விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் இந்த ஆண்டில் அத்துறையில் சாதனைகள் படைத்த சில இந்தியர்கள்…
சூர்யகுமார் யாதவ்:
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் இந்தியாவின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்தான். பல ஆண்டு காலம் காத்திருந்த பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார், தான் காத்திருந்த காலங்களுக்கும் சேர்த்து கிரிக்கெட் மைதானத்தில் மின்னினார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் 1,000 ரன்களைக் கடந்த ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்தான். 31 டி20 போட்டிகளில் ஆடிய அவர் மொத்தம் 1,164 ரன்களைக் குவித்தார். அவர் அடித்த ரன்களைவிட 187.43 என்ற அவரது ஸ்டிரைக் ரேட் எதிரணியில் பலரது தூக்கத்தைக் கெடுத்தது. சூர்யகுமாரின் பேட்டில் பட்டு மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பந்து பறந்து செல்ல, டிவில்லியர்ஸுக்கு சொந்தமாக இருந்த மிஸ்டர் 360 டிகிரி என்ற பட்டமும் அவருடன் ஒட்டிக்கொண்டது. இப்போது இந்தியாவின் டி20 அணிக்கு துணைக் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அர்ஷ்தீப் சிங்:
பேட்டிங்கில் சூர்யகுமாருக்கு சுக்ர திசையென்றால் பந்துவீச்சில் இந்த ஆண்டு மாயம் செய்தவர் அர்ஷ்தீப் சிங். இந்தியாவின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான பும்ரா, காயத்தால் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட, தனது பந்துவீச்சு திறமையால் பும்ராவின் இழப்பு இந்தியாவை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார் அர்ஷ்தீப் சிங். இந்த ஆண்டில் 21 டி20 போட்டிகளில் ஆடிய அர்ஷ்தீப் சிங் 33 விக்கெட்களைக் கொய்தார். உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக இருந்த அவரிடம் இருந்து வரும் ஆண்டுகளிலும் இந்தியா நிறைய எதிர்பார்க்கிறது.
நீரஜ் சோப்ரா:
கிரிக்கெட்டை தாண்டி இந்திய விளையாட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஹீரோ நீரஜ் சோப்ரா. கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் காயத்தால் அவதிப்பட்டார். அதனால் காமன்வெல்த் உள்ளிட்ட சில போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் ஆண்டின் பிற்பாதியில் மீண்டுவந்து சாதனைகளை தொடர்ந்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் அஞ்சு ஜார்ஜுக்கு (வெண்கலம்) பிறகு இப்போட்டியில் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த வெற்றியின் சுவை ரசிகர்களின் மனதில் இருந்து மறைவதற்கு முன்பே, டயமண்ட் லீக் தடகளப் போட்டியிலும் வாகை சூடினார். இப்போட்டியில் அவர் 89.08 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்தார்.
நிகாத் செரீன்:
கடந்த ஆண்டுவரை இந்தியாவில் பெண்கள் குத்துச்சண்டை என்றாலே மேரி கோமின் பெயர் மட்டும்தான் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அந்த நிலையை இந்த ஆண்டில் மாற்றிக் காட்டினார் நிகாத் செரீன். இஸ்தான்புல் நகரில் கடந்த மே மாதம் நடந்த பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். இதன்மூலம் இப்பட்டத்தை வென்ற 5-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
பிரக்ஞானந்தா:
செஸ் போட்டியைப் பொறுத்தவரை இந்த ஆண்டை பிரக்ஞானந்தா ஆண்டு என்றே சொல்லலாம். செஸ் விளையாட்டில் யாராலும் வெல்ல முடியாத சாம்பியன் என்று கருதப்பட்ட கார்ல்சனை இந்த ஆண்டில் சதுரங்க களத்தில் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. அத்துடன் பல சர்வதேச போட்டிகளிலும் வென்ற பிரக்ஞானந்தாவை இந்த ஆண்டு அர்ஜுனா விருது தேடிவந்து வாழ்த்தியது.