No menu items!

தொடங்கியது Test World Cup – ஜெயிக்குமா இந்தியா?

தொடங்கியது Test World Cup – ஜெயிக்குமா இந்தியா?

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இதுவரை எட்டாமல் பெப்பே காட்டிக்கொண்டிருக்கும் ஒரே கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைதான். மற்ற எல்லா கோப்பைகளையும் இரு அணிகளும் ஏற்கெனவே வெற்றுவிட்டன. அதனால் இதுவரை எட்டாமல் இருந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதற்காக இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் யுத்தத்தை தொடங்கி இருக்கின்றன இந்த இரு அணிகளும்.

ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை அதன் ஆடுகளத்தில் புற்கள் அதிகம். அதனால் பந்துகள் சரசரவென மேலே எழும்பும். சமயத்தில் தோள் உயரத்துக்குப் பாயும். அதுவும் முதல் நாளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே இந்திய அணி டாஸை வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் ரோஹித் சர்மா. முகமது ஷமி, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை வேகப்பந்து தாக்குதலுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்காது என்பதால் அஸ்வினை வெளியே உட்காரவைத்து ஆல்ரவுண்டர் என்பதால் ஜடேஜாவை மட்டும் சேர்த்திருக்கிறார்கள். பும்ரா இல்லாத சூழலில், இங்கிலாந்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஷமியைத்தான் இந்த போட்டியில் இந்தியா அதிகம் நம்பியிருக்கிறது.

மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் இந்தியாவின் முக்கிய பலம் பேட்டிங்தான். அதிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, சேதேஷ்வர் புஜாரா என கடந்த 5 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியை ஆண்டுவந்த வீரர்களுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால் அதிக கவனத்துடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மற்ற வீரர்களைவிட குறைந்த டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரோஹித் சர்மாவுக்கு, இது 50-வது டெஸ்ட் போட்டி. இதில் வென்று தான் சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடாத நிலையில் அதை ஈடுகட்டும் அளவுக்கு இந்த தொடரில் அவர் ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை விராட் கோலி, ரஹானே ஆகிய இருவருக்கும் சிறப்பானதாக இருந்தது. அதே ஃபார்மை இந்த டெஸ்ட்டிலும் அவர்கள் தொடர்ந்தால் இந்தியாவுக்கு ரன் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மற்ற வீரர்களெல்லாம் ஐபிஎல் தொடரில் பிசியாக இருந்தபோது, இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்தார் புஜாரா. இங்கிலாந்து மைதானங்களில் பல மாதங்களாக தொடர்ந்து ஆடும் அவரது அனுபவம் இந்தியாவுக்கு கைகொடுக்கலாம்.

இந்த போட்டியைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு அதிக அச்சம் ஏற்படுத்தக் கூடியவர்களாக பேட்டிங்கில் வார்னர், ஸ்மித்; பந்துவீச்சில் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளித்தாலே பாதி வெற்றி பெற்றதற்கு சமம். ஆனால், அது அத்தனை சுலபமாக இருக்காது. இந்திய ஜாம்பவான்களைப் போல் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களான வார்னர், ஸ்மித் உள்ளிட்டோருக்கும் இது கடைசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பாக இருக்கும் என்பதால் அவர்களும் வெற்றிக்காக கடும் போராட்டத்தை நடத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன் இதில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் டாஸ் முக்கிய பங்காற்றும் என்று சொல்லப்பட்டது. டாஸை வெல்லும் அணி கண்டிப்பாக பந்துவீச்சை தேர்வு செய்து எதிரணியின் விக்கெட்களைக் கொய்யும் என்றும் வெற்றிக்கு இது அடித்தளமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதன்படியே இந்தியா டாஸை வென்றுவிட்டது. அதே வேகத்தில் ஆட்டத்தை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...