மே 3 சுஜாதாவின் பிறந்த நாள். இந்த நாளில் தமிழ் சமூக ஊடகங்களில் சுஜாதாவை விமர்சிக்கும் கட்டுரைகள் அதிகரிக்கும். இறந்து வருடங்கள் ஆகியும் அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே என்ற பொறாமையின் வெளிப்பாடுகள் இவை என்றுதான் கடந்துக் கொண்டிருந்தேன் இன்று ஒரு பதிவை காணும் வரை
சுஜாதாவை கயமைக்காரர் என்று குறிப்பிட்டிருக்கிறது என்கிறது அந்தப் பதிவு. தனது எழுத்துக்களில் பார்ப்பனியத்தை நாசூக்காய் பரப்பியிருக்கிறாராம். பெண்களை அடக்கி ஆணாதிக்க சிந்தனைகளை புகுத்தினாராம். இருக்கிறார் என்று கடவுளை உள்ளே நுழைக்கிறாராம். நாலாயிர திவ்வியபிரபந்தத்தை சந்தடி சாக்கில் திணிக்கிறாராம்…இப்படி போகிறது அந்தப் பதிவு.
எழுதத் தெரிந்தவரின் இந்தப் பதிவு மட்டுமல்ல….எழுத்து திறமை இல்லாத ஆசாமிகள் சுஜாதா குறித்து தி.க.வின் அருள்மொழி பேசிய வீடியோவை எடிட் செய்து வெளியிட்டு ஜென்ம சாபல்யம் பெறுகிறார்கள். சுஜாதாவினால் கிடைக்கும் சந்தோஷம். பெற்றுக் கொள்ளட்டும். இருந்தும்…..
சுஜாதாவுடன் 1993லிருந்து 2008 அவர் மறைவு வரை அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
அப்போலா மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்துக் கொண்டிருந்தபோது அவர் படுக்கையின் அருகில் நின்றிருக்கிறேன். அதற்கு சில வருடங்கள் முன் அவர் அதே மருத்துவமனையின் ஐசியுவில் இருக்கும்போது அவர் எழுதிக் கொண்டிருந்த தொடர்கதை நிற்கக் கூடாது என்பதற்காக அவர் சொல்ல சொல்ல அவர் அருகில் அமர்ந்து எழுதி இரண்டு அத்தியாயங்களை முடித்து ஆனந்த விகடனுக்கு கொடுத்திருக்கிறேன்.
இத்தனை அருகில் இருந்த நான் பிராமணன் அல்ல, இறைச்சி சாப்பிடும் கிறிஸ்தவன்.
1993ல் அவர் குமுதத்தில் அவர் ஆலோசகராக இணைந்தபோது ஆசிரியர் குழுவில் அபாரத் திறமையுடன் ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்சி என்று இரு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் பிராமணர்கள். மிகுந்த திறமைசாலிகள். அவர்களுடன் நட்புடன் இருந்தாலும் அவர் என்னுடன் தான் நெருக்கம் காட்டினார். பிராமணர்களை மட்டும் விரும்பியிருந்தால் என்னைவிட அதிகமாய் அவர்களிடன் நெருக்கம் காட்டியிருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை.
அவருடைய பழைய வீட்டுக்கும் பல முறை சென்றிருக்கிறேன். புதிய வீட்டுக்கும் பல முறை சென்றிருக்கிறேன். பல மணி நேரம் இருந்திருக்கிறேன். வீட்டில் எல்லா அறைகளுக்குமே சென்றிருக்கிறேன். எனக்கு மட்டும் அந்த சிறப்பு சலுகை அல்ல. இங்கு வேறு சிலரையும் குறிப்பிட விரும்புகிறேன். அம்பலம் இணைய இதழில் பணிபுரிந்த சந்திரன், ஜெயராதா, லீனா போன்ற நண்பர்களும் அவரது குடும்பத்துக்கு நெருக்கமாயிருந்தார்கள். அவர்கள் யாரும் பிராமணர்கள் கிடையாது. இவர்களும் அவர் வீட்டில் சுதந்திரமாய் சென்று வருபவர்கள்.
பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்கு மாறும்போது அவர் வீட்டிலிருந்த பல மதிப்பு மிக்க புத்தகங்களை நூலகங்களுக்கு கொடுப்பதற்கு முன் வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளச் சொல்லி அவர் பிரமாணர்களை அழைக்கவில்லை. எங்களைதான் அழைத்தார்.
அவர் இசபெல்லா மருத்துவமனையில் இருந்தபோது என் வீட்டிலிருந்து – இறைச்சி சாப்பிடும் என் வீட்டிலிருந்து – காலை உணவு எடுத்துச் சென்றிருக்கிறேன். அவர் விரும்பியிருந்தால் அவரது பிராமண உறவினர்களிடமிருந்தோ நண்பர்களிடமிருந்தோ உணவைப் பெற்றிருக்க முடியும். அவர் அப்படி செய்யவில்லை.
