சர்ச்சைகளுக்கு வெல்கம் பார்ட்டி கொடுத்து, வரவழைத்து அதைக் கொண்டாடுவது பிரகாஷ் ராஜின் பாணி.
சினிமாவில் வில்லனாக மேக்கப் போட்டாலும், யதார்த்த வாழ்க்கையில் அரசியல்வாதிகளுக்கு எதிராக கேள்வி கேட்டு அவர்களுக்கும் வில்லனாகி இருப்பதுதான் ஹைலைட் சமாச்சாரம்.
சமீபகாலமாகவே பிரகாஷ் ராஜ் மத்தியில் ஆளும் கட்சியையும், மாநிலத்தில் கோட்டையைப் பிடித்த கட்சியையும் விட்டுவைக்காமல் கமெண்ட்களினால் கலங்கடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘என்னுடன் சேர்ந்து நடிப்பதற்கு மற்ற நடிகர்கள் பயப்படுகிறார்கள். என்னுடைய அரசியல் அணுகுமுறைதான் இவர்களின் பயத்திற்கு காரணம். சில நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடித்தால், அவர்களது சினிமா கேரியர் கேள்விக்குறியாகி விடுமோ என யோசிக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் சங்கடமான சூழல் எனக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. என்னைப் பார்த்து இவர்கள் விலகி செல்வதால் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை.
Politics தொடர்பாக நான் தொடர்ந்து பேசுவேன். என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. என்னுடன் நடிக்காமல் தவிர்க்கும் நடிகர்கள் மீது எனக்கு எந்தவித கோபமும் இல்லை. அது அவர்களது அவர்களுடைய விருப்பம். என்னைப் பொறுத்தவரை எந்தவிதமான விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். என்னுடைய கருத்தை ஒலிக்கச் செய்வேன்.’’ என்று கொஞ்சம் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
Aamir Khan – திடீர் முடிவு ஏன்?
நான்கு வருடங்கள் உழைப்பு. அதற்கு கிடைத்த பரிசு ஃப்ளாப்.
அந்த அதிர்ச்சியில் கொஞ்சம் ஆடிப்போயிருந்தார் அமீர்கான்.
1994-ல் வெளியாகி ஆஸ்கர் விருதை வென்ற ‘’Forrest Gump’ படத்தின் அதிகாரப்பூர்வ இந்தியப் படமாக வெளிவந்தது. ‘Lal Singh Chaddha’. இப்படம் வெளிவருவதற்கு முன்பே, ‘லால் சிங் சத்தா’வை புறக்கணிப்போம் என இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் தாண்டி படம் வெளியானது. ஹிந்தி மட்டுமில்லாமல் டப் செய்த அனைத்து மொழிகளிலும் படம் வரவேற்பை பெறவில்லை.
இப்படியொரு சூழலில், டெல்லியில் நடந்த விழாவில், ‘ஒரு நடிகராக ஒரு ப்ரேக் எடுக்க நான் விரும்புகிறேன்’ என்று அமீர் கான் கூறியிருப்பது இந்திய சினிமாவில் பேசு பொருளாகி இருக்கிறது.
கடந்த 35 வருடங்களாக ஒரு நடிகராக மட்டுமே இருக்கும் அமீர் கானுக்கு சினிமாதான் கம்பானியன். எந்தவொரு படத்திற்குள் சென்றாலும் அப்படம் தொடங்கி வெளியாகும் வரையிலும் அதைப்பற்றி மட்டுமே யோசிக்கும், அந்த கதாபாத்திரமாகவே சுவாசிக்கும் ஒரு நடிகர் அமீர் கான். அதாவது நம்மூரில் இருக்கும் கமல் ஹாஸனைப் போல இவரும் ஒரு சினிமா காதலன்.
இந்நிலையில் நான் ப்ரேக் எடுக்க விரும்புகிறேன் என்று அவர் வெளிப்படையாக பேச என்ன காரணம்?
முதல் காரணம், லால் சிங் சத்தாவின் எதிர்பாராத தோல்வி. பெரும் பட்ஜெட்டில், நான்கு காலம் செலவிட்டும் படம் எங்கும் ஓடவில்லை. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை அமீர் கான் ஈடுகட்ட வேண்டுமென கொடிபிடித்தார்கள். இதனால் வேறு வழியில்லாமல் நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த சம்பளத்தை பகிர்ந்து விநியோகஸ்தர்களுக்கு கொடுத்துவிட்டார். இது அவருக்கு நடந்த மாபெரும் சரிவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் ரொம்பவே மனமுடைந்து போய்விட்டார் அமீர் கான்.
இரண்டாவது காரணம், அமீர் கானின் அம்மா ஸீனத் ஹூசைன். திடீரென இவருக்கு ஹார்ட் அட்டாக். உடல் நலமில்லாமல் ஒய்வில் இருக்கிறார். இவரை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயமும் அமீர் கானுக்கு இருக்கிறது.
மூன்றாவது காரணம், அமீர் கானுக்கு நடந்த இரு திருமணங்களும் தோல்வியில் முடிந்திருப்பது. இரண்டாவது திருமணம் நீடித்து நிற்கும் என்று நினைத்த அமீர் கானுக்கு இந்தப் பிரிவு பெரும் தனிமையைக் கொடுத்துவிட்டு போயிருக்கிறது. அம்மா ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம். இவர்கள் இருவரையும் பார்த்து கொள்ள அவரது 57 வயது அனுபவம் முன்வந்து நிற்கிறது.
இந்த காரணங்களினால்தான், அவர் தயாரித்து நடிக்கும் ‘சேம்பியன்ஸ்’ படத்திலிருந்து ஒரு நடிகராக விலகிக் கொண்டிருக்கிறார். ’ ஒரு நடிகராக ஒரு படத்தில் நடிக்கும் போது என்னை முழுவதுமாக அதற்கு கொடுத்துவிடுகிறேன். அதனால் வாழ்க்கையில் வேறெதுவும் நடப்பது இல்லை. சேம்பியன்ஸ் ஒரு அருமையான ஸ்கிரிப்ட். அழகான கதை. மனதை வருடும் ஒரு படமாக இருக்கும். ஆனால் எனக்கு ஒரு ப்ரேக் தேவைப்படுகிறது. எனக்கு பதிலாக அப்படத்தில் நடிப்பதற்கு மற்ற நடிகர்களை அணுக இருக்கிறேன். என் அம்மா, குழந்தைகள் என குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் உறவுகளைக் கொண்டாட ஆசைப்படுகிறேன்.’ என்று உருக்கமாக கூறியிருக்கிறார் அமீர் கான்.
ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம் ப்ரேக் எடுக்கிறேன் என்று சொல்லும் அமீர் கானின் முடிவை மதிப்பதே அவருக்கும் நாம் கொடுக்கும் கெளரவம்.