No menu items!

அலற விட்ட Apple IPhone – அச்சப்பட வேண்டுமா? அரசியல் திசை திருப்பலா?

அலற விட்ட Apple IPhone – அச்சப்பட வேண்டுமா? அரசியல் திசை திருப்பலா?

ஆப்பிள் என்றால் எப்போதும் பரபரப்புதான். அதாவது ஆதாம் ஏவாள் காலம், ஐசக் நியூட்டன் காலத்தில் தொடங்கி நம் காலம் வரை.

இந்தமுறை ஆப்பிள் என்ற நிறுவனம் அப்படியொரு பரபரப்பைக் கிளப்பி புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனம் அனுப்பிய ஓர் எச்சரிக்கைக் குறுஞ்செய்திதான் அத்தனை பரபரப்புக்கும் ஆரம்பப் புள்ளி.

அக்டோபர் 30ஆம்தேதி இரவு 11.45 மணிக்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருக்கு அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

‘அரசு ஆதரவுடன் உங்கள் கைப்பேசி மீது தாக்குதல் நடக்கலாம். அதில் உள்ள தகவல்கள் திருடப்படலாம்’. இதுதான் அந்த குறுஞ்செய்தி வாசகம்.

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சசி தரூர், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகுல் சத்தா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்பட பலர் அகால நேரத்தில் வந்த இந்த குறுஞ்செய்தியைப் பார்த்து அரண்டு போனார்கள்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று பேர்களுக்கும்கூட இந்த எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்திருந்தது.

அந்த குறுஞ்செய்தியை பார்த்தவர்கள் அதை அப்படியே ஸ்கீரின்ஷாட் எடுத்து, எக்ஸ் போன்ற சமூக ஊடங்களில் பதிவிட்டு கொதித்து கொந்தளிக்கத் தொடங்கினார்கள்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா சும்மாவே சூடாகி விடுவார். அவர் இந்த குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு சும்மா இருப்பாரா என்ன? அவர் ஒருபடி மேலே போய், ‘அதானி, பிரதமர் அலுவலக சட்டாம் பிள்ளைகளே. உங்கள் பயம் உங்களை நினைத்து என்னை பரிதாபப்பட வைக்கிறது’ என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதிக் கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசிகள் மத்திய அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசுக்குத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள்.

‘அதானியைத் தொட்டவுடன் இது நடக்கிறது’ என்று ராகுல் காந்தி அவரது கண்டனத்தில் ஒரு புள்ளி வைத்திருந்தார்.

இந்த குறுஞ்செய்தி குழப்பம் கும்மியடிக்கத் தொடங்கியதும் ஆப்பிள் நிறுவனம் விழித்துக் கொண்டது. அது உடனே ஓர் அறிக்கை வெளியிட்டது.

‘ஆப்பிளின் சில அச்சுறுத்தல் அறிவிப்புகள் நுண்ணறிவு சமிக்ஞைகளின் அடிப்படையில் முழுமையற்றதாக, தவறாகக் கூட இருக்கலாம்(!) எங்கள் குறுஞ்செய்தி எந்த ஒரு அரசையும் குறிப்பிடவில்லை. அதாவது இந்திய அரசு நிறுவனம் முயற்சி என்று அதில் குறிப்பிட்டு கூறவில்லை.

அரசு ஆதரவுடன் செல்போன்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிக நிதி உதவியுடன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இருக்கும். அந்த தொழில்நுட்பத்தை அவர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆகவே தாக்குதல்களைக் கண்டறிவது கடினம். சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் கூட போகலாம்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை செய்தியைத் தெரிவிக்க எது தூண்டுதலாக இருந்தது என்பதை எங்களால் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது அரசு சார்பில் செல்போன்கள் மீது தாக்குதல் நடத்தும் நிறுவனங்களுக்கு வசதியாகப் போய்விடும். வருங்காலத்தில் நடத்தப்படும் தாக்குதல்களை கண்டு பிடிக்க முடியாமல் போவதற்கும் இது உதவக்கூடும்’

இதுதான் ஆப்பிள் நிறுவனம் அளித்த அருமையான விளக்கம்.

இதனிடையே, இந்த எச்சரிக்கைக் குறுஞ்செய்தி இந்தியா கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்தும் 150 நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கும் போயிருந்தது. அவர்களும் அவர்கள் பங்குக்கு குழம்பிப் போனார்கள்.

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா அதோடு விடவில்லை. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அவர் சுடச்சுட ஒரு கடிதம் எழுதினார்.

