No menu items!

பரவும் ஆடியோ – பிடிஆர் அப்படி பேசினாரா? – மிஸ் ரகசியா

பரவும் ஆடியோ – பிடிஆர் அப்படி பேசினாரா? – மிஸ் ரகசியா

ரகசியா அலுவலகத்துக்குள் வந்த போது வீடியோ செக்‌ஷனில் உடலுக்கு குளிர்ச்சி தருவது தயிரா பியரா என்ற வீடியோ எடிட் ஆகிக் கொண்டிருக்கிறது.

“இந்த மாதிரி வேலையெல்லாம் கரெக்டா பண்ணிடுவீங்களே? இப்ப எனக்கு என்ன தரப் போறீங்க?” என்றாள்.

குளிர்ந்த நீர் மோரை நீட்டினோம்.

“இதுதான் பெஸ்ட் ‘ என்று வாங்கிக் கொண்டே தகவல்களைத் தர ஆரம்பித்தாள்.

“ என்ன திடீர்னு கவர்னர் ரவி ராமேஸ்வரம்லாம் சுத்திக்கிட்டு இருக்கிறார். ரொம்ப பக்தியா மாறிட்டார்போல!”

”ஆமாம். அவர் ரொம்ப பக்திதான். தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை புண்ணிய கோவிலையும் பார்த்துரணும்னு வச்சிருக்கார். ஆனா, ராமேஸ்வரம் போனது பக்திக்காக மட்டுமில்ல. அதில கொஞ்சம் அரசியலும் இருக்கு”

“ராமேஸ்வரத்துல என்ன அரசியல் இருக்கு?”

“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதில போட்டி போடலாம்கிற ஐடியா இருக்கு. ராமநாதபுரம் தொகுதிலதான் ராமேஸ்வரம் இருக்கு. அதனால அந்த வட்டாரத்துல அரசியல் நிலைமை எப்படியிருக்குனு நேரடியா பார்க்கப் போனாருனு சொல்றாங்க. ராமநாதபுரத்துல அரசு விருந்தினர் மாளிகைல கவர்னர் தங்கினார். அங்க தங்கி ஜாதி அமைப்பு பிரமுகர்களோட பேச்சுவார்த்தை நடத்தறது, கோரிக்கை மனு வாங்கறதுன்னு முழுக்க முழுக்க ஒரு அரசியல் தலைவர் மாதிரியே செயல்பட்டிருக்கார். அங்க சில இடங்கள்ல ஜாதி அமைப்புகள் அவருக்கு கட் அவுட் வச்ச கூத்தும் நடந்திருக்கு. இதைப்பார்த்த காவல்துறை, கட் அவுட்டால ஜாதிச் சண்டை ஏற்படலாம்னு அதை அகற்றி இருக்காங்க.”

“எந்தெந்த அமைப்புகள் வந்து பேசுனாங்க?”

”தேவேந்திர குல வேளாளர், யாதவர் அமைப்பு, தேவர் அமைப்புன்னு கிட்டத்தட்ட எல்லா ஜாதி அமைப்பு தலைவர்களுமே அவரை வந்துப் பார்த்திருக்காங்க. சீக்கிரமா பிரதமர் ராமேஸ்வரத்துக்கு வருவார். உங்க கோரிக்கைகளை நிறைவேத்துவார்னு அவங்களுக்கு நம்பிக்கையும் கொடுத்திருக்கார் கவர்னர்”

“கட்சிக்காரங்க யாரும் சந்திக்கலையா?”

“அதுவும் நடந்தது. ராமேஸ்வரத்தில் ஆளுநர் ரவி விசிட் செஞ்ச மூலிகைப் பண்ணை ராமநாதபுரம் பாரதிய ஜனதா தலைவருக்கு சொந்தமானது. அங்க பாஜக பிரமுகர்கள்கிட்ட தொகுதி நிலவரம் பத்தி கேட்டதோட முஸ்லிம்கள் ஆதரவு யாருக்குன்னும் விசாரிச்சிருக்கார். ஏன்னா ராமநாதபுரத்துல இஸ்லாமியர் வாக்குகள் அதிகம். சீக்கிரம் தான் பார்த்த, கேட்ட விஷயங்களை பிரதமருக்கு அனுப்புவார்னு ராஜ்பவன் வட்டாரங்கள் சொல்லுது”

“ராமேஸ்வரத்துல மோடி நிக்கறார்னா நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பா இருக்குமே?”

“அதைதான் பாஜக விரும்புது. பிரதமரே போட்டியிட்டா இங்க பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும்னு பாஜகவினர் நினைக்கிறாங்க. பிரதமர் நின்னா அதிமுக கூட கூட்டணிக்கு வர மாட்டேன்னு சொல்ல முடியாது”

“நல்ல பிளான் தான். இதெல்லாம் திமுகவுக்கு தெரியாம இருக்குமா?”

