No menu items!

டி20 உலகக் கோப்பை – எதிரணிகளின் பலம், பலவீனம் என்ன?

டி20 உலகக் கோப்பை – எதிரணிகளின் பலம், பலவீனம் என்ன?

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் அணிகளைப் பற்றி ஒரு பார்வை…

இந்தியா:

இந்த டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில்கூட தோற்காமல் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தியுள்ளதால் இந்திய வீரர்களின் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கிறது.

பலம்:

பொதுவாக ஒவ்வொரு தொடரிலும் இந்திய அணியின் பேட்டிங்தான் பெரிதாக பேசப்படும். ஆனால் இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு அதிகம் கவனிக்க வைக்கிறது. இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய அர்ஷ்தீப் (15 விக்கெட்கள்), ரன்களைக் கொடுக்காமல் பேட்ஸ்மேனின் கழுத்தை நெரிக்கும் பும்ரா. மூன்றே போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்தியிருக்கும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியின் மிகப்பெரிய பலம். பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா திரும்பவும் ஃபார்முக்கு வந்திருப்பது கூடுதல் வலு சேர்க்கிறது.

பலவீனம்:

இந்திய அணியின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலி தொடர்ந்து அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பதும், ஆல்ரவுண்டர் ஜடேஜா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சோபிக்காமல் இருப்பதும் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து:

அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து ஆடும் அணி இங்கிலாந்து. லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோற்ற இங்கிலாந்து, கடுமையான போராட்டத்துக்கு பிறகு அரை இறுதியில் கால் வைத்துள்ளது.

பலம்:

ராஸ் பட்லர், பில் சால்ட் ஆகிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், இங்கிலாந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். இவர்களை அவுட் ஆக்குவது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதேபோல் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

பலவீனம்:

ஜோஃப்ரா ஆர்ச்சரைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் இதுவரை சோபிக்காமல் இருப்பது இங்கிலாந்து அணிக்கு பலவீனம். மிதவேகப் பந்துவீச்சுக்கு சாதகமான மேற்கிந்திய ஆடுகளங்கள், இங்கிலாந்தின் அதிவேக பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுக்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா:

இந்தியாவைப் போன்றே ஒரு போட்டியில்கூட தோற்காமல் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்ந்திருக்கும் மற்றொரு அணி தென் ஆப்பிரிக்கா. இதுவரை ஒரு சர்வதேச தொடரில்கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றாத தென் ஆப்பிரிக்க அணி, முதல் முறை கோப்பையை வெல்லும் கனவுடன் இருக்கிறது.

பலம்:

பேட்டிங்கைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்க அணியின் முதுகெலும்பாக அதன் தொடக்க ஆட்டக்கார்ர் குயிண்டன் டி காக் இருக்கிறார். இந்த தொடரில் மொத்தம் 199 ரன்களைக் குவித்துள்ள அவரைச் சுற்றித்தான் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசை அமைந்துள்ளது. பேட்டிங்கில் கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் நோர்ஜே, ரபாடா, ஷம்சி ஆகியோரின் பந்துவீச்சு புதிய தெம்பை தென் ஆப்பிரிக்க அணிக்கு அளித்துள்ளது.

பலவீனம்:

லீக் ஆட்டங்களில் எப்போதும் சிறப்பாக ஆடும் தென் ஆப்பிரிக்க அணி, நாக் அவுட் போட்டிகளில் அனாயாசமாக தோற்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அதனாலேயே அவர்களை சோக்கர்ஸ் என அழைப்பதுண்டு. இதுதான் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய பலவீனம்.

ஆப்கானிஸ்தான்:

இந்த உலகக் கோப்பை தொடரில் எல்லோரையும் ஆச்சரியப்படவைத்து அரை இறுதிக்குள் நுழைந்த அணி ஆப்கானிஸ்தான். முதல் சுற்றையே தாண்டாது என்று எல்லோரும் கணித்த ஆப்கானிஸ்தான், அதைக் கடந்து, சூப்பர் 8 சுற்றையும் கடந்து இப்போது அரை இறுதிச் சுற்றை அடந்திருக்கிறது.

பலம்:

எதிரணியைக் கட்டிப்போடும் பந்துவீச்சுதான் ஆப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம். ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 120 ரன்களை மட்டுமே எடுத்தால்கூட, அவர்களின் பந்துவீச்சு அதை சவாலான ஸ்கோராக மாற்றிவிடுகிறது. ஃபரூக்கி (17 விக்கெட்கள்), ரஷித் கான் (14 விக்கெட்கள்), நவீன் உல் ஹக் (13 விக்கெட்கள்), ஆகிய 3 பந்துவீச்சாளர்கள் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை கொத்தாக தூக்கிவிடுகிறார்கள்.

பலவீனம்:

தொடக்க ஆடாக்காரர்களைத் தவிர மற்ற அனைவரும் பேட்டிங்கில் சொதப்பி வருவது ஆப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலவீனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...