No menu items!

நாடாளுமன்றத்தில் எ.வ.வேலு – திமுகவினர் அதிர்ச்சி – மிஸ்.ரகசியா

நாடாளுமன்றத்தில் எ.வ.வேலு – திமுகவினர் அதிர்ச்சி – மிஸ்.ரகசியா

“எ.வ.வேலு வாழ்க” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா.

“கரெக்டான நியூசோட வர்ற. நாடாளுமன்றத்துல திமுக எம்.பி.க்கள் எ.வ.வேலுவுக்கு வாழ்க கோஷம் போட்டதைதானே சொல்ல வர்றே”

‘அதே அதே” என்று ஆரம்பித்தாள் ரகசியா.

“கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன், ஆரணி எம்.பி.தரணி வேந்தன், திருவண்ணாமலை எம்.பி.சி.என்.அண்ணாதுரை மூணு பேரும் பதவியேற்றதும் கலைஞர், ஸ்டாலின், உதயநிதிக்கு வாழ்க கோஷம் போட்டுட்டு எ.வ.வேலு வாழ்கனு கோஷம் போட்டாங்க. இதை திமுக தலைமையே எதிர்பார்க்கலையாம். அறிவாலய வட்டாரத்துல விசாரிச்சப்ப திமுகவினர் கடுப்பாகி இருப்பதை தெரிஞ்சுக்க முடிஞ்சது. அண்ணா, கலைஞர், ஸ்டாலின்னு இருந்த இயக்கம் உதயநிதிக்கு வாழ்க போடுறதே தப்பு. இதுல எ.வ.வேலுவுக்கு வாழ்க போடுறாங்களே…அதுவும் நாடாளுமன்றத்துலனு ஒரு மூத்த அமைச்சர் வருத்தப்பட்டிருக்கிறார்”

“அப்ப எ.வ.வேலுதான் ஆல் பவர்ஃபுல்லா?”

“இதுலென்ன சந்தேகம். ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரத்தை எ.வ.வேலு சரியா கவனிக்கலனு திமுகவுல முணுமுணுப்பு இருக்கு. இப்ப இதுவும் சேர்ந்திருக்கு. எ.வ.வேலு கட்சிக்குள்ள தனக்குனு ஒரு கூட்டத்தை உருவாக்கிட்டு வரார். அவரை எதிர்த்து யாரும் எதுவும் சொல்ல முடியலனு குமுறிக்கிட்டு இருக்காங்க கட்சிக்காரங்க”

“இந்த கோஷத்துக்கு அப்புறம் அவருக்கு செக் வைப்பாங்களா?”

“ஜெயலலிதாவா இருந்தா கட்சியிலிருந்தே நீக்கியிருப்பாங்க. கலைஞரா இருந்தா கூப்ட்டு கண்டிச்சிருப்பாரு. ஆனா ஸ்டாலின் அப்படி செய்ய மாட்டார்னு சொல்றாங்க. பார்ப்போம் என்ன நடக்குதுனு”

“பிரதமருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையில புது யுத்தம் தொடங்கியிருக்குனு சொல்றாங்களே…அப்படியா?”

“ஆமாம். பாஜகவோட புது தலைவரை தேர்ந்தெடுக்கதான் இந்த சண்டை. பாஜக தலைவர் நட்டாவோட பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியோட முடியுது. அதனால புது தலைவரை தேர்ந்தெடுக்கறதுல அந்த கட்சி வேகம் காட்டி வருது. ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரைக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அல்லது சிவராஜ் சிங் சவுஹானை பாஜக தலைவராக்க விரும்புது. ஆனா மோடிக்கும், அமித் ஷாவுக்கும் அது பிடிக்கல.”

“அவங்களுக்கு ஏன் பிடிக்கல?”

“புதிய தலைவர் தாங்கள் சொன்னபடி நடக்கணும்னு பிரதமரும், அமித் ஷாவும் விரும்பறாங்க. ராஜ்நாத் சிங்கோ, சவுஹானோ தலைவர் ஆயிட்டா ஆர்எஸ்எஸ் உதவியோட தங்களை ஓவர்டேக் பண்ணிடுமோன்னு பயப்படறாங்க. இது முக்கிய காரணமா இருந்தாலும், மத்திய அமைச்சரவையில இருந்து அவங்களை விட்டுக்கொடுக்க விரும்பலைன்னு அவங்க காரணம் சொல்றாங்க.”

“அவங்க யாரை தலைவராக்க விரும்பறாங்க?”

“கட்சியோட தேசிய செயலாளர்களா இருக்கற வினோத் தாவ்டே, சுனில் பன்சால் ஆகிய 2 பேர்ல யாராவது ஒருத்தரை அந்த பதவிக்கு கொண்டு வரலாம்னு அவங்க சொல்றாங்க. அவங்க தங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பாங்கன்னு பிரதமரும், அமித் ஷாவும் நம்பறாங்க. ஆனா இதுக்கு ஆர்எஸ்எஸ் இன்னும் தலையாட்டாம இருக்காம்.”

“தமிழக பாஜகவுக்குள்ளயும் இன்னும் புகைச்சல் அடங்கலைன்னு கேள்விப்பட்டேனே?”