அவர் பணிபுரிந்த இடங்களில் சம்பள உயர்வு கேட்டு வாங்கிக் கொடுத்தது சாதராண எளிய சாமானிய பணிகளில் இருந்தவர்களுக்காக. அவர்கள் யாரும் பிராமாணர்கள் அல்ல.
இன்று கவிஞராக புகழடைந்திருக்கும் மனுஷ்யபுத்திரன் எதோ ஒரு கிராமத்தில் ஓரமாய் இருந்த போது சுஜாதாவால் 1990களில் அடையாளம் காணப்பட்டார். சுஜாதா அவரை வெளிவுலகுக்கு அடையாளப்படுத்தியபோது மனுஷ்யபுத்திரனின் பெயர் அமீது. பிராமணர் அல்ல.
மனைவியை கொடுமைப்படுத்தினவர் சுஜாதா என்ற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு காரணமாக காட்டுவது திருமதி சுஜாதாவின் ஒரு பேட்டியை.
2013ல் அந்தப் பேட்டி வந்த சில நாட்களில் திருமதி சுஜாதாவிடம் பேசினேன். வருத்தப்பட்டார். ‘அவரால்தான் எனக்கு இந்தப் பெயர், புகழ்,…இன்று நான் வாழ்வது அவரது உழைப்பில்..நான் அவரைக் குறை சொல்வேனாப்பா’ குரலில் வேதனை.
அப்படியென்றால் அவர் அப்படி பேட்டி கொடுக்கவில்லையா?
அவர் சொன்ன விஷயங்கள் தவறான பார்வையில் வெளி வந்திருக்கிறது. “அவருக்கு எங்கங்க நேரம் குடும்பத்தைப் பார்க்க” என்று சொல்வதை ’சுஜாதா குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள மாட்டார்’ என்று தலைப்பிட்டால் எப்படி. அப்படி.
“பசங்க எப்படி படிச்சாங்கனுலாம் அவருக்குத் தெரியாது. அவங்களாதான் வேலை தேடிக்கிட்டாங்க” என்று கூறியதை பிள்ளைகளை சுஜாதா கவனிக்கவில்லை என்று பொருள்படவும் எழுதலாம். தான் புகழ்பெற்றவனாய் பல பெரிய தலைகளை தெரிந்திருந்தும் தனது மகன்களின் வேலைக்காக அவர்களிடம் நிற்கவில்லை என்ற அர்த்தத்திலும் புரிந்துக் கொள்ளலாம். அவர் பிள்ளைகளுக்காக எந்த சிபாரிசுக்கும் போனதில்லை என்பது பிள்ளைகளை கவனிக்கவில்லை என்ற அர்த்தத்தில் வந்திருக்கிறது.
” குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார்.” என்றெல்லாம் திருமதி சுஜாதா குறிப்பிட்டதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. அம்பலம் நாட்களில் அவர் அனைத்து முக்கியப் பொறுப்புகளை கொடுத்தது இரண்டு இளம் பெண்களிடம்தான். பெண்களை முன்னிலைப்படுத்துவது அலுவலகத்தில் மட்டுமல்ல. வீட்டிலும்.
அவர் வீட்டுக்கு போன அனைத்து நாட்களிலும் திருமதி சுஜாதாவும் எங்கள் உரையாடல்களில் கலந்துக் கொள்வார்.
ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.
ஒரு முறை சுஜாதா வீட்டுக்கு சென்றிருந்தபோது இயக்குநர் மணிரத்னமும் சுஜாதாவைப் பார்க்க வந்துவிட்டார். பெரிய இயக்குநர் வந்துவிட்டார் என்பதற்காக ‘நீங்க கிளம்புங்க ரஞ்சன்’ என்று சுஜாதா என்னை வழியனுப்பவில்லை. நான் கிளம்ப எத்தனித்தபோதுகூட ‘ நீங்க இருங்க ரஞ்சன்’ என்று இருக்கச் சொன்னார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர உரையாடலில் அதிகமாய் பேசியது திருமதி சுஜாதாதான். மிகக் குறைவாக பேசியது மணிரத்னம். அவரது வீட்டுக்குச் சென்ற பல இயக்குநர்களுக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும். மிக முக்கியமான கதை தொடர்பான உரையாடல்களுக்கு மட்டும்தான் தனியறை. மற்றபடி வீட்டு ஹால் எல்லோருக்குமான திண்ணை. ஆணாதிக்க சிந்தனையுள்ள மனிதர் என்றால் இப்படி மனைவியை அனுமதித்திருப்பாரா?
’திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்ததும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன். பல நாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறியிருக்கேன்” என்று திருமதி சுஜாதா குறிப்பிட்டதாகவும் இருக்கிறது.
