பிரபல நடிகர் டேனியல் பாலாஜி, வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார்.
சென்னையில் உள்ள தரமணி திரைப்பட கல்லூரியில் படித்த பாலாஜி, சில காலம் கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினார்.
சித்தி தொடரில் அறிமுகம்
இதன்பிறகு சின்னத்திரையில் வெளியான ராதிகாவின் சித்தி தொடரில் அறிமுகமானவர். அதில் இவருடைய பெயர் டேனியல். இந்த தொடரில் பாலாஜியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டதால் அதற்கு பிறகு அவரது பெயர் டேனியல் பாலாஜி என மாறியது.
சின்னத் திரையில் இருந்து திரைத்துறைக்கு சென்ற இவர், ‘காக்க காக்க’, வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’ ஆகிய படங்களில் முக்கிய வேட்த்தை ஏற்று நடித்து ரசிகர்கலின் கவனத்தைக் கவர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
முரளியின் தம்பி
வெள்ளிக்கிழமை இரவு இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டானியல் பாலாஜியின் அம்மாவும், நடிகர் முரளியின் அம்மாவும் சகோதரிகள் ஆவர். அந்த வகையில் டானியல் பாலாஜி, நடிகர் முரளிக்கு தம்பி ஆவார்.
திரையுலகினர் அஞ்சலி:
டேனியல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அவரது உடலுக்கு இயக்குநர்கள் அமீர், கவுதம் மேனன், வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக நடிகர் டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்திருந்தார். புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கே சென்ற மருத்துவர்கள் கண்களை தானம் பெற்றனர். தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
ராதிகா இரங்கல்:
டேனியல் பாலாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார், “டேனியல் பாலாஜி எங்களது ராடான் சித்தி தொடரில் அறிமுகமான ஒரு திறமை மிக்க நடிகர். நெகடிவ் ரோலில் சித்தி தொடரில் நடித்த போதிலும் பெரும் புகழ் அவருக்கு கிடைத்தது. அருமையான மனிதர் அவர். அவரது மறைவு என்னை துயரில் ஆழ்த்துகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோயில் கட்டிய டானியல் பாலாஜி:
டேனியல் பாலாஜி சென்னைக்கு அருகிலுள்ள ஆவடி பகுதியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். தனது அம்மாவின் ஆசைக்காக இந்த கோயிலை தான் கட்டியதாக டானியல் பாலாஜி அப்போது கூறினார்.