“தமிழிசையை குறிவச்சு திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் பதிவுகளை போடறார். அண்ணாமலைதான் அவரைத் தூண்டிவிட்டு ஏதோ செய்யறார்னு தமிழிசைக்கு சந்தேகம். ஆனா அந்த சந்தேகம் இருக்கும்போதே அண்ணாமலையை விமர்சித்தும் திருச்சி சூர்யா பதிவு போட்டிருக்கிறார். இவரையெல்லாம் கட்சிக்குள்ள விட்டதுக்கு இதையெல்லாம் அனுபவித்துதான் ஆகணும்னு தமிழிசை சொல்லியிருக்காங்க. அண்ணாமலையும் இதுல அப்செட். அட்ஜஸ்ட் பண்ணி போங்கனு மேலிடம் வேற சொல்லியிருக்கு. அதனாலதான் ஆளுநரை சந்திக்க போனப்ப தமிழிசையை அண்ணாமலை கூட்டிட்டு போயிருக்கார்.”

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பத்தின செய்திகள் ஏதும் இல்லையா?”

“கள்ளக்குறிச்சி சம்பவத்தை வச்சு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படியாவது ஜெயிச்சுடணும்னு பாட்டாளி மக்கள் கட்சி முயற்சி செய்யுது. இதைக் கேள்விப்பட்ட முதல்வர் திமுக நிர்வாகிகளை கூப்டு, ‘இந்த இடைத் தேர்தலில் பாமகவுக்கு டெபாசிட்கூட கிடைக்கக் கூடாது அப்படி செய்தால்தான் நமது மூன்றாண்டுகால ஆட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் இருக்கும். இல்லையென்றால் இது வரும் சட்டமன்ற தேர்தலில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ன்னு எச்சரிக்கை விட்டிருக்கார்.”

“முதல்வர் பிரச்சாரத்துக்கு போகலையா?”

“அவர் நிச்சயம் பிரச்சாரத்துக்கு போவார். ஆனால் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு போகறதுக்கு முன்ன ஒரு முறையாவது அவர் கள்ளக்குறிச்சிக்கு போகணும்னு அரசியல் ஆலோசகர்கள் அவருக்கு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. அவரும் கள்ளக்குறிச்சிக்கு போய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடிவு எடுத்திருக்கார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை மட்டும் தனியா ஒரு இடத்தில் வரச் சொல்லி அவர்கள் கோரிக்கைகளைக் கேட்டு, உடனே அதற்கான உத்தரவுகளை போட்டுவிட்டு அதன்பிறகு விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு போகறதுதான் முதல்வரோட திட்டம்”

“கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பா திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயனும், உதய சூரியனும் விளக்கம் கொடுத்தாங்களே?”

“இதுக்கும் காரணம் முதல்வர்தான். ‘டாக்டர் ராமதாஸ் உங்கள் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை வைக்கிறார். நீங்க அதைக் கேட்டு சும்மா இருக்கீங்களே. அப்படியென்றால் அந்த செய்தி உண்மையா’ன்னு அவங்ககிட்ட முதல்வர் கேட்டிருக்கார். அதுக்கு அவங்க ரெண்டு பேரும் பதறிப்போய், ராமதாஸ் சொல்றது உண்மை இல்லைன்னு சொல்லி இருக்காங்க.’

“அப்படிதானே சொல்வாங்க”

“ஆமா, ஆனாலும் முதல்வர், ‘அது உண்மை இல்லைன்னா நிருபர்களை சந்திச்சு மறுப்பு தெரிவியுங்கள்’ன்னு உத்தரவு போட்டிருக்கார். அதுக்கு பிறகுதான் அவங்க செய்தியாளர்களை சந்திச்சு விளக்கம் சொல்லியிருக்காங்க.”

“அதிமுகவும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விடாம இருக்காங்களே?”

“இதை பயன்படுத்தி தமிழகத்தில் நாமதான் முக்கிய எதிர்க்கட்சிங்கிற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கணும். அதனால போராட்டத்தை தீவிரப்படுத்துங்கன்னு கட்சிக்காரங்ககிட்ட எடப்பாடி சொல்லி இருக்காராம். அதே நேரத்துல விக்கிரவாண்டி தேர்தலில் நாம் போட்டி போட்டு இருந்தா கள்ளச்சாராய சாவை வைத்து நாம் பிரச்சாரம் செய்து சுலபத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள் என்று எடப்பாடிகிட்ட நேரடியாவே சொல்லியிருக்கார் சி.வி.சண்முகம்.”

”அதுக்கு எடப்பாடி என்ன சொன்னாராம்”

“கரெக்ட்தான். ஆனா முடிவு எடுத்தப்பிறகுதானே சம்பவம் நடந்துருக்குனு அவரும் வருத்தப்பட்டாராம்”

“பாவம்தான்”

“இதுக்கு நடுவுல எடப்பாடிக்கு இன்னொரு பிரச்சினையும் வந்திருக்கு”

“என்ன பிரச்சினை?”

“விஜய் கட்சிக்கு போறதுக்கு சில எம்.எல்.ஏ.க்களும் முன்னாள் அமைச்சர்களும் முயல்வதாக அவருக்கு செய்தி வந்திருக்கு. அவங்களாம் விஜய் பக்கம் போனா நாம என்ன செய்யறதுனும் நெருங்கிய நட்புகள் கிட்ட பேசியிருக்கிறார்”

“விஜய் கட்சில இவங்களை சேர்த்துப்பாங்களா?”

“சேர்த்துப்பாங்களாம். ஆனா ரெண்டு கண்டிஷன் போட்டிருக்காங்க. கட்சில சேரும்போது சொத்துக் கணக்கை கொடுக்கணும். அப்புறம், தொகுதி மக்கள் நூறு பேர்கிட்டருந்து நன்னடத்தை சர்டிஃபிகேட் வாங்கிட்டு வரணும்னு சொல்லியிருக்காங்க”

“இது புதுசா இருக்கே”

“நல்லவேளை த்ரிஷா கிட்டருந்து நன்னடத்தை சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்கனு சொல்லல” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...