No menu items!

Burqa திரைப்பட சர்ச்சை: இஸ்லாமின் ‘இத்தா’ பெண்ணடிமைத்தனமா?

Burqa திரைப்பட சர்ச்சை: இஸ்லாமின் ‘இத்தா’ பெண்ணடிமைத்தனமா?

கலையரசன் நடிப்பில் மலையாள இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘புர்கா’ திரைப்படம் சர்ச்சையாகி இருக்கிறது. “இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு எதிரானது என்பதைபோல் சித்தரித்து இருக்கும் புர்கா திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் இந்த படத்துக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர். இஸ்லாமியர்களின் ‘இத்தா’ (Iddah or Iddat.) என்ற நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு ‘புர்கா’ கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

‘இத்தா’ என்றால் என்ன? இது குறித்து இஸ்லாம் மார்க்கம் என்ன சொல்கிறது?

கவிஞரும் குறும்பட இயக்குநருமான அர்சத் சனனிடம் கேட்டோம். “ஒரு பெண் நிறைமாத கர்ப்பமாக இருக்கும்போது அவளது கணவன் மரணித்து விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அன்றிலிருந்து அவள் குழந்தை பெறும் வரும்வரைக்கான இடைவெளியில் இருக்கும் காலம்தான் ‘இத்தா’. ‘இத்தா’ என்பதற்கு ‘காத்திருப்பு காலம்’ என்று அர்த்தம். அந்த காத்திருப்பு காலத்தில் மறுமணம் செய்யக்கூடாது. அதாவது, குழந்தை பெறும்வரை மறுமணம் செய்ய காத்திருக்க வேண்டும். அதன்பின் திருமணம் செய்துகொள்ளலாம்.

மறுமணத்தைத் தள்ளிப்போடும் இந்த காலகட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவுடையதல்ல. ஒவ்வொருவருக்கும் மாறுபடும். கணவன் இறந்த மறுநாளே மனைவி குழந்தையை பெற்றுவிட்டால் அந்த ஒரு நாள்தான் இவளுக்குரிய ‘இத்தா’ – திருமணத்தைத் தள்ளிப் போடும் – காலமாகும். கணவன் இறந்து இரண்டு நாட்களில் குழந்தை பிறந்துவிட்டால் அந்த இரண்டு நாட்கள் மட்டும்தான் ‘காத்திருப்பு காலம்.’ நான்கு மாதங்களானால் அந்த நான்கு மாதங்களும் ‘காத்திருப்பு காலம்.’

இதுபோல் விவாகரத்தின் மூலம் கணவனை பிரிந்தாலும் அதிலிருந்து தெளிவடைந்து தன் அடுத்த கட்ட வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன் நின்று, நிதானித்து, செயல்படுவதற்கும் தன் துயரங்களை மறந்து மன அமைதியை அடைவதற்கும் இந்த ‘இத்தா’ என்னும் அவகாசம் இன்றியமையாதது.

ஒரு பெண்ணுக்கு திருமணமாகி உடல் ரீதியான உறவு இல்லாதிருப்பின் அந்த சமயத்தில் கணவன் இறந்தால் அவளுக்கு ‘இத்தா’ இருப்பது அவசியமற்றது.

கணவன் மரணிக்கும் போது மனைவி கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பது தெரியாவிட்டால் நான்கு மாதமும் பத்து நாட்களும் திருமணத்தைத் தள்ளிப் போடவேண்டும். நான்கு மாதம் பத்து நாட்களுக்குள் வயிற்றில் கரு வளர்வது தெரிய வந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ‘இத்தா’ நீடிக்கும். நான்கு மாதம் பத்து நாட்களில் குழந்தை இல்லை என்பது உறுதியானால் மறுநாளே அவள் மறுமணம் செய்துகொள்ளலாம்.

