எளிதில் ஒன்று சேராத எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து பெங்களூருவில் ஒரு முக்கிய காரியத்தை செய்திருக்கிறார்கள்.
தங்கள் கூட்டணிக்கு இந்தியா – INDIA (Indian National Developmental Inclusive Alliance) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் பெயர் ஒரு கூக்ளி. பாஜக கூட்டணி எதிர்பார்க்காதது என்பது பாஜக தரப்பிலிருந்து வரும் எதிர்வினைகளிலிருந்து தெரிகிறது.
இந்தியா என்பது நமது பெயர் இல்லை, பிரிட்டிஷ்காரனுடையது என்கிறார் ஒருவர். இந்திய தேசிய காங்கிரஸ் என்பது காங்கிரஸ் பெயர் ஆனால் பாஜக இந்திய தன்மையுடன் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்திருக்கிறது என்கிறார் இன்னொருவர். பாரதம் என்பதே சரி இந்தியா என்று சொல்லக் கூடாது, அது இங்கிலாந்துக்கரனின் யோசனை என்கிறார் மற்றொருவர். பாஜக தரப்பு இந்தப் பெயரை எதிர்பார்க்கவில்லை என்பது மட்டும் இந்த எதிர்வினைகளிலிருந்து தெரிகிறது.
கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை முன் வைத்தது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி என்று செய்திகள் கசிந்துக் கொண்டிருக்கின்றன.
26 கட்சிகள் இணைந்து நடத்திய பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பெயர்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
மதிமுகவின் வைகோ, இந்திய மக்கள் கூட்டணி – Indian Peoples Alliance என்ற பெயரை கூறியிருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசிய திருமாவளவன், Save India Alliance Secular India Alliance என்ற இரண்டு பெயர்களை கொடுத்திருக்கிறார்.
Save Democracy Alliance என்ற பெயரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்திருக்கிறது.
இப்படி பல பெயர்கள் அலசப்பட்டு இறுதியில் இந்தியா ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியா என்று சொல்லும்போது பாஜகவினரால் எதிர்த்து பேசுவதற்கு சிரமமாக இருக்கும் என்று ராகுல் கூறியதாகவும் தகவல்கள் இருக்கின்றன.
ஆனால் இந்தப் பெயரை எப்படி தமிழில் சொல்லுவது என்ற சிரமம் தமிழ்நாட்டு கட்சிகளுக்கு இருக்கிறது. முன்பு UPA என்ற பெயர் இருந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று சுலபமாக சொல்ல முடிந்தது. ஆனால் INDIA – Indian National Developmental Inclusive Alliance என்ற நீண்ட ரயில் பெட்டி தொடர்போல் இருக்கும் பெயரை தமிழ்ப்படுத்துவது சற்று சிரமம். இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி என்று சொல்லி முடிப்பதற்குள் தேர்தல் முடிந்துவிடும்.