இசை ரசிகர்களின் அள்ள அள்ள குறையாத இசை சுரங்கமாக இருப்பது ஸ்பாட்டிஃபை.
இளைய தலைமுறையினரின் மொபைல்களில் கட்டாயம் ஸ்பாட்டிஃபை ஆப் இருக்கும்.
எங்கும் எப்போதும் தங்கு தடையற்ற இசை என்பதுதான் ஸ்பாட்டிஃபையின் அடிப்படை.
இசைத் தட்டுக்கள் இடத்தை காசெட்டுக்கள் தட்டிப் பறித்தது போல் காசெட்டுகளின் இடத்தை சிடிக்கள் பிடித்ததுபோல் சிடிக்கள் இடத்தை பென் ட்ரைவ்கள் எடுத்துக் கொண்டது போல்..இன்று ட்ரைவ்களின் இடத்தை ஸ்பாட்டிஃபை பிடித்திருக்கிறது.
உலகின் அத்தனை இசைக் கலைஞர்களின் இசையையும் பாடல்களையும் ஸ்பாட்டிஃபையில் கேட்க முடியும்.
சர்வதேச அளவில் இசை செயலிகளில் ஸ்பாட்டிஃபை முன்னணியில் இருக்கிறது.
இந்தியாவிலும் ஸ்பாட்டிஃபை ஆப் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்த ஸ்பாட்டிஃபையில் ஒரு வசதி. ஒரு பாடலையோ ஒரு இசைத் தொகுப்பையோ எத்தனை பேர் கேட்டார்கள், எத்தனை முறை கேட்டார்கள், எவ்வளவு நேரம் கேட்டார்கள், உலகின் எந்தப் பகுதியிலிருந்து கேட்டார்கள் என்பதை துல்லியமாக அறிந்துக் கொள்ள முடியும்.
இந்த வசதியினால் எந்த இசையமைப்பாளரின் இசையை இப்போது மக்கள் அதிகம் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.
இப்போது நாம் 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் கேட்ட பாடல் எது? இசையமைப்பாளர் யார்? பாடகர் யார் என்ற விவரங்களை ஸ்பாட்டிஃபை வெளியிட்டிருக்கிறது.
அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
அகில இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அரிஜித் சிங் என்ற பாடகர். இவர் பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளரும் கூட. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவர் நம்பர் ஒன் நிலையில் இருக்கிறார். இந்தியிலும் பெங்காலியிலும் அதிகம் பாடியிருக்கும் அரிஜித் தமிழிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். ரஹ்மான் இசையில் சூர்யா நடித்த 24 படத்தில் அரிஜித் சிங் பாடிய ‘நான் உன் அருகினிலே’ பாடல் பெரிய ஹிட். இளசுகளுக்கு மட்டுமில்லாமல் அனைத்து வயதினருக்கும் இவரது பாடல்கள் பிடித்திருப்பது இவருடைய சிறப்பு.
ஸ்பாட்டிஃபை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ப்ரிதம். பாடகர், இசையமைப்பாளர். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இவரது இசை என்றால் இளைஞர்கள் சொக்கிப் போய் கேட்கிறார்கள். இளைய தலைமுறையின் இசை நாயகனாக இவர் இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் இருப்பவர் நம்ம ஊர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரைப் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். இந்த ஆண்டில் இவரது பாடல்கள் 160 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது. 183 நாடுகளிலிருந்து 5.7 கோடி பேர் இவரது பாடல்களைக் கேட்டிருக்கிறார்கள். 11 கோடி மணி நேரம் இவரது பாடல்கள் கேட்கப்பட்டிருக்கிறது.
நான்காவது இடத்தில் இருப்பவரும் நம்மூர்காரர்தான். அனிருத். இன்றைய இளசுகளின் ஹாட் சென்சேஷன். இவரது பாடல்கள் 110 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது. 182 நாடுகளிலிருந்து 3 கோடி பேர் இவரது இசையைக் கேட்டிருக்கிறார்கள். 8 கோடி மணி நேரம் இவரது பாடல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.
ஐந்தாவது இடத்தில் நமக்கெல்லாம் தெரிந்த ஷ்ரேயா கோஷல். மயக்கும் குரலில் நம்மையெல்லாம் வசீகரிப்பவர். இவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்தான். தமிழிலும் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
ஸ்பாட்டிஃபை டாப் 5 பட்டியலில் மூவர் மேற்கு வங்கத்தை சார்ந்தவர்களாகவும் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.