”திமுக இந்த செய்திகளை நம்பல. முஸ்லீம் ஏரியாவுல போட்டி போட்டு பிரதமர் ரிஸ்க் எடுக்க மாட்டார்ங்கிறது அவங்க கணிப்பு. ஆனாலும் எச்சரிக்கையா இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. அதனாலதான் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க”

“முக்கியமான விஷயம் கேக்க மறந்துட்டேன் பார்..பிடிஆர் ஆடியோ ஒண்ணு சுத்திக்கிட்டு இருக்கே. அண்ணாமலைகூட எடுத்துப் போட்டிருக்காரு. உதயநிதி, சபரீசன் பத்தி பிடிஆர் பேசினாரா?”

“இந்த ஆடியோ பத்தி திமுகவோ, நிதியமைச்சர் தியாகராஜனோ இதுவரைக்கும் எந்த கருத்தையும் சொல்லல. அதேசமயம் இந்த ஆடியோவோட நம்பகத்தன்மை பத்தி சைபர் க்ரைம் போலீஸார் விசாரிச்சுட்டு வர்றதா சொல்றாங்க. அதுல உண்மை இருந்தா நிதியமைச்சர் நிலைமை என்னவாகும்னு தெரியல. இந்த ஆடியோவால நிதியமைச்சருக்கு திண்டாட்டம்னா அண்ணாமலைக்கு கொண்டாட்டமா இருக்கு. இதுதான் சாக்குன்னு ‘நான் ஏற்கனவே சொன்னதைத்தான் நிதி அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலமா கொடுத்திருக்கார்’ங்கிற லெவல்ல ட்விட்டர்ல அதை ட்வீட் செஞ்சிருக்கார் அண்ணாமலை. ”

“பாவம் பிடிஆர். சரி, திமுககாரங்க அண்ணாமலையை விடறதா இல்லை போல இருக்கே?”

“திமுக வழக்கறிஞர் பிரிவு ஏற்கெனவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கு. இது போதாதுன்னு உதயநிதி ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டிருக்காங்க. இன்னும் சில அமைச்சர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பறதைப் பத்தி யோசிச்சிட்டு இருக்காங்க. முதல்வரோட மருமகன்கிட்டயும் நோட்டீஸ் அனுப்ப சொல்லியிருக்காங்க. ஆனா அவர், நான் எந்த சர்ச்சையிலயும் சிக்க விரும்பலைன்னு சொல்லிட்டாராம்.”

“வழக்குன்னதும் எனக்கு அதிமுக வழக்குகள்தான் ஞாபகத்துக்கு வருது. எடப்பாடிக்கு ஆதரவா தேர்தல் கமிஷனும் உத்தரவு போட்டுடுச்சே? பொதுக்குழு தீர்மானங்களுக்கு பச்சைக் கொடி காட்டிடுச்சே?”

“ஆனாலும் ஓபிஎஸ் விடறதா இல்லை. இந்த உத்தரவு நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டதுனு பொடி வச்சுத்தான் ஆணையம் ஒப்புதல் தந்திருக்குன்னு இன்னும் தன்னோட தரப்புல முட்டுக் கொடுத்துட்டு நிக்கறார் ஓபிஎஸ். ஆனா எடப்பாடி எதைப் பத்தியும் கவலைப்படறதா இல்லை. நாடாளுமன்ற தேர்தலை குறிவச்சு வேகமா முன்னேறிட்டு இருக்கார். இந்த அக்கப்போர்ல வாலண்டியரா வந்து மாட்டிக்கிட்டோமேன்னு அதிமுக மூத்த தலைவர் நொந்துபோய் இருக்காராம்..”

“யார் அந்த மூத்த தலைவர்?”

“பன்ருட்டி ராமச்சந்திரன்தான். ஓபிஎஸ் அணியில சேர்ந்தா தனக்கு திரும்பவும் ஒரு எதிர்காலம் இருக்குன்னு அவர் நம்பி இருந்தார். ஆனா உள்ள வந்த பிறகுதான் ஓபிஎஸ் படு வீக்கா இருக்கறது அவருக்கு தெரிஞ்சிருக்கு. தினகரன், சசிகலா, பாரதிய ஜனதான்னு எல்லாரும் அவரைக் கை கழுவி விட்டது தெரிஞ்சதும் தேவையில்லாம நாம இங்க வந்து மாட்டிக்கிட்டோமோன்னு தன் கூட இருந்தவங்ககிட்ட சொல்லியிருக்கிறார். பேசாம அரசியல்ல இருந்து ஓய்வு பெற்றதா அறிவிக்கலாமான்னு யோசிட்டு இருக்கார்.”

“அந்த சுவரு இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?”

“கடைசியா ஒரு நியூஸ் சொல்றேன். கர்நாடக பொதுத் தேர்தலுக்காக காங்கிரஸ் பிரச்சார பாடல்கள் தமிழ்நாட்லதான் தயாராகுது. இங்க இருக்கிற இளம் இசையமைப்பாளர்தான் அதுக்கு இசையமைச்சு இருக்கார்.”

”யார் அவர்?”

“இரண்டெழுத்துப் பேர் இரண்டெழுத்து இனிஷியல்…நீங்களே கண்டுபிடிச்சுக்கங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...