‘ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து எங்களது மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு எச்சரிக்கை வந்துள்ளது. எங்கள் கைப்பேசிகளில் உள்ள தரவுகள், தகவல் தொடர்புகள், கேமரா, படங்கள் இவற்றைப் பெற, அரசு ஆதரவுடன் தாக்குதல் செய்ய முயற்சி நடக்கிறது.

இப்படித்தான் 2019-2021ல் எதிர்க்கட்சிகளின் மொபைல்களை ஹேக் செய்ய பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இதனால், இப்போது வந்திருக்கும் இந்த குறுஞ்செய்தி இருமடங்கு அதிர்ச்சியைத் தருகிறது.

பெகாசஸ் பற்றி நாடாளுமன்ற அவையில் கேள்வி எழுப்பினோம். ஆனால் என்ன புண்ணியம்? விவாதத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது தொடர்பான உறுதியான அறிக்கையை யாரும் தாக்கல் செய்யவில்லை.

சட்டத்துக்குப் புறம்பாக எங்களைக் கண்காணிக்கிறார்கள் போலிருக்கிறது. இது அடிப்படை உரிமைகள் மீதான மோசமான தாக்குதல். நாங்கள் எங்கள் கடமையைத் தொடர்ந்து செய்ய தேவையான பாதுகாப்பை உடனே எங்களுக்கு வழங்க வேண்டும். ராஜ தருமத்தைக் கடைப்பிடியுங்கள்.

இது அடிப்படை உரிமை மீறல். இது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து மக்களவைத்தலைவர் விளக்கம் பெற்றுத்தர வேண்டும். கொஞ்சம் சீரியசாக இந்த பிரச்சினையைக் கையாளுங்களேன். பிளீஸ்’

இதுதான் மஹுவா மொய்த்ரா அனுப்பி வைத்த கடிதத்தின் சாராம்சம்.

மத்திய அரசு உடனே சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியது. இந்தியாவில் கணினி பாதுகாப்பில் குறைபாடுகள் ஏற்படும்போது அதை கண்டறிந்து சரிசெய்யவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் ஒரு நிறுவனம் உள்ளது.

அந்த மத்திய அரசு நிறுவனத்தின் பெயர் செர்ட்-இன். இந்திய கணினி அவசரநிலை உதவிக்குழு என்பதன் சுருக்கம்தான் செர்ட்-இன்.

,இந்த செர்ட்-இன் நிறுவனம் உடனே விசாரணையில் இறங்கியது. அது செய்த முதல் வேலை ஆப்பிள் நிறுவனத்துக்கு ‘பிடி நோட்டீஸ்’ என்று, நோட்டீஸ் அனுப்பியதுதான்.

‘செர்ட்-இன், விசாரணையைத் தொடக்கி விட்டது. ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டோம். அந்த நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரும் என்று நம்புகிறோம்’ என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் கூற,

‘இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் குறுஞ்செய்தி, இ-மெயிலில் தெளிவான தகவல் எதுவும் இல்லை. சும்மா குத்துமதிப்பாக எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சிலர் செய்யும் அழிவு அரசியல்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொங்கினார்.

‘ஆப்பிள் நிறுவனம் ஏன் 150 நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பியது? அதுபற்றி ஆப்பிள் நிறுவனம் விளக்கம் தர வேண்டும்’ என்று மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேட்டிருந்தார்.

ஆப்பிள் நிறுவனம் இப்படி எச்சரிக்கைக் குறுஞ்செய்தி அனுப்புவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு, ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் இப்படியொரு எச்சரிக்கை செய்தியை அனுப்பி பதற வைத்தன.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள், மடிக்கணினி உற்பத்தியில் கொடி கட்டிப்பறக்கும் பெரிய நிறுவனம். அதன் உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் எல்லோருமே பெரிய பெரிய வி.ஐ.பி.கள்தான். எனவே, அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகளில் பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் ஆப்பிள் தயாரிப்பு கருவிகளின் இயங்குதளத்தில், பல வெர்சன்களில் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள், சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

சரி. இந்தமுறை ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தி ஏன் இத்தனை பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்? காரணம், ஏற்கெனவே பெகாசஸ் மென்பொருள் ஒட்டுகேட்பு விவகாரம் ஏற்படுத்திய பீதிதான் இந்த பரபரப்புக்குக் காரணம்.

இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களில் ஒன்றான என்.எஸ்.ஓ.நிறுவனம் தயாரித்த உளவுபார்க்க உதவும் மென்பொருள்தான் பெகாசஸ்.

இஸ்ரேலுடன் 2 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம் செய்துள்ள இந்தியா, அதன் ஒரு கட்டமாக 2017ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் தெரிவித்திருந்தது.

