினால், அப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆடும் அணியாக பாகிஸ்தான் இருக்கும். கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை உலக்க் கோப்பையில் சந்திக்கும். அனல் பறக்கும் ஒரு போட்டியை மீண்டும் பார்க்கலாம்.

2011-ம் ஆண்டில் அரை இறுதியில் பாகிஸ்தானை வென்றே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பின்னர் கோப்பையையும் கைப்பற்றியது. அதேபோன்று இந்த உலகக் கோப்பையிலும் இந்திய அணி பாகிஸ்தானை வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்களின் கனவாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...