திருமணமானதும் உடனே டெல்லிக்கு சென்றுவிட அந்த வாழ்க்கை திருமதி சுஜாதாவுக்கு பழகுவதற்கு சிரமாமயிருந்திருக்கிறது. முக்கியமாய் சுஜாதா ஒரு முறை அலுவலக ரீதியாக அலாகாபாத் சென்று சில மாதங்கள் தங்க நேரிட்டிருக்கிறது. அந்த சூழலில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்டிருக்கிறார் திருமதி சுஜாதா. இதை பலமுறை பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். தகவல் தொடர்புகள் இல்லாத இன்லேண்ட் லெட்டர், போஸ்ட் கார்டு காலத்தில் தனிமை அவரை பாதித்ததாக கூறியிருக்கிறார். அவர் தாயிடம் கூறி அழுதிருக்கிறார். இயல்பாக இந்த விஷயத்தை சொல்ல, அது எழுத்து வடிவில் பார்க்கும்போது பூதாகரமாக தெரிகிறது.
திருமணமான புதிதில் வீட்டில் மின் விளக்கு செயலிழந்திருக்கிறது. வெளியில் சென்று புதிய பல்பு வாங்கிக் கொண்டு வந்த திருமதி சுஜாதா வாசல் படியில் தடுக்கி பல்பை உடைத்துவிடுகிறார். புது மணப்பெண்ணாக இருந்த திருமதி சுஜாதாவுக்கு அச்சம். கணவர் திட்டுவாரோ என்று ஆனா. சுஜாதா ஒன்றுமே சொல்லவில்லையாம். வேறு வாங்கிக் கொள்ளலாம் என்று அவரது வேலையைப் பார்க்கப் போய்விட்டாராம். இதை பல பேட்டிகளில் திருமதி சுஜாதாவே குறிப்பிட்டிருக்கிறார். மனைவியை மதிக்காத கணவன் எப்படி எதிர்வினையாற்றியிருப்பான் என்பது உ.கை.நெ.க.
இது போன்று பல விஷயங்களை திருமதி சுஜாதா வெளிப்படையாக பேசியது பத்திரிகையில் வந்த போது சுஜாதாவை வில்லனாக்கிவிட்டது.
அவர் எழுதும் படங்களில் கடவுள் இருக்கிறார் என்ற கான்சப்ட்டை திணிக்கிறார் என்று ஒரு விமர்சனம். தமிழகத்தில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் தான் 99 சதவீத மக்கள் இருக்கிறார்கள். அது கயமை என்றால் தமிழக மக்களும் கயமைக்காரர்கள்தாம்.
பிரபந்தத்தை பிரபலப்படுத்துகிறார். ஆழ்வார்களை ஆராதிக்கிறார் அதனால் அவரை தள்ளி வை என்று கூறுகிறார்கள். அவருக்குப் பிடித்ததை அவர் எழுதக் கூடாதா? அவர் நம்பும் விஷயங்களை அவர் குறிப்பிடக் கூடாதா?
பெண்களை ஆணாதிக்க மனப்பான்மையுடன் அணுகுகிறார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. அதுவும் சாதாரண ஆணாதிக்கம் அல்ல, நாசூக்கான பார்ப்பனிய ஆணாதிக்கம்.
பெண்களை கொச்சையாக எழுதும் பல கடவுள் மறுப்புக்காரார்களை தமிழகம் பார்த்திருக்கிறது. படித்திருக்கிறது. ரசித்திருக்கிறது. ஆனால் சுஜாதாதான் பெண்களை மட்டமாக எழுதுபவர். அநியாயம்.
கதைகளில் பார்ப்பனியத்தை ரகசியமாய் கடத்துகிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு. பல கதைகளில் பிராமணர்களை கிண்டல் கேலி செய்தததையும் தாண்டி இப்படி ஒரு குற்றச்சாட்டு. ஆச்சர்யம்.
பிராமணர்களை மட்டும் விரும்புபவர் என்றால் அவர் கமல்ஹாசன், மணிரத்னம் வகையாறாக்களுடன் மட்டுமே இணைந்திருக்கலாம். ஷங்கரிடம் இணைந்தது ஏன்? ஜேடி- ஜெரியுடன் இணைந்தது ஏன்? ஜீவாவுடன் இணைந்தது ஏன்? பாரதிராஜாவுடன் பணியாற்றியது ஏன்? பஞ்சு அருணாசலத்துக்கு கதை கொடுத்தது ஏன்?
ஜெண்டில்மேன் காலத்தில் ஷங்கர் இத்தனை புகழ் பெற்றிருக்கவில்லை. அந்த சமயத்திலேயே ஷங்கர் குமுதம் அலுவலகம் வந்து பேசிக் கொண்டிருந்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது. ஷங்கர் புகழ் பெற்றவுடன் சுஜாதா அவருடன் ஒட்டிக் கொண்டார் என்ற அடுத்த குண்டை வீசக் கூடாது என்பதற்காக இந்த உபரித் தகவல்.
சுஜாதா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் சாதிப் பார்த்து கல்லெறியக் கூடாது.