கணவன் இறந்தபின் மனைவி கருவுற்றிருந்தால் அவள் பிரசவிக்கும் வரை கணவனின் சொத்துக்கள் பங்கு வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதைக் கருத்தில் கொண்டும் கருவறையில் வளரும் குழந்தையின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும் கணக்கிட்டு முதல் கணவனின் சொத்திலிருந்து பங்கு பெற்றுத்தரும் பொறுப்பு இவளுக்கு உள்ளது. எனவேதான் இஸ்லாம் இந்தச் சட்டத்தை வழங்கியுள்ளது.

இறந்த அல்லது விவாகரத்து பெற்ற முதல் கணவன் மூலம் தான் கருவுற்றிருந்தால் அது இன்னாருக்கு பிறந்த குழந்தை என்பதை தானும் இந்த உலகமும் அறிந்து கொள்வதற்கும் இந்த ‘இத்தா’ இன்றியமையாதது.

முதல் கணவனின் குழந்தையைச் சுமந்துகொண்டு இன்னொருவனுடன் வாழ்க்கை நடத்தினால் ஒருவனின் குழந்தைக்கு வேறொருவனைத் தந்தையாக்கும் மோசடியில் அது சேர்ந்து விடும் என்பதாலும் இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்துவிட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்’ என்கிறது திருக்குர்ஆன் 2:234

‘(என் கணவர்) அபூ ஸலமா மரணித்த போது நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமா மரணித்து விட்டார் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹும்மக்ஃபிர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்பா ஹஸனதன் (இறைவா! என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்குப் பகரமாக அவரை விடச் சிறந்ததைத் தருவாயாக!) எனக் கூறு என்றார்கள். நான் அவ்வாறு கூறினேன். அவரை விடச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குப் பகரமாகத் தந்தான் என்று உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள். (நூல்: முஸ்லிம் 1527)

கணவரை இழந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றுள்ளனர். இது தவறு என்றால் கணவனை இழந்த நீ எப்படி வெளியே வரலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள். வெளியே வந்த உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். ‘இத்தா’ காலகட்டத்தில் எப்படி ஒரு ஆணிடம் பேசலாம்? என்று அவர்கள் கேட்கவில்லை.

‘இத்தா’ இல்லாத காலங்களில் அன்னிய ஆடவனுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அதைத்தான் ‘இத்தா’வின் போதும் கடைப்பிடிக்க வேண்டும். அதேநேரம், தேவைப்பட்டால் மற்ற நேரங்களில் வெளியே செல்வது போல் சென்று வருவது தவறல்ல என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

‘இத்தா’ பெண் அடிமைத்தனம் என்பது முற்றிலும் தவறு. ஏனெனில் நிர்ப்பந்தங்கள் ஏற்படும் போது பெண் வெளியே செல்வதற்கும் தங்களது வேலைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்வதற்கும் இன்னும் தன்னுடைய தொழில் மூலமான சம்பாத்தியத்தில் தான் வாழ முடியுமாக இருப்பின் சில நிபந்தனைகளோடு தொழில் செய்வதற்கும் இஸ்லாம் அனுமதி அளித்திருக்கிறது. மேலும், கணவன் இறந்தால் கட்டையில் விழுந்து சாக சொல்லவில்லை இஸ்லாம். கணவனை இழந்த பெண்ணை அவனையே நினைத்து காலம் முழுக்க வெள்ளைப் புடவை கட்டி விதவையாக வாழச் சொல்லவும் இல்லை.

எதார்த்தத்தில் இது எப்படி இருக்கிறது என்றால், கணவனை இழந்து ‘இத்தா’ கடமையை நிறைவேற்றும் பெண்ணுக்கு, அந்த ஊர் பள்ளிவாசல் மற்றும் செல்வந்தர்கள், ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து தேவையான உணவு, உடை, மற்றும் இன்ன பல தேவைகளையும் கேட்டுகேட்டு நிவர்த்தி செய்து கொடுப்பார்கள்.  அந்தப் பெண்ணுடைய ‘இத்தா’ கடமை முடியும் வரை அவள் அந்தப் பகுதியில் உள்ள அத்தனை குடும்பங்களின் குழந்தையாகவே கவனிக்கப்படுவாள்” என்கிறார் அர்சத் சனன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...