உலக அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் தகவல்களைத் திருடிய ‘பெருமைக்குரிய’ மென்பொருள் பெகாசஸ். 2021 ஜூலையில் பெகாசஸ் என்ற வலை இந்தியாவில் பெரிதாக விரிந்தது. இந்தியாவில் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்பட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் கைபேசி தகவல்கள் பெகாசஸ் உதவியுடன் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெகாசஸ் என்ற வலை பொதுத்துறை அலுவலகங்கள், மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் வரை விரிவடைந்தது.

இது தொடர்பாக விசாரிக்க 3 பேர் குழு அமைக்கப்பட்டதும், ‘விசாரணைக்கு மத்திய அரசு
ஒத்துழைக்கவில்லை’ என அந்தகுழு விசாரணை அறிக்கையில் தெரிவித்ததும் தனிக்கதை.

ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய ஒரு சின்ன குறுஞ்செய்தி இப்போது இந்த அளவுக்கு பரபரப்பைக் கிளப்ப இதுதான் காரணம்.

அரசு உதவியுடன் இயங்கும் ஓர் ஒட்டுகேட்பு உளவு அமைப்புக்கும், ஒரு சாதா ரக சைபர் கிரிமினலுக்கும், இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அரசு உதவியுடன் இயங்கும் உளவு அமைப்பிடம் பெரிய அளவில் வளங்கள் இருக்கும். சைபர் கிரிமினல்களைப் போல இந்த உளவு அமைப்புகளில் செயல்படுபவர்களைக் கண்டுபிடித்து விட முடியாது.

பெகாசஸ் மென்பொருளின் பிடியில் ஒருவரது கைப்பேசி சிக்கினால் அந்த கைப்பேசியில் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் பெகாசஸ் மென்பொருளால் பதிவு செய்ய முடியும். கைப்பேசியின் மைக்ரோபோன், கேமராவை அது தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். அவரது கைப்பேசி கேமராவை வைத்து அவரையே படம் எடுக்க முடியும்.

ஜி.பி.எஸ் மூலம் கைப்பேசிக்காரர் எங்கே போகிறார் வருகிறார், யார் யாரை சந்திக்கிறார் என்பதை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியும். அவரது கைபேசிக்கு வந்த குறுஞ் செய்திகளை வரிசையாக உருவி எடுக்க முடியும். பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல், கைப்பேசியில் உள்ள தொடர்பு எண்கள், அவ்வளவு ஏன், கைப்பேசிக்காரரின் விரல் ரேகை விழி பாப்பா போன்ற பயோமெட்ரிக் சமாச்சாரங்களையும் அப்படியே நகலெடுக்க முடியும்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அந்த கைபேசியின் உரிமையாளரை விட பெகாசஸ் மூலம் உளவு பார்ப்பவர் அந்த கைபேசியை அதிகம் செயல்பட வைக்க முடியும்.

பெகாசஸ் உளவு ஒட்டு கேட்பு வேலை குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இந்திய அரசு தெளிவாக மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை இல்லை என்பது குறிப் பிடத்தக்கது.

இதற்கு முன் ரஷிய பத்திரிகையாளர்களுக்கு ஒருமுறை ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற எச்சரிக்கைக் குறுஞ்செய்தியை அனுப்பியது. அதுகுறித்து அம்னெஸ்டி, சிட்டிசன் லேப் அமைப்புகள் நடத்திய புலனாய்வில், அந்த குறுஞ்செய்தி சரியான, நம்பகமான குறுஞ் செய்திதான் என்று தெரிய வந்தது.

அதனால்தான் ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை குறுஞ்செய்தி, இந்தமுறை இந்த அளவுக்கு அலப்பரையை உண்டாக்கி இருக்கிறது.

‘ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் நேரம் இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த குறுஞ் செய்தி அறிவிப்பு அபாயகரமானது’ என இணைய தள சுதந்திர அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான அபர் குப்தா கூறியுள்ளார்.

ஆப்பிள் குறுஞ்செய்தி வருவதற்கு சரியாக 4 நாட்களுக்கு முன் ஆப்பிள்நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒரு தீவிரமான எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இது பலரும் அறியாதது.

இதனிடையே ராகுல் காந்தி, ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை குறுஞ்செய்தியை வேறு விதமாக பார்த்துள்ளார். ‘மோடி அரசு, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை திசை திருப்பப் பார்க்கிறது’ என்று ராகுல் கண்டித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை குறுஞ்செய்தி, மோடி அரசின் திட்டமிட்ட திசை திருப்பல் நடவடிக்கையா? அல்லது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் என்ற சூழ்நிலையில் உண்மையிலேயே எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்க்கும் நடவடிக்கைதானா?

இதில் எது உண